Wednesday, April 15, 2009

அழிவின் கத்தி The Sword of the Doom 1965 (Spoiler Alert)

வெஸ்ட்ர்ன் ரசிகர்களுக்கு சப்பானிய சாமுராய் படங்களும் பிடிக்கும். நானும் விலக்கல்ல. அகிரோவின் படங்கள் மூலமாகத்தான் எனக்கும் சாமுராய் படங்கள் அறிமுகம். சப்பானின் கடந்த ஆயிரம் வருடங்களில் 800 வருடங்கள் சாமுராய்களின் ஆட்சி தான். அது முடிவுக்கு வந்தது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில். பல சாமுராய் படங்களின் கால கட்டமும் அது தான். இந்தப் படத்தின் காலக் கட்டமும் அதே தான் 1860. இந்தப் பட்த்தின் டிவிடி பாக்ஸிர்க்குள் ஒரு இரண்டு பக்க கதை முன்னுரை. ஜெஃப் ஒபிரையானின் (Geoffrey O'Brien) கட்டுரை நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

சாமுராயாக நடித்தவரை ஏதோ படத்தில் பார்த்த ஞாபகம். சட்டென்று என்ன படம் என்று மனது சொல்லி விட்டது. அகிராவின் யோஜிம்போ (Yojimbo) என்னும் படத்தின் வில்லன் தான் அவர். டாட்சுயா நகடாய் என்னும் வில்லாளன் தான் இந்தப் படத்தின் நாயகனும். யோஜிம்போ என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு படம். இந்தப் படத்தை திரும்ப ஒரு முறை பார்த்து குறித்துக் கொள்ள வேண்டும். fistfull of dollars என்று கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை உச்சத்தில் ஏத்திவிட்ட, மற்றும் Last man standing என்று புரூஸ் வில்லிஸ்ஸை படுகீழே இறக்கிவிட்ட படங்களின் மூலம் தான் இந்த யோஜிம்போ. இதன் ஒருவகையில் மட்டமான காப்பியாக விஜய்யின் கடைசி வெற்றிப்படமான போக்கிரியைக் கூடச் சொல்லலாம். இந்தப் படத்தினை ஒரு வகையில் உருவின உலகின் அத்துனைப் படங்களின்/கேம்ஸ்களின் லாபத்தில் ஒரு 2 சதவிகிதம் கணக்கிட்டாலும் ராய்ல்டி கணக்கு எங்கோ கொண்டு போய் விடும். சரி அந்தக் கொடுமையை விடுவோம்.

பொதுவாக திரைப்படங்கள் கதாநாயகன்/வில்லன் என்னும் இருமுனையில் ஒன்று நன்மையாகயும், தியாகமாகவும், அழகானதும், பாசமானதும், விவேகமாகவும், வெளிச்சமாகவும் மற்றொன்று தீமையாகவும், சுயநலமாகவும், கோரமாகவும், வெறுப்பானதும், இருளானதும் என இருந்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கும் பின் இறுதியில் நன்மை வெல்லும். அப்படி இல்லாவிட்டால் நாயக முனை மட்டும் இருந்து சூழலே எதிர் வேடம் எடுக்கும் இங்கேயும் அந்த நல்ல நாயக முனை தான் வெற்றி பெறும். இன்னமும் வெற்றிப் பெறக்கூடிய சூத்திரமாக இது இருந்தாலும், 60 களில் இரு முனையையும் கொஞ்சம் கொஞ்சமாக "களங்கப்" படுத்தி விளையாடும் விளையாட்டு தொடங்கியிருக்கும் என நினக்கின்றேன்.

தன்னுடைய கலையின் அதாவது கத்தி சுழற்றும் கலையின் உச்சத்தில் இருக்கும் ஒருவனின் தீமையின் பக்கமான சரிவு என கதையின் கரு தெரிந்து ஒரு வித ஆவலுடன் பார்க்கத் தொடங்கினேன். சமீப காலப்படங்கலில் இதுப் போல தீம்கள் நிறைய இருந்தாலும், 1965ல்
எடுத்ததால் ஒரு ஆர்வம்.

கருப்பு வெள்ளைப் படங்களின் முக்கிய பலமாக நிழலை உபயோகிக்கத் தெரிந்த வலுவான கேமிரா மேன் இருக்க வேண்டும். இந்தப் படத்திற்கும் இருக்கின்றார். படம் எடுக்கும் கலையை கருப்பு வெள்ளை கொண்டு எடுத்துக் கற்றுக் கொண்டு பின் கலருக்குச் செல்ல
வேண்டும் என நினைக்கின்றேன் (Spoiler Alert)


ஒரு முதியவருடன் ஒர் சிறு வயது பெண் சாமி கும்பிடுவதற்காக மலை ஏறிக் கொண்டிருக்கின்றாள்.




முதியவரை விட்டு அவள் தண்ணிர் எடுக்க விலக முதியவரோ அருகில் இருக்கும் ஒரு சிறு புத்த கோவிலில் குனிந்து தள்ளாமையுடன் வருத்தத்துடன் "என்னை மறு உலகிற்கு எடுத்துச் சென்றுவிடு இறைவா" என வேண்டிக் கொண்டிருக்கும் போது ஏய் இங்கே வா என ஒரு குரல் கேட்கிறது. முதியவர் திரும்பிப் பார்க்க ஒரு சாமுராய் தலையில் தொப்பி மறைத்திருக்க நிற்கிறான்.




முதியவர் அருகில் சொல்ல இப்படி திரும்பு என அதட்டல் குரல் கேட்டு ஒரு நொடியில் முதியவர் கீழே சரிகிறார் இரத்தக் காயத்துடன். சாமுராய் நானே கடவுள் என்பது போல் திரும்ப கத்தியை மின்னல் வேகத்தில் திரும்ப தன் பின்புறம் சொறுகிவிட்டு, தான் செய்தது கொண்டிருந்த ஓடல் பயிற்சியைத் தொடர்கிறான். இது தான் திரைக்கதையின் ஆரம்பம்.

பயிற்சியை முடித்து விட்டு நோயுற்றிருக்கும் தந்தையைச் சென்று பார்க்கின்றார் சாமுராய். தந்தையோ ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார். நடக்க இருக்கும் ஒரு கத்திச்சண்டைப் போட்டியில் யாரோ ஒருவனிடம் அவன் வேண்டுமென்றே தோற்க்க வேண்டுமாம். அப்படித் தோற்றால் அந்த யாரோ ஒருவனின் குடும்பம் பிழைக்கும். இவனுக்கோ திறமை இருப்பதால் கவலைப் படவேண்டியதில்லை என தந்தை நினைக்கின்றார். பதில் சொல்லாமல் இருக்கின்றான் சாமுராய். யாரோ ஒரு பெண் சாமுராயைப் பார்க்க வருகின்றாள். தன் கணவன் ஜெயிக்க வேண்டும் அதனால் சாமுராய் தோற்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றாள். சாமுராயோ போட்டியில் தோற்ப்பது என்பது ஒரு பெண் கற்பிழக்கும் நிலைக்குச் சமம் என்கின்றான். அவளே கற்பிழக்க சம்மதிப்பாளா எனவும் வினவுகின்றான். அந்தப் பெண்ணின் கணவனும் சாமுராயின் தந்தை சொன்ன ஆளும் ஒருவர் தான்.

அவள் சம்மதிக்க, கணவன் அவளை சந்தேகப்பட கூடவே தனக்குள்ளாக அவமானமும் பட, சண்டையில் தவறான அடி அடிக்க முற்பட்டு சாமுராயிடம் உயிரையும் இழக்கின்றான்.





1965ல் இந்த இடத்தில் சாமுராய் மேல் கடுமையான கோபம் ஏற்பட வாய்ப்புண்டா என என்னால் ஊகிக்க முடியவில்லை. உண்மையில் எனக்கு சாமுராய் மேல் வருத்தம் தான் வந்தது. சந்தேகம் வந்து நான் தேடிப் படித்த விமர்சனங்கள் எல்லாம் சாமுராயின் சாத்தான் இந்த இடத்தில் தான் ஆரம்பிற்கின்றார் போல் எழுதியிருந்தனர். இந்தப் படம் பார்த்த, அல்லது பார்க்காதவர்கள் "தயவு செய்து" பார்த்து, இங்கேயே வேறெங்கேயோ விளக்கி எழுதினால் நன்றாக இருக்கும்.

சாமுராய் விலகிச் செல்ல வேண்டிய நிலையில் இருக்க, கூடவே விதவையான அந்தப் பெண்ணையும் சேர்த்துக் கொண்டு, சாமுராய்கள் செல்வாக்கு இழக்கும் கால கட்டத்தில் அவன் சோத்துக்கும் மத்ததற்க்கும் அலைய வேண்டியதாகியது. செத்தவனின் தம்பி , இவனைப்
பழிவாங்க அலைகின்றான். இந்தச் சூழலில் முதலில் உயிரிழந்த முதியவரின் பேத்தியும் சேர சூழலைச் சுவாரசியப் படுத்த தேவையான முனைகள் சேர்ந்தன. படமும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது. செத்தவனின் தம்பிக்கு கத்திச் சண்டை சொல்லிக் கொடுப்பவர், அகிராவின்
ஆஸ்தான நாயகனான டோஷிரொ மிஃபூனே தான். அவரும் வியக்கும் படியான ஒரு புதிய வகையான கத்திச் சண்டை போடுபவர் தான் நம் சாமுராய்.



