Wednesday, April 15, 2009

அழிவின் கத்தி The Sword of the Doom 1965 (Spoiler Alert)

வெஸ்ட்ர்ன் ரசிகர்களுக்கு சப்பானிய சாமுராய் படங்களும் பிடிக்கும். நானும் விலக்கல்ல. அகிரோவின் படங்கள் மூலமாகத்தான் எனக்கும் சாமுராய் படங்கள் அறிமுகம். சப்பானின