படத்தில் மூன்று முக்கியமான கத்திச் சண்டைகள்.இரண்டு நாம் சாமுராய் போடுவது மற்றொன்று டோஷிரா. இந்த மூன்று சண்டைகளின் ஆழமான தாக்கம் கில் பில் ( Kill Bill 1 & 2) ல் இருந்தது இப்பொழுது தான் எனக்குத் தெரிய வருகின்றது.













இது மிஃபூனேவுடைய சண்டைக் காட்சி you tubல் கிடைத்தது 4 நிமிடம் செலவழிக்க முடிந்தால் , கிளிக்கலாம். வேஸ்ட்டாக வாய்ப்பு குறைவு.


உண்மையில் இந்த கேளிக்கைத் துறைகளில் முக்கியமாக சினிமா/இசை போன்று ஒருவருக்கு மேல் இணைந்து பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி வரும் ஆக்கங்களின் மீதான காப்புரிமைச் சட்டம் என்பதெல்லாம் பேத்தல் என நினைக்கின்றேன். தெளிவாக எது எவனுடைய/எந்தக் குழுவினதுடைய "தனிப்பட்ட" முதல்முறையாக செய்த ஒன்று என "எதையும்" பிரிக்க முடியாது என தீவிர எண்ணம் வருகின்றது.

கடைசியில் ( நான் எதிர்பார்க்க வில்லை அது தான் கடைசி என) ஒரு சண்டை. சாமுராய் நிழல் மனிதர்களுடனும் , நிஜ மனிதர்களுடனும் ஆக்கிரோசமான் சண்டை போடுகின்றார். கூட்டம் கூட்டமாக வந்து "தலை"யிடம் வெட்டுப் பட்டுச் சாகின்றனர். "த"லைக்கும் வெட்டு உண்டு. தலையில் இருந்து இரத்தம் கண்களுக்கு வடிய துடைத்து சரிந்து துடைத்து சரிந்து கொளை கொளையாக வெட்டிச் சாக்கின்றார். வெளியில் இது தெரியாமல் , பழிவாங்க வேண்டி ஒரு தம்பி வேறு காத்துக் கொண்டிருக்கின்றார். வெட்டி வெட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு ஷாட்டில் படம் உறைந்து அப்படியே நிற்கின்றது.




பட்ச் காசடி அண்ட் சண்டான்ஸ் கிட் (Butch cassedy and sundance kid)ல் தான் கடைசி ஷாட்டில் படம் உறைந்து புதுமை செய்திருந்தார்கள் என நினைத்திருந்த எனக்கு அதிலும் மண்ணடி விழுந்தது. படம் இப்படி அரத பாதியில் நிற்கிறதே, இல்லை உண்மையில் படம் முடிந்து என் மரமண்டைக்குத் தான் உறைக்கவில்லையா என தேடிப் பார்த்தால், இது முதலில் முதல் பாகமாகத்தான் நினைத்து எடுக்கப் பட்டதாம். இரண்டாம் பாகத்தில் தன் கண்களை இழந்தும் சாமுராய் தீயப் பாதையில் மேலும் முழுக இருந்து, அந்த இரண்டாம் பாகம் எடுக்கப் படாமலே போய் விட்டதாம். எப்படியிருந்தாலும் சினிமாவினை ரசிப்பவர்கள் தவறவிடக் கூடாத படம் என்று தான் நான் சொல்வேன்.


மேலும் படிக்க

Thursday, April 09, 2009

Searchers - தேடுபவர்கள் - 1956 (Spoiler Alert)

சிறு வயதில் காமிக்ஸ் படிக்கும் காலத்தில் அறிமுகமான வெஸ்ட்ர்ன் கௌவ் பாய் கதைக் களன்கள் மீதான ஈர்ப்பு, இன்றளவும் தொடர்கின்றன. கௌவ் பாய் கதைக் களன்களின் முக்கியமாக அமெரிக்க இந்தியர்கள் வரும் களன்களில் உள்ளுர உறைந்திருக்கும் இனவெறி, ஆரம்ப காலங்களில் உறைக்காதது பல காலங்களுக்கு வருத்தத்தைத் தந்ததுண்டு. இருந்தாலும் இந்தக் கதைக் களன் மீதான ஆவல் குறையவில்லை தான்.

பல ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தை பார்த்திருந்த போது, இதனுள் உறைந்திருந்ததாக எனக்குப் பட்ட இனவெறி இந்தப் படத்தினை அவ்வளவாக அப்பொழுது இரசிக்க விடவில்லை. சில காலம் முன், இந்தப் படத்தைப் பற்றி எனக்குப் பிடித்த அமெரிக்க டைரக்டர்கள் இதைப் புகழ்ந்து பேசியதைப் படித்து , இந்தப் படத்தை திருப்பப் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். அகிரோ குரொசோவாவிற்கும் குரு எனப் பேசப்படுகின்ற இந்த்ப் படத்தின் டைரக்டர் ஜான் ஃபோர்ட் பல வெஸ்ட்ர்ன் படங்களை இயக்கி இருக்கின்றார். நான் பார்த்த இவரது சில படங்களில் அமெரிக்க இந்தியர்களை ஒரு கெட்ட காட்டுமிராண்டியாகவும், ஒரு துணிச்சலான, சொந்தமிருந்தும்/ இல்லாமலும் தனியாளான கௌபாய் ஒருவர் சாகசங்களால் "காட்டுமிராண்டி"களை வெல்லும் வகையான கதைக:ளாகத் தான் இருந்தது. ஒரு மேல் பார்வையில் இந்தப் படமும் அந்த வகைப் படமாகவே, பல வருடங்களுக்குமுன் பார்த்த போது எனக்கு இருந்தத என்பதையும் சொல்லியாக வேண்டும்

சில மாதங்களுக்கு முன், பராக் ஓபமா ஜெயித்த பிறகு பார்த்த The Birth of a nation என்னும் அப்பட்டமான இனவெறிப் படம் பார்த்த அனுபவம் தனியாக இருந்தது. சாதாரண மக்களிடையே உள்ளூர உறைந்திருக்கும் இனவெறி/சாதி வெறி/ஹிப்போகிரேசித் தனங்ளை ஒரு காலரீதியாக அந்தந்த காலகட்டங்களில் புகழடைந்த்ருக்கும் சின்மா படங்கள் (இலக்கியங்களையும் தான்) வாரியாக பார்க்கலாம் என நினைக்கின்றேன். ஒரு பழைய தமிழ்ப்படத்தில், ஒரு போலிஸ்காரர் ஒரு மிட்டாமிராசிடம் பேசும் வசனங்கள், ஒரே சட்டம் எந்த வகைகளில் மேல் மட்டத்திற்கும்/கீழ் மட்டத்திற்கும் பாய்ந்தது எனக் கோடி காட்டும். 90களில் கூட "எஜமான் காலடி மண்ணெடுத்து" எனப் பேசும் அப்பட்டமான ஜாதீய படங்களின் வெற்றி, உள்ளூர உறைந்திருக்கும் ஜாதி வெறியைத் தான் காட்டியது எனலாம். அது போலவே அமெரிக்க வெஸ்ட்ர்ன் படங்களின் ஆதிகால இனவெறிப் படங்களின் வெற்றி அந்தக் காலக்கட்டத்தின் உள்ளுரையாகக் கொள்ளலாம். 60, 70, 80களில் வந்த வெஸ்ட்டர்ன் படங்களில் அதுவும் வெற்றிபெற்ற படங்களின் போக்கு மாறிக்கொண்டிருப்பதை இந்த வகைப் படங்களை தொடர்ந்து பார்ப்போர் உணரலாம். அந்த வகைகளில் இந்தப் படமும் "அமெர்க்க இந்திய காட்டுமிராண்டித்" தனத்தைக் காட்டியதோடு நில்லாமல் வெள்ளையர்களின் காட்டிமிராண்டித்தனத்தை"யும்" காட்ட முனைந்ததாக , இப்பொழுது பார்த்த போது பட்டது. எல்லா வற்றையும் விட இந்தப் படத்தை இதன் காட்சிரூபத்திற்க்கும், உள்ளே இருக்கும் காட்சிமாந்தர்களை எந்தவகயில் உயிர் கொடுத்து அவர்களை உருவாக்கியிருக்கின்றார் அதுவும் 1956ல் என்பது தான் இந்தப் படத்தின் வெற்றி எனக் கொள்ளலாம் (Spoiler Alert)(
டெக்சாஸ் மாநிலம் - உள்நாட்டுப் போர் முடிந்து ஓரிரு வருடங்கள். முதல் காட்சியிலேயே ஒரு அற்புதமான நிழலுருவப் படம்.




பிற்காலங்களில் இந்த நிழலுருவப் படங்கள் ஒரு கிளிசேவாக மாறி அஜீர்ணப்பட்டிருந்தாலும், இந்தப் படத்தில் அதன் பழமைக்காக ரசிக்கலாம்.

எல்லைப்புரத்தில் குடியுருக்கும் ஒரு வீட்டில் கணவன் மனைவி, இரு பெண்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் இரு நாய்கள்.




அவர்கள் வீட்டிற்கு வருபவராக, உள்நாட்டுப் போரில் தோல்வியுற்ற கான்பெடரசிக் கார, எல்லைவீட்டு கணவனின் அண்ணனாக, (தம்பியாகக்கூட) கதாநாயகன் ஈதன் அறிமுகம்.




படத்தின் ஓரிரு காட்சியிலேயே இந்தக் கதாநாயகனின் கதாப்பாத்திரம் கோடுகாட்டப் படுகின்றது.




அடுத்த நாள் ஒரு பாதுகாவலர் கூட்டம் வந்து இந்தக் குடும்பத்து ஆண்களை துணைக்கு கூப்பிட வரும்போது, ஈதனுக்கும் அவனது அண்ணன் பொண்டாட்டிக்கும் இருக்கும்/ இருந்திருக்கும் உறவு கோடி காட்டப் படுகின்றது. ஈதனின் உடையை அண்ணன் பொண்டாட்டி கருனையுடன் வருடும் போதும்,





வெளியேறும் போது விடை கொடுக்கும் இடத்திலும் ,





இவர்களது உறவை, அந்தப் பாதுகாவலர் தலைவர் முகத்தில் காணலாம். இந்தப் படத்தில் இருக்கும் வெளிப்புறக் காட்சிகளின் தாக்கம், எவ்வளவோ படங்களில் வந்துவிட்டது.





பாதுகாவலர் கூட்டம் திரும்ப வீட்டிற்கு வரும்போது வீடு சின்னாபின்னப் படுத்தப்பட்டு, வீட்டின் இரு பெண்களும் அமெரிக்க இந்தியரால் தூக்கிச் செல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இந்தக் காட்சியின் தாக்கம் அப்படியே ஸ்டார்வார்ஸ்ஸில் உருவப் பட்டிருப்பது ஆச்சர்யம் இல்லை.




ஜார்ஜ் லூகாஸ்ஸிற்கும் ஜான் ஃபோர்ட் ஒரு ஆதர்சம் தான்.


அந்த இரு பெண்களையும் தேடிச் செல்வது தான் இந்தப் படத்தின் கதை. முதல் தேடலில் ஒரு கோட்டில் அமெரிக்க இந்தியர்களும் மறு கோட்டில் வெள்ளையர்களும் வரும் இந்தக் காட்சியும் பின்னால் பலவாறாக சுவீகாரம் செய்யப்பட்டது.



ஆரம்பத்திலேயே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு விட்டது தெரிந்து ஈதன் பழிவாங்கும் வெறியில் இருக்க, கூடவே 1/8 செரொக்கி என்னும் அமெரிக்க இந்திய ரத்தம் கொண்ட மார்டி என்னும் வளர்பு மகன் , உண்மையான தேடல் முயர்சியில், ஈதனுடன் இணைந்து கொள்கின்றான். மார்டிக்கு மற்றொரு பெண்ணான டெப்பியையாவது காப்பாற்றும் எண்ணம். நேர்வாக்கான பார்வையில் இந்த மார்டி கதாபாத்திரம் தான் கதாநயகன் போலவும் தோன்ற வைத்திருப்பதால் தான் , இந்தப் படத்தின் உள்ளுரை இனவெறி மட்டாக்கப்பட்டதாக நான் புரிந்து கொள்கின்றேன்.



இரண்டு வருட காலம் பனிக்காலத்தையும் சேர்த்து சுத்தி, ஊருக்கு வருகின்றனர் மார்டியும் ஈதனும். அங்கே இருக்கும் ஒரு வீட்டில் தான் மார்டியுன் காதலி.



துடிப்பான பெண்ணின் காதலையும்



சற்று தள்ளி வைத்துவிட்டி திரும்ப ஒரு துப்பு கிடைத்து கிளம்பும் ஈதனுடன் சேர்ந்து கொள்கின்றான் மார்ட்டி. அமெர்க்க இந்தியர்களுடன் வாழ்ந்த டெப்பியையும் கொல்லக்கூடிய வனாக வெறியேறிவிட்ட ஈதனுடன், டெப்பியை காப்பாற்றவே ஈதனுடன் கிளம்புவதாக காதலியிடம் சொல்லிச் செல்கின்றான் மார்ட்டி.

பின் ஒருவாறாக அம்ரிக்க இந்தியக் கூட்டத்தை கண்டடைகின்றனர்.



கடத்திச் சென்ற ஸ்கார் (வெட்டுக்காயம்) என்னும்அமெரிக்க இந்தியனுடன் வியாபாரம் பேசுவதாக அமர்ந்து வேவு பார்கின்றனர்.



அமெரிக்க இந்தியர்கள் வெள்ளையர்களைப் பிடித்தால் அவர்கள் தலையின் தோலை
முடியுடன் வெட்டி வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்ததை காட்டி இவர்களை மிரட்ட ஸ்கார், அந்த வெட்டிய முடிகளை இவர்களிடம் காட்ட தன் ஒரு மனைவியை ஏவுகின்றான்.




அப்பொழுது தான் ஈதனும் மார்டியும் டெப்பியை காண்கின்றனர்.




பின் அமெரிக்க படையுடன், இந்த அமெர்க்க இந்தியக் குடியிருப்பை தும்சம் பண்ணத் திட்டம் போட, மார்டி டெப்பியை காப்பாற்ற அவகாசம் கேட்டுச் செல்கின்றான்.




மார்டி டெப்பியைக் காப்பாற்ற, அமெரிக்கப் படை குடியிருப்பை தும்சம் செய்கின்றது. பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஈதனும் , ஸ்காரின் தலைமுடியை



வெட்டுவதாக காட்சியமைத்து இருந்தது "பழி வாங்கும்" உணர்ச்சியை தூக்கிக் காட்டவா அல்லது அமெரிக்க வெள்ளையினத்தின் "காட்டுமிராண்டித்தனத்தையும் "கோடு" காட்டவா என்பது விவாதத்திற்கு உரியது தான்.பின் டெப்பியையும் ஈதன் துரத்துகின்றார், மார்ட்டி தடுத்தும் கேட்காமல்.




அவளைத் துரத்திச் சென்று தூக்கி, மனம் மாறியவராக "வீட்டிற்கு போகலாம்" எனக் கூறும் போது தியேட்டர்களில் கைத்தட்டல் பிளந்திருக்கலாம்.




பின் ஊருக்கு வந்து டெப்பியைச் சேர்த்தவுடன், எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க செல்கின்றனர், ஈதனை விட்டு விட்டு. தனியாளாக




திரும்ப எங்கோ செல்வதுடன் படமும் முடிந்துவிடுகின்றது. படம் பார்த்து முடிந்தவுடன் இதன் அற்புதமான வெளிப்புறக் காட்சிகள் மனதில் இருந்ததைவிட உள்நாட்டுப் போர் அப்பொழுது தான் முடிந்ததாக காட்டப்படும் இந்தப் படத்தில் மருந்துக்கும் கருப்பினத்தவரை காண்பிக்காதது ஒருவகை உறுத்தலாக இருந்தது எனலாம். சினிமா மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புவபர்களுக்கு , இந்தப் படத்தில் பல பாடங்கள் சொல்லப் பட்டிருக்கின்றது. தவறவிடக் கூடாத படம்


மேலும் படிக்க

Saturday, February 21, 2009

நான்(ஏ) கடவுள் அல்லது என்னுள் கடவுள் இல்லை

படங்கள் பார்ப்பது குறைந்து விட்டது. நேரமில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் பல படங்களை பாதிக்கு மேல் பார்க்க முடிவதில்லை. இதற்கு என் ரசனை கன்னாபின்னாவென்று ஏறி, தரப்படங்கள் மட்டுமே பார்க்கும் கலை நாசி என்றேல்லாம் ஆகிவிட வில்லை. நீலப்படங்கள் அபரிமிதமாக கிடைத்து கேள்வி கேட்ப்பார் இல்லாது பார்க்கும் போது, ஒரு சில பல தேவைகளுக்குப் பிறகு அந்தப் படங்களில் சுவாரசியம் சுருங்கி(pun intended) எந்த இடத்தில் நிறுத்தினோம் என்னும் கவலை இல்லாமல் நிறுத்தி விட்டு தூங்கிய கால கட்டம் போல், இப்பொழுது முக்கால்வாசிப் படங்களும் அந்த நிலையை அடைந்து விட்டன. தியேட்டருக்குப் போவது சிறுவர் படங்களுக்கும், மிகப் பெரிய திரைத் தேவை இருக்கும் "பிரம்மாணடப்" படங்களுக்கு என ஆகிவிட்டது வேறு, வீட்டு டீவி மூலமாகப் பார்க்கும் படங்களுக்கு இந்த நிலையை அதிகரிக்கச் செய்து விட்டது. ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா மொழிப்படங்களுக்கும் இது தான் நிலையாகிவிட்டது. இந்த அதிவேக நாட்களில் என்னை முழுமையாக பார்க்க வைக்கின்ற படங்களை எளிமைப் படுத்திவிடலாம். Feel good படமா? விழுந்து விடுகின்றேன் - எளிதில். முழு வேக எங்கேயும் பிசிரோ, பிரோக்கோ இல்லாமல் ரவண்டு கட்டி அடிக்கும் அதிவேகப் படமா ? பாங்க் அடிக்கும், தலைக்குள் சுனாவுடனோ அல்லது புணாவுடனோ அலையும் டீன் எஜ் கொண்டாட்டமா, எந்தளவிற்க்கு வெக்கமில்லாத படமோ அந்தளவிற்கு அந்த படங்களை வெட்கமில்லாமல் பார்த்து விடுகின்றேன்மற்றபடி இந்தக் கலைப் அல்லது sophiscated படங்கள் என்னும் போர்வையில் வரும் படங்களிடம் தான் நான் பாடுபடுகின்றேன். பல சமயங்களில் இந்த வகைப் படங்களின் டைரக்டர்களின் புத்திசாலித்தன அதே சமயம் போலித்தனமான கலையார்வங்கள், அந்தப் படங்கள் மீதான அஜீர்னத்தை ஏற்படுத்தி விடுகின்றன. 80களில் இருந்து தமிழகத்திலும் இந்தியாவிலும் பெத்த பேரடைந்த டைரக்டர்களின் படங்கள் எந்தளவிற்க்கு ஹாலிவிட் படங்களினின் ஆதிக்கத்தில் இருந்து வந்தன என்பதை அதன் மூலப் படங்களை எதிர்பாராமல் பார்க்க நேர்ந்த போது அடைந்த துக்கம் சொல்லி மாளாது. once upon a time in america என்னும் படத்தில் வரும் கடத்தல் காட்சியில் அடைந்த சோகம், இன்னமும் என்னால் மணிரத்தினத்தின் படங்களை ரசிக்க விடுவதில்லை. அதற்கப்புறம் அவர் புத்திசாலித்தனமாக அடித்த திருட்டுக்களை காணும் போது வரும் கோபம் சொல்லி மாளாது. மணிரத்தினத்தின் பலத்த ரசிகையான என் மனைவியை, அவர் காப்பியடித்த சீன்களின் ஒரிஜினல்களை காட்டிக் காட்டி, மணிரத்தினத்தின் மீது அவருக்கும் வெறுப்பு ஏற்பட நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும் சில்வர் புல்லட் என்னும் படத்தில் கேவியழுகும் ஒரு நடிகனின் அதே நடிப்பை நாயகனில் நகல் எடுத்திருந்த கமலின் மீதான ஆர்வம் அப்பொழுதே அடிவாங்கியது. அதற்கு மேல் அவர் அவ்வை, தெனாலி, மகளிர் மட்டும் போன்ற அப்பட்ட காப்பி தவிர்த்து, அவர் காட்சி ரீதியாக சாப்பிடும் படங்களைப் பார்த்து வந்த வெறுப்பு ம்ஹூம். ஜெர்ரி லூயிஸ்ஸைப் பார்த்த போது நாகேசின் மீது வந்த கோபம் இன்னமும் குறையவில்லை. அதே போல் சைக்கோ, சம்மர் ஆஃப் 67 மற்றும் மிஸரி படங்களை பார்த்த போது பாலு மகேந்திரா மேல் வந்த கோபம் கொஞ்ச நஞ்சமில்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏமாற்றப் படும்போது வரும் சோகத்தை விட ஒரு சோகம் வேறு எதுவும் இல்லை. சிட்டி ஆப் காட் படத்தின் சில காட்சிகளை அப்பட்டமாகக் கொண்ட ஸ்லம்டாக் மில்லியினர் என்னும் படம் ஆஸ்கார் பட்டியலில் முதலில் இருப்பதைப் போல ஒரு கொடுமை கிடையாது. ஒரு சில காட்சி தானே, அப்பட்டமான முழு காப்பி இல்லையே என்னும் சமாதானத்தையெல்லாம் , அந்தப் படங்களுக்கு அல்லது நடிகர்களுக்கு அல்லது டைரக்டர்களுக்கு கிடைக்கும் நேர்மையற்ற அதிஅங்கீகாரம் போக்கி விடுகின்றது. தொழில் நுட்பத்தை சுவீகரிக்கலாம் ஆனால் creativityஐ நகல் செய்வது கேவலமாக இருக்கின்றது.

அந்தச் சூழலில் வெளிச்சாயம் இல்லாமல் எடுக்கும் சில டைரக்டர்களின் தமிழ் படங்கள் தான் ஆச்சர்யம் தரவைக்கக் கூடுயவை. அப்படிப்பட்ட படம் தான் சமீபத்தில் பார்த்த நான் கடவுள். பாலாவின் எந்தப் படங்களிலும், வேறெங்கோ கொண்ட சாயல் இது வரையில்லை எனக்குத் தெரிந்து. சில விமர்சனக் கட்டுரைகளை படித்திருந்தாலும், வலதுசாரி சிந்தனைக்கார ஜெமோவின் வசனத்தில் வந்த படம் என்பதாலும் ஒரு மனச்சார்புடன் பார்க்க ஆரம்பித்தாலும், படம் இயங்கிய விதம் மனதை வசீகரித்து வார நடுவில் இருந்தாலும் என் தூக்க நேரத்தை தாண்டி படம் பார்க்க வைத்து விட்டது. இது கடந்த 5 அல்லது 6 வருடங்களில் நடக்காத ஒன்று. பாலாவிற்கும் மனநிலை தவறிய கதாபாத்திரத்திற்கும் இருக்கும் ஈர்ப்பு என்ன என்பது கவலைப்பட வேண்டிய ஒன்றா எனத் தெரியவில்லை. இருந்தாலும் அந்த மனநிலை தவறிய கதாபாத்திரங்களை கதையின் நடுவில் வைத்து சுழன்று கட்டியடிக்கும் அவறின் திறமை சுவாரசியமானது. அவரது முதல் படத்தில் இருந்து இந்தப் படம் வரையில் அந்த வகை கதாபாத்திரங்களை மையமாக வைத்து அதே சமயம் அந்த மையத்தைச் சுழன்று இயங்கும் கதாபாத்திரங்களின் தன்மை ஒவ்வொரு படத்திற்கும் சவாலாக மேலெழுவது பாலா தனக்குத் தானே விதித்துக் கொண்ட சவாலா தெரியவில்லை. மேலும் மனப்பிறழ்வு கொண்ட நபர்களின் மனப்பிறழ்வுக்கான காரணங்களும் படிப்படியாக அதிகரிக்கிறது. முதல் படத்தில் மனப்பிறழ்வு தலையில் ஏற்படும் காயத்தால் வருவது கூடவே அந்தப்படத்தில் சுழன்று இயங்கும் கதாபாத்திரங்களாக அன்பான ஆனால் சாதாரணமான குடும்ப நபர்கள்.
அடுத்தப் படத்தில், கொடூரமான தந்தைக்கும், அன்பான தாய்க்கும் பிறந்ததாலும் தந்தையின் கொடுமை தாளாமல் மனபிறழ்வு கொள்ளும் கதாபாத்திர மையம் அந்த மையத்தைச் சுற்றி சோகத்தில் விக்கித்துப் போன அம்மா மற்றும் நிராதரவற்ர தங்கை ஒருபுறமும், வசீகரமான தாதா மறுபுறம்.
அதற்கு அடுத்த படத்திலோ பிணங்களை தினப்படி எறிக்கும் சூழலில் வாழ்வதால் வரும் மனப்பிறழ்வு கொண்ட மையம், அந்த மையத்தைச் சுற்றி வசீகர திருடனான உடன்பிறவா சகோதரனின் அன்பு ஒரு புறமும், லாப நோக்கில்லாமல் கூட வாழ்வதால் மட்டுமே உண்டான கஞ்சா அழகியின் உயிர்ப்பான காதல் ஒரு புறம்.
இந்தப் படத்திலோ மனப்பிறழ்வு கொண்ட அதே சமயம் மதத்தால் அந்த மனப்பிறழ்வையே தெய்வாம்சமாக காட்டக்கூடிய கதை மைய்யம். அந்த மைய்யத்திற்கு சவாலான, ஒருவித விளிம்பு நிலையையும் தாண்டிய நிலையில் இருக்கும் நிராதரவற்ற கூட்டம் அந்த மைய்யத்தைச் சுற்றி. நிராதரவற்றவர்களை காட்டும் காட்சிகளின் நிஜத்தன்மை, இதே சூழலைச் சித்தரித்த ஸ்லம்டாக் படத்தின் காட்சிகளின் நிஜத்தன்மையைவிட பலமடங்கு அதிகம் எனலாம். கடைசியில் சில் காட்சிகளின் எடிட்டிங்கில் குறை யிருந்தாலும் இந்தச் சூழல் உள்ள கதைக்களனை கொண்டு சென்ற விதம் அருமை. மனநிலை தவறியவனை அகோரியாக காட்டும் தைரியம் வேண்டும். அவன் கஞ்சா நிந்தனை கெட்டதால் செய்யும் கொலைகளும், அந்தக் கொலையை விசாரனை செய்யும் நீதிமன்றத்தின் கூத்தும் (முக்கியமாக அந்த அகோரி அமர்ந்திருக்கும் ஸ்டைல்) ஒரு புறம் இருந்தாலும்(இது என் பார்வை), இந்தப் படத்தையே மறுபுறத்திலிருந்து அதாவது, இந்த அகோரிகள் உண்மையிலேயே அதிபுருடர்கள்(pun intended) அவர்கள் நல்லதும் கெட்டதும் செய்யும் அதிகாரம் கொண்டவர்கள் மற்றும் இந்தப் பிச்சைக்காரர்கள் தன் கர்மக்கடன் கழிக்க பிறந்தவர்கள் ஆகவே அவர்கள் எவ்வளவு சீக்கிரம் கடன் கழிக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு சீக்கிரம் மோட்சம் கூடவே இருக்கும் நேரத்தை களித்து இருந்தால் இன்னமும் நல்லது என நம்புவோர் பார்வையிலும் சிறிது இழுத்துப்பிடித்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.

பி.கு - இந்த இழுத்துப்பிடித்தல் தான் ஜெமோவைத் திருடனுக்கு தேள்கொட்டியது போல் ஆக்கியதா? அண்னன் மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் எழுதும் படத்தினைப் பற்றிய கட்டுரைகள் இந்தப் படத்தினை ரசிக்க மேலும் ஒரு பரிமாணமாக எனக்கு இருந்தது


மேலும் படிக்க

Monday, July 30, 2007

Wild Strawberries / காட்டுப் பழங்கள் அல்லது காட்டு ஸ்ட்ராபெரீஸ்

Wild Strawberries / காட்டுப் பழங்கள் அல்லது காட்டு ஸ்ட்ராபெரீஸ்
Bergman, ingmar / பெர்க்மென், இங்மார்

எனக்கு இங்ரிட் பெர்க்மான் தான் முதலில் அறிமுகம். காஸாபிளாங்கில் பார்த்து கிறங்கி இருந்த காலம். இவர் நடித்த படங்களைத் துரத்தி துரத்திப் பார்த்தேன். ஹிட்ச்காக்கின் படமொன்றில் கலக்கியிருந்தார்.படம் மறந்து விட்டது (சில நடிகைகள் ஏனோ சில விதத்தில் பார்த்த உடன் கவர்வார்கள் காரணம் புரியாது.

மதுபாலா போலோ அல்லது பத்மினி போல ஒரு வசீகரம் - முகத்தில்.









அதுவும் கருப்பு வெள்ளைப் படங்களில் இவர்களது வசீகரம் அதிகமாக இருக்கும். ஒரு "கலர்" படத்தில் இங்ரிடின் முக வசீகரம் அவ்வளவாக கவர வில்லை- வயதானதால் கூட இருக்கக்கூடும். அந்த சமயத்தில் என்க்கு இன்கிர்ட்டின் கணவராக இங்மார் அறிமுகம். தூய திரைப்பட ரசிகர்களுக்கு இந்த வரிகள் அதிர்சியாக இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது? முதலில் பார்த்தது செவந்த் சீல் என்னும் படம். அதனது இருமையான களம் மற்றும் தத்துவார்த்த கூறுகள் படத்தை மிகவும் ரசிக வைத்த ஒன்று. வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் என்னும் படமும் என்னைக் கவர்ந்த படம். இதைப் பார்த்து ஓரிரு வருடங்கள் இருக்கலாம். இவர் இன்று இறந்து போவார் என்று தெரிந்து இருந்தால், இரண்டு வாரங்களாக, ஒரு முறை renew (மீள்பதிவா?) செய்தும் பார்க்க முடியாமல், கடந்த வெள்ளியன்று திருப்பிக் கொடுத்த(கொடுத்தாக வேண்டிய) Silence என்னும் படத்தைப் பார்த்து அதைப் பற்றி எழுதியிர்க்கலாம். எனவே என்னிடம் இருந்த வைல்ட் ஸ்ட்ராபெரீஸ்/ செவந்த் சீல் என்னும் இரண்டு படங்களை எதை திரும்பப் பார்ப்பது என ஒரு முடிவெடுத்து, பார்த்து இப்பொழுது ஒரு திரைப் பார்வை. ஒரு சினிமா ரசிகனாக இருந்து இதைக் கூடச் செய்யாவிட்டால் ? லிவிங் ஸ்மைல் என்னுடைய திரைப் பார்வைகளை, முழுமையாக இல்லை, பல இடங்கள் தொடர்பும் இல்லை என ஒரு நண்பியின் விமர்சனமாக சொல்லியிருந்தார். எனக்கு எழுதவராது என்றாலும், கொஞ்சம் திருத்தமாக எழுதப் பார்க்கின்றேன். கதைக் காட்சிகளை விளக்காமல், திரைப்பார்வை செய்வது எப்படி என்பது இன்னமும் கை வரவில்லை; எழுதுவதெல்ல்லாம் எனக்கே வீணாயிருப்பதால், காட்சிகளை விளக்கியே எழுதப் பார்க்கின்றேன்.

இனி,

wild straberries ஒரு நினைவோடை கதையமைப்பு கொண்டது. வயதான, ஒரு "படித்த" , "வெளி" வாழ்வின் சிகரங்களைத் தொட்ட ஒரு நபரின் பின்னோக்கிய நினைவுச் சிதறல்கள் தான் இப்படம். கருப்பு வெள்ளைப் படம். இங்மார் பெர்க்மானின் படங்கள் , தன்மயமான கருத்தை, பார்வையைக், காட்டும் படங்கள்; பல சமயங்களில் நம்மையே "உள்ளே" பார்க்க வைக்கும் அளவு உக்கிரம் கொண்டவைகள். ஒரு மத்திய வயதை எட்டிய என்னையே, பல சமயம் உள்நோக்கிப் போக வைத்தது, இந்தக் கதையின் சில காட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி பின்னப்பட்ட வசனங்கள்; மிக எளிதாக மொழி மாற்றம் செய்யப் பட்ட சப்டைட்டில்கள், மிகவும் உதவியாக இருந்தது. இந்தப் படம் 1957ல் வந்தது, ஆனால் கதையோ இந்தக் காலத்திற்கும் பொறுந்துவது பெர்க்மானின் சிறப்பா அல்லது "வெளி" உலகில் அடைந்த மாற்றங்கள் போல அல்லாது உறைந்து கிடக்கும் "உள்" உலகமா? வியப்பாக இருக்கின்றது. இல்லாவிட்டால், 57ல் இருந்த ஸ்வீடிஸ் நடுத்தர வர்க்க மனநிலைக்கு , தமிழ் சூழலில் நாம் இப்பொழுது தான் வருகின்றோமா? மௌனியின் கதைகளின் சூழல் , இந்த மாதிரியான தன்மயப் பட்டதாக இருக்கும் (நான் படித்த சில கதைகளில்) ஆனால், அதில் இருந்த ஒரு குழம்பிய நடையோ/ குழம்பிய கருத்து மையமோ, இதில் இல்லாததாக எனக்குப் பட்டது; ஒரு நல்ல சிறுகதையைப் படித்த அனுபவம் எனக்கு இதில் கிடைத்தது எனலாம்.


முதல் காட்சியில் ஒரு வயதானவர் , தன் அலுவலக அறையில் உட்கார்ந்து இருக்கின்றார்; ஒரு நாய் அவரது காலடியில்;






கருப்பு வெள்ளைப் படங்களின் காமிராமேன் தன் பலத்தைக் காட்டக் கூடிய லைட்டிங் அமைப்பு; வெளிச்சமும் நிழலும் விழ வேண்டிய இடத்தில் மட்டும் விழுந்து காட்சியை அழகாக்கிக் கொண்டிருந்தது. வயதானவர்(78 வயது) தன்னைப் பற்றிச் சொல்லுகின்றார் அவரது மேஜையில் இருக்கும் புகைப்படங்களைக் காட்டியபடி; தான் ஒரு வேதாந்தி ( pedant) என்று உணர்ந்து சொல்லி தன்னுடைய 96 வயதில் இருக்கும் தன் தாயைப் பற்றிச் சொல்லி, தன் மனைவி பல வருடங்கள் முன் இறந்ததைச் சொல்லுகின்றார். தான் நாளை ஓரிடத்தில் கௌரவிக்கப் போவதையும் சொல்கின்றார்; பின் அவரது தூக்கத்தில் ஒரு கனவு - இந்தப் படத்தில் கனவும், அதில் வருபவைகளும் கதைக் கோர்வைக்கு முக்கியமாக இருப்பது. வயதானவர்களுக்கு வரும் செனிலிட்டி பற்றியும், அதன் ஆவேசமான Alzheimer's syndrome பற்றியும் அனுபவக் கதைக்களை கேட்டு பார்த்ததிலிருந்து அதன் உக்கிரத்தை நினைத்து ஒரு பயம். கனவுகளும் நினைவுகளும் பின்னிப் பிணந்து எதில் இருக்கின்றோம் எனத் தெரியாமல் இருக்கும் இரு வயதானவர்களைப் பற்றி , வெவ்வேறு மக்களிடம் ( ஒருவர் தமிழ்நாட்டில் வசிப்பவர்/ மற்றொருவர் பிலடெல்பியாவில் வசிக்கும் வெள்ளையர்) வெகு சமீபத்தில் அறிந்ததிலிருந்து, அதன் மீது ஒரு பயம்; இந்த வியாதி தனக்கு இருப்பது என உணரக் கூட முடியாமல் , மேலும் மேலும் மோசமாகக் கூடிய நிலை, வயிற்றில் ஒரு பயத்தை தெளிக்கும்; பெர்க்மான் செனிலிட்டியையும் / அல்கெமிர் சிண்ட்ரொம்யும் கலந்து இருக்க மாட்டர் என எனக்கு நான் முடிவு செய்து கொண்டு படம் பார்த்தேன்; அந்தப் பரிமானம் , இந்தப் படத்தை பார்க்கும் அனுபவத்தை சற்று கூட்டியிருக்கலாம். ஆனால் நான் தீர்க்கமாக முடிவெடுத்து அந்த பரிமானத்தைத் தவிர்த்தே இந்தப் படத்தைப் பார்த்தேன்


திரும்ப கனவுக்கு வருவோம்; ஒரு மதிய வேளை ; நல்ல வெயில் ; யாருமற்ற ஒரு தெரு ; தூரத்து கடிகாரத்தில் முள் எதுவும் இல்லை; இவர் நின்று பார்க்கின்றார் ;



தனது பாக்கெட் கடிகாரத்தை எடுத்துப் பார்க்கின்றார்; அதிலும் முள் இல்லை; என்ன அர்த்தம்? காலம் நின்று விட்டதா? தூரத்தில் ஒரு உருவம்; இவர் அருகில் சென்று பார்க்கின்றார் ; அந்த உருவம் செத்து விழுகின்றது ; சற்று தூரத்தில் ஒரு ரதம் ; இவரருகே வந்தவுடன் அந்த ரதம் நிதானமிழந்து, ஒரு சவப் பெட்டியை கீழே விட்டுச் செல்லுகின்றது; சவப்பெட்டியில் ஒரு கை; இவர் அருகில் சென்று அந்தக் கையைப் பிடிக்கின்றார்; பிணம் வெளிவருகின்றது ; இவர் பார்க்கின்றார் ; அது இவரே தான் ; இவரது முகமும் சவக்களை கொள்கின்றது. வயதானவர்களின் சாவைப் பற்றிய பயத்தை இதைவிட சிறப்பாக சொல்லமுடியுமா தெரியவில்லை; சமீபகால இந்தியப் பயணத்தின் போது, காலம் வேட்டையாடிக் கொண்டிருப்பதை உணர வைக்கும், என் அப்பாவின் முகத்தில் இருக்கும் அந்த ஒரு பாவனை, சாவு பயம் தானா? சிறுவயது பயணங்களில் நான் விடைபெறும் போது என் கண்ணை அந்தளவு அவர் உற்று நோக்கியதாக நினைவில்லை; இபோழுது என் கண்ணை உறைய வைப்பது போல் இருக்கும் அவரது கண்களில் தெரியும் அந்தத் தொனி சொல்வது தான் என்ன?


தடாரென்று எழுந்து, தூங்கிக் கொண்டிருக்கும் தன் வீட்டு வேலைக்காரியை எழுப்பி, தன்னுடைய வெளியூர் பயனத்திற்கு உதவுமாறு சொல்லுகின்றார்;
இவருக்கும் இவரது வீட்டு வேலைக்காரிக்கும் இடையில் நடக்கும் sparringகள் மிகவும் ரசிப்பூட்டுபவை; சற்று உலர்ந்து இருக்கும் கதை களனுக்கு, இந்த வாக்குவாதங்கள் ஒரு நல்ல bufferதான். விமான பயந்திற்கு ஆர்வமாக இருக்கும் வேலைகாரியிடம் , தான் காரிலேயே செல்வதாகக் சொல்லி கிளம்புகின்றார். அழகான அவரது மருமகளும், அவருடன் பயணிப்பதாகச் சொல்லி வருகின்றார். மகனும் மருமகளும் பிரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நேரம் அது. நகரத்தில் இருந்து கார் நகருகின்றது.




காரில் மருமகளும் மாமனாரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்; மாமனார் எந்தளவு ஒரு உருகிப் போன மனம் படைத்தவர் என விமர்சிக்கின்றார்; பெற்ற பிள்ளைக்கு படிக்க வைத்த செலவை கணக்கிட்டு கேட்பதைப் பற்றியும், பொருள் சம்பந்தமான கஷ்டங்கள் எல்லாம் பொருட்படுத்த தக்கவைகள் என்னும் அவரது வறட்டு வேதாந்த்தை விளக்கி எதனால் அவரது மகனும் மருமகளும் அவரை வெறுக்கின்றனர் என பட்டென்று போட்டு உடைக்கின்றாள்; இசாக்கிற்கு முகம் மாறுகின்றது. விரைவில் ஒரிடத்தில் காரை திருப்பி ஒரு ஒதுக்குப் புறமான இடத்திற்குச் செல்கின்றார். மருமகளிடம் , இந்த இடம் தன்னுடைய சிறு வயதில் கோடை காலங்களில் தன் உறவினர்களுடன் வரும் இடம் என்று சொல்லி ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து நினைவலையை வீசுகின்றார். அந்த இடத்தில் ஒரு அழகி சாரா என்பவள் பெரீஸ் பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றாள்; இசாக்கின் தம்பி, இக்ரீட் அங்கு வந்து தன் அத்தை மகளோ/மாமன் மகளோ (ஸ்வீடனின் கசின் காதல்கள் எனக்கு ஆச்சர்யம் தான்)அவளிடம் காதல் தூது விடுகின்றான் ; ஒரு நிலையில் முத்தம் கூட அடித்து விடுகின்றான்; ஒரு கணத்தில் இணங்கி,




பின் வெடித்து அழுகின்றாள்; அதன் போது அவள் , இசாக்கிடம் இருக்கும் தன் விருப்பத்தையும் சொல்லி அழுகின்றாள்; படித்த இசாக்கும் பிடித்திருக்னின்றது விளையாட்டுப் பிள்ளை இக்ரிடும் பிடித்திருக்கின்றது - என்ன செய்ய? ந்னைவோடையில் , இசாக் இதை ரசித்துப் பார்க்கின்றார். நினைவோடை சமயத்தில் இசாக் , தன் தற்கால உருவத்துடன் படத்தில் இயந்து கொள்ளுகின்றார்; 1957ல் அது ஒரு மிகப்பெரிய புதுமையாக இருந்திருக்கலாம்.


சட்டென்று நிகழ்காலத்தில் ஒரு இளம் பெண் இவருடன் வந்து பேசுகின்றாள் ; துடிப்பான பெண் ; தன்னுடைய துடிப்புத்தனத்திற்கு தன்னுடைய கன்னித் தன்மையை காரணக் காட்டுகின்றால் பின்னொரு சமயம். தான் இட்டாலிக்கி செல்லவிருப்பதாகவும் , இசாக்கிடன் பயணம் செய்யலாம என கேட்டு அவரது சம்மதம் வாங்கி, பின் தன்னுடன் வந்திருக்கும் இரு ஆண் நண்பர்களை காட்டுகின்றாள்.






ஒருவன் இசாக்கைப் போன்ற வேதாந்தி, அந்த இருமாப்பும் தெரிகின்றது. மற்றவன் ஒரு சமய போதகன்; அவனின் எளிமையும் தெரிகின்றது; சாரா என்ற இசாக்கின் முன்னாள் காதலிப் பெயர் கொண்ட இவளுக்கும் , தன் இரு நண்பர்களைப் பிடிக்கின்றது வெவ்வேறு காரணங்களுக்கு, பழைய சாராவைப் போலவே.

இதற்கிடையில் சதா வாக்குவாதத்தில் இருக்கும் ஒரு கணவன் மனைவி, இவர்களுடன் பயணிக்க நேர்கின்றது - அந்தப் பயணிகளின் , dysfunctional attidute, இந்த வண்டியில் வருபவர்களை உறைய வைக்கின்றது.





பின்னால் மாமனார் தன்னுடைய வாழ்க்கை அவர்களைப் போன்று தான் இருந்தது என்கின்றார்; மருமகளோ தான் அவ்வாறு ஆகிவிடக் கூடாது என்பதற்காகக்தான் , மணவிலக்கு பெற எண்ணியதாக சொல்கின்றார். மருமகள், அவர்களை நடு ரோட்டில் இறக்கிவிடச் சொல்ல , பயணம் , அவர்கள் இல்லாமல் செல்கின்றது.

ஓரிடத்தில் , இசாக்கும் மருமகளும், இசாக்கின் 96 வயது தாயைக் காணச் செல்லுகின்றார். இசாக்கின் மருமகளை, தன் மருமகள் என தவறாக நினைத்து அல்லது செனிலிட்டியில் (Senility), பழைய காண்டுடன் பேசுகின்றார். மாமியார் மருமகள் பிரச்சனை கால இட பரிமாணங்களை இந்தளவிற்கு மீறியிருக்கும் என் இருப்பது ஆச்சர்யம் தான்; 96 வயது தாய் சாதாரணமாக(?) பேசப் பேச, மருமகள் முகம் இறுகுகின்றது. பின்னால் , இசாக்கின் தாயின் பேச்சில் இருக்கும் தனிமைக் கொடுமையும், அதனால் இருகிப் போயிருக்கும் அவரது சிந்தனைகளும், தனது கணவனுள்ளும் ஊறியிர்க்கும் ஆச்சர்யத்தை வெளிப்படித்துவார்.





கூட்டத்துடன் இருக்கும் வாய்ப்பிருந்தும் தனிப்பட்டு போவது , இந்த வேதாந்திகளின் வாழ்வு முறையோ என சந்தேகித்திருக்கின்றேன். இந்தப் படம் "அதையே" இன்னமும் சிறப்பாகக் காட்டும் போது ஆச்சர்யம் தான்.

இசாக் மேலும் கனவுகள் காண்கின்றார்; தன் மனைவி எப்போதோ , தன் தம்பியிடமே (அது போல் தான் இருந்தது) சோரம் போய், அதை தன் கணவனிடம் சொன்னால், தன் கணவனின் வேதாந்த மனம் எப்படி எதிர் கொள்ளும் என ஒருவித நக்கலுடன் பேசியதை , தன் கனவில் மீண்டும் காண்கின்றார்.




இடையில் தன் மனைவின் மரணத்தை தானே வரவழைத்திருக்கும் சாத்தியமும் வசனங்களில் வருகின்றது. விக்கித்து எழுந்து அருகில் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் தன் மருமகளிடம் ,ஏன் தன் மகனை விலகிச் செல்கின்றார் என வினவுகின்றார். மருமகளிடமிருந்த்ய் , தன் மகன், தன்னைப் போல ஒரு வறட்டு வேதாந்தி என அறிந்து வருத்தம் கொள்கின்றார்.

பின் அனைவரும் விருது வழங்கும் இடத்திற்குச் சென்று , பலத்த ஆரவாரத்துடன் விருதினைப் பெற்றுக்கொள்வது ஒரு நல்ல முரண் தான்.



விருதின் போது தன்னை பழைய ந்கழ்வுகள் ஆக்கிரமித்ததை சொல்லுகின்றார். சற்று காலம் கடந்து திருந்து ந்னைப்பது போல, தன் வேலைக்காரியிடம் தன்னை இனி மரியாதையாக கூப்பிடாமல், பெயரைச் சொல்லி கூப்பிட சொல்கின்றார். அதற்கு வேலைக்காரியோ , நக்கலுடன் , என்ன உடம்புக்கு என்னவாயிற்று , ஏன் இப்படியெல்லாம் பேசிகிறீர்கள் என செல்லி விலகுகின்றார்.

தன் மகனும், மருமகளும் சேரக் கூடிய வாய்ப்பிருப்பதைப் பார்த்தவாறு தூங்க முனைகின்றார். முதுமையின் சோகம் தாக்கும் போது சிறுவயது நினைவுகளை நினத்து அதன் குதூகலத்தி;ல் தூங்கப் பார்க்கின்றார். ஒரு வயதானவரின் மனப் போரட்டங்களை , இதை விடச் சிறப்பாக படம் எடுக்க முடியாது என நினைக்கின்றேன்.


மேலும் படிக்க

Tuesday, May 08, 2007

Cronicas / காலக்குறிப்புகள்

Cronicas காலக்குறிப்புகள்

Direction:: Sebastian Cordero / செபாஸ்டியன் கார்டெரொ


Language Spanish / ஸ்பானிஷ்


மனித உணர்ச்சிகளை அல்லது உணர்வுகளை தூண்டியபடி, அதனைத் தான் சொல்ல முனையும் கருத்துக்கு அல்லது எடுத்துக் கொண்ட களத்துக்கு ஆதரவாகக் கட்டி எழுப்புவது ஒரு வகை திரைப்பட பாணி. இதே பாணியில், திரைப்படக் கோணம், வேகம் மற்றும் காட்சியமைப்புகளை ஆவணப்படத்திற்கு ஒத்ததாக அமைப்பது, இந்த வகைப்படங்களை மேலும் தனித்துக் காட்ட உதவலாம்.அதற்கு ஒரு சிறப்பான உதாரணம் இந்தப்படம்.

ஈக்குவேடார் நாட்டின் ஒரு மூலையில் நடப்பதாக இந்தக் கதை. சிறு குழந்தைகளை யாரோ வண்புணர்வு செய்து , பின் கொன்று புதைத்துவிட அந்தக் குழந்தைச் சவங்கள் , 150க்கும் மேலான உடல்கள், கிடைத்த சமயமங்களில் இந்தத் திரைக்கதை அமைந்துள்ளது.
எனக்கு வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் ஆர்வம் எப்பொழுது வந்ததென்று தெரியவில்லை. 10ஆவது படிக்கும் பொழுது என நினைக்கின்றேன், ஒரு இலக்கிய தாகம் நிரம்பிய கும்பல்களுடன் சுற்றிக் கொண்டிருந்த சமயம். அந்த இலக்கிய கும்பல்களுக்கு இந்த "முற்போக்கு இலக்கிய" கும்பல்களுடன் தொடர்பு உண்டு. எங்கள் குடியிருப்புக்கு அருகில் ஒரு அரசு குடியிருப்பு ஒன்று இருந்தது. அந்தக் குடியிருப்பில் மாதம் ஒருமுறை திரைப்படம் போடுவார்கள். எங்கள் குடியிருப்பு மக்களும் அங்கே சென்று படம் பார்ப்பது உண்டு. இதெல்லாம் இந்த டிவீக்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பான காலகட்டங்கள். அப்படி சென்று பார்க்கும் மக்களுக்கு "நல்ல சினிமா" அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் நம் நண்பர் குழாம், அன்மையில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு ஜப்பானிய படம் வாங்கி வந்தது. படத்திற்கு இரண்டு நாள் முன்பாகவே இந்த ஜப்பான்
படம் போடும் விஷயத்தை எங்களால் முடிந்த வரைப் பரப்பினோம். படம் போடும் நாளும் வந்து , குடியிருப்பின் ஒரு பகுதியில் படம் போட்டோம். மக்களும் ஆவலுடன் உட்கார்ந்து பார்க்க படம் ஆரம்பமானது ஒரு கிழவருடன். பேசிய மொழியும் புரியாது, கீழே ஒடிய சப்-டைடிலும் புரியாது, மக்கள் கசாமுசாவென்று திட்டி , படம் போடறாய்ங்களாம் படம், ஒரு சண்டை உண்டா என படம் போட்ட 10ஆவது நிமிடமே, காணாமல் போக, இலக்கிய கும்பல்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தத என்னைப் போன்ற அரைகுறைகளும் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனோம். வெகுகாலத்திற்குப் பின், என் பழைய நண்பனுடன் நான் அப்பொழுது பார்த்திருந்த அகிரோகுரசோவாவின் இக்ரு என்னும் படத்தைப் பற்றி பேச, அவன் "டேய் இந்தப் படத்தைத் தாண்டா நாம் ஜப்பான் படம்ன்னு சொல்லி போட்டம்ல, அதை மறந்திட்டியா" என்றான். திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆமா ஆமா மறந்திட்டேன் என்று புளுகினேன். இப்படியாக அறிமுகமான வெளிநாட்டுப்படங்கள், இந்த வெளி ஊர்சுற்றும் ஆவலுல்ல எனக்கு வெளி ஊர் பார்க்கும் பாவனையைக் கொடுத்ததால் , வெளிநாட்டுப் படங்கள் என்றால் ஒரு கிரேசாகிவிட்டது. பல படங்களில் இந்த ஊரை வேடிக்கைப் பார்க்கும் படலத்தில் கதையைக் கோட்டையும் விட்டிருக்கின்றேன், இந்தப் படமும் ஈக்வேடார் நாட்டு ஒரு ஊரை நன்றாக காட்டியிருந்தது. சில வெளிநாட்டு படங்கள் ( அதுவும் மூன்றாம் உலக) பார்க்கும் பொழுது இது "தாஜ்மகால்" போன்ற படமா அல்லது "பருத்திவீரன்" போன்ற படமா என்ற சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். இந்தப் படம் பார்க்கும் போதும் வந்தது. ஏதேனும் ஈக்வேடார் நாட்டு பிரஜை வந்து விளக்கினால் தான் உண்டு. மூன்றாம் உலக நாடுகள் எப்படி அடிப்படையில் அவ்வளவு ஒற்றுமை எனத் தெரியவில்லை. அதிலும் இந்த தென்அமெரிக்க நாடுகளும், நம் தமிழக அல்லது தென்னிந்திய ஊர்களூம் எப்படி ஒரே பாவனையைத் தரமுடியும் என்பது ஆச்சர்யம் தான். இந்த இரண்டு பிரதேசங்கலும் இந்த மேற்க்கத்திய ஆதிக்கத்திற்கு பின் தென்குடித் தோற்றத்தில் இருந்து இவ்வாறு உருமாறி காட்சியளிக்கின்றதா எனத் தெரியவில்லை.
ஒரு கேரள கிராம/ஊரை செட் போட்டது போல் உள்ளது இந்தப் படச் சூழல். இந்த இடங்கள், மக்கள் , மக்களின் உடலசைவு, எப்படி இப்படி ஒத்துப் போகும் என்பது ஆச்சர்யம் தான். படம் பார்க்கும் பொழுது இந்த ஆச்சர்யம் வந்து கொண்டே இருந்தது. மேற்கத்திய மக்களுக்கும் கிழக்கத்திய மக்களுக்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா அப்படியிருப்பின் அந்த வேறுபாட்டின் அடிப்படை என்ன என ஆராயும் ஒரு புத்தகத்தை
மேலோட்டமாக படித்த ஞாபகம் வருகின்றது. அவர்கள் எடுத்துக் கொண்ட உதாரணம் கிரேக்கத்தையும் , சைனாவையும் அடிப்படை வாழ்க்கையில் சைனாவில் விவசாயமும், கிரேக்கத்தில் வினியோகமும் என்பதாகக் கொண்டு எப்படி விவசாயம் ஒரு கூட்டு வாழ்க்கையை முன்னிருத்தி அதன் சட்டதிட்டங்களை, மக்கள் சிந்தனைகளை பாதிக்கும் என்றும், வினியோகம் அல்லது வியாபாரம் எப்படி தனி மனித வாழ்க்கையை முன்னிருத்தி
அதன் சட்டதிட்டங்களை , மக்கள் சிந்தனைகளை பாதிக்கும் என்று விரித்திருந்தது. இங்கே இந்த தென் அமெரிக்க அல்லது தென் இந்திய வாழ்க்கைமுறைகள் அடிப்படையில் விவசாயம் அதுவும் கூட்டுவிவசாயம், பொது வாழ்வாதரங்களைக் கொண்டு.... ம்ஹூம் இது ஆவரதில்லை. படம் பார்த்து சில நாள் கழித்து விமர்சனம் செய்ய உட்கார்ந்தால் இது தான் நடக்கும். படத்திற்கு திரும்புவோம்.....

ஈக்வேடார் நாட்டில் நடக்கும் திகீர் சம்பவம், அதைச் செய்தியாக்க அமெரிக்க நகரான மியாமியில் இருக்கும் ஸ்பானிஷ் டிவியின் செய்திக்குழு அந்த இடத்தில் டேரா போடுதல், அதன் பின் அந்த செய்திக்குழு , அதன் நடத்தைகள், ஈக்வேடார் மக்கள் , அவர்கள் சம்பவங்களுக்கு ஆக்கும் எதிர்வினை அதன் முறைகள், சட்டக் காவலாளர்கள், ஜெயில் மற்றும் குழந்தைகள், பேதைகள் என கதை சுற்றி வருகின்றது. இதில் அந்த டிவின் செய்திக் குழுவில் தலைவனாக வருபர் பல அமெரிக்க படங்களில் பார்த்த முகம் ( படம் ஒன்றும் ஞாபகமில்லை) சைடு ஆட்களில் ஒருவராக வருபவர், இந்தப் படத்தில் ஹீரோ வேடத்திற்கு ஒத்த வேடம்.. இவருடன் ஒர் ஸ்பனிஷ் அழகியும் , கேமரா மேனும். ஸ்பனிஷ் அழகி மரிசா, நிகழ்சி தயாரிப்பாளர். இவர் மியாமி டிவி செய்தி தொகுப்பாளர் மனைவியும் கூட


ஒரு ஆள் வினிசியோ அவனுடைய கிராமத்துக்குள் நுழையும் முன், நம்மூர் கிராமத்தில் குளிப்பது போல் குளித்துவிட்டு ,



அவனுடைய வேனை ஓட்டிக் கொண்டு வருகின்றான். அப்பொழுது அந்த ஊரில் ஒரு கொடூரன் செய்த கொலையில் சிக்கிய சிறுவர்களின் சவம் கண்டெடுக்கப்பட்டு அவர்களின் சவ ஊர்வலம் வருகின்றது. சவ ஊர்வலத்தை மியாமியில் இருந்து வந்திருந்த டிவி குழுவினர் எந்த வகைகளின் இந்த நிகழ்ச்சியை எடுத்து ரேட்டிங் பார்க்கலாம் என்னும் எண்ணவோட்டதின் பின்னே இயங்குகின்றனர். இறந்த ஒரு சிறுவனின் இரட்டைச்சகோதரனை பேட்டி எடுக்க விழைகின்றனர்.


மறுபுறம் வேன் ஓட்டிவந்த ஆள் பள்ளியிலிருந்து சீக்கிரம் வெளிவந்த அவனது மகனை வேனில் ஏற்றிக் கொண்டு வருகின்றான். பேட்டி எடுக்கப் போகும் சிறுவனோ தடாலென்று தன்னுடை விளையாட்டு பந்தை பிடிங்கிச் சென்றவனை துரத்த. சரியாக அந்த வேனில் வந்து மோதி அதன் டயருக்குள் சென்று விடுகின்றான்.



மக்கள் கொதித்து வேனில் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவனை பந்தாடுகின்றனர். அதனை டிவிக் காரர்கள் படம் பொறுமையாக, படம் பிடிக்கின்றனர்.




இந்த இடத்தில் படத்தில் இருந்த வேகம், காமிரா அசைவுகள் நன்றாக வந்திருந்தது. இசையேதும் இல்லாமல், இயற்கை சத்தத்துடன் ஒரு ஆவனம் போல படமாக்கியிருந்தது உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.. வேனில் மோதி இறந்த சிறுவனின் தந்தை , நீண்ட நாள் போராட்டத்திற்குப் பின் பிறந்த இரண்டு மகன்களையும், இழந்த சோகத்தில், வேண் ஓட்டியவனை நெருப்பில் கொளுத்த, நிறுத்தி நிதானமாக படமெடுத்தவுடன், டிவிக்குழு தலைவன் மனொலொ அவனைக் காப்பாற்றுகின்றான். போலிஸ் வந்து இருவரையும் கைது செய்து ஜெயில் போடுகின்றது. இந்தக் காட்சியைத் தென்னிந்தியாவில் எடுத்தது என்றால் யாருக்கும் சந்தேகம் வராது.


தெனமெரிக்க ஜெயில் , நம்மூர் திருவள்ளிக் கேணி மான்ஷன் போல் உள்ளது. இந்த அமெரிக்க ஜெயில்களை பார்த்து (படத்தில் தான்)பின் இந்த ஜெயில்களை (அடுத்த பட "திரைப்பார்வையில்" இன்னமும் விலக்கமாக) பார்க்க சற்று மனிதத்தன்மை ஆன ஜெயில்களாக தெரிகின்றன. ஜெயிலில் ஹம்மாக் உண்டென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.




டிவிக்குழு இந்த ஜெயிலுக்கும் வந்து பேட்டி எடுக்க, வேண் ஓட்டிய வெண்டடொர், இவர்களிடம் கெஞ்சுகின்றார், எப்படியாவது காப்பாற்றும்படி. மனொலோ மறுக்க, வினிசியோ தனக்கு ஒரு ரகசியம் தெரியும் அதாவது தனக்கு அந்த கொடூரன் யாரென்று தெரியும். என்னைக் காப்பாற்றினால் சொல்வேன் என்கிறான். குழப்பத்துடன் திரும்புகிறார் மனொலொ..


அடுத்த நாள் சென்று , வினிசியொவிடம் நம்பகத் தன்மைக்காக ஒரு சான்று கேட்க, வினிசியோ , அந்த கொடூரன் ஒரு சிறுமியை புதைத்த இடத்தைச் சொல்கின்றார். மனோலாவும், கேமிராமேனும் அந்த இடத்திற்குச் சென்று தேடி சிறுமியின் சவத்தைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் போலிசிக்குச் சொன்னால் டிவி விவரம் சேகரிக்க முடியாது என்று சவததை திரும்ப புதைத்துவிட்டி வந்து விடுகின்றனர். மனோலா வருத்தமடைகின்றார். இந்த வருத்தத்தின் ஆறுதலுக்காக மனோலாவும் மரிசியோவும் கள்ள உறவு கொண்டு விடுகின்றனர்.




இது அமெரிக்கர்களின் வேக வாழ்க்கையை ஈக்வேடாரில் கோடிட்டு காட்டுவதற்காக இந்த அவசர உறவுக்காட்சி எனத் தெரிவில்லை. பின் மனோலா வினிசியுடன் ஒரு நேர்கானல் அமைக்கின்றார். வினிசியோ பேசுவது சொல்வது எல்லாம் ஏதோ ஒன்றைக் கோடிட்டு காட்டுவதாக காட்சியும் வினிசியோவின் முகபாவங்களும், அவரது வசனங்களும் சொல்லுகின்றன. இந்த நேர்கானல் எனக்கு பிரைமல் ஃபியர் என்னும் படத்தில் ரிச்சர் கியரும் எட்வர்ட் நார்ட்டனும் நடித்த காட்சி கண் முன்னால் வந்தது.




மனோலா ஒரு மிகப் பெரிய சான்ஸ் கிடைத்தாக நம்புகின்றார். இதைத் தொடர்ந்து ஆளைப் பிடித்து விட்டால் தனக்கு பெரும் பெயர் கிடத்துவிடும் என நம்பி, அடுத்து இருக்கும் ஒரு வேலையைத் தல்ளிப் போடுகின்றார். ட் வினிசியோ தனக்கு ஆதரவாக டிவி நிகச்சி செய்தால் தான் மேலும் பேட்டி கொடுப்பேன் என்கின்றார். வினிசியோவின் நிறைமாதமாக இருக்கும் மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களை பேட்டி எடுக்கின்றனர்.


மனோலா வினிசியோவிற்காக தயாரித்த பேட்டி அவரது அனுமதிட்யில்லாமல் வெளியாகின்றது. மரிசியோவும் வினிசியோவின் மேல் குற்றம் வரும்படியான ஆதாரத்தை அதே நேரத்தில் கைப்பற்றுகின்றார். டிவி பேட்டி வெளியானவுடன் வினிசியோ விடுதலை ஆகி விடுகின்றார். மனோலா வினிசியோவை திரும்ப சந்திக்கும் முன் வினிசியோ கானாமல் போகின்றார். அதே நேரம் ஒரு நிரபராதியை விடுதலை செய்ய உதவிய மனோலாவிற்கு பெரும்பெயர் கிடைக்கின்றது




மனோலாவும் டிவி குழுவும் என்ன செய்கின்றனர்? வினிசியோ என்ன ஆனார்? அதிரடியான முடிவுடன் படம் முடிகின்றது.

திரைக்கதை, நடிகர்கள் குறிப்பாக வினிசியோவாக நடித்தவர், காமிரா எல்லாம் நன்றாக இருந்தது. படம் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதும் நிஜம். வேட்டையாடு விளையாடு பார்த்த பாவத்தை இதைப் பார்த்து போக்கிக் கொள்ளலாம்..


மேலும் படிக்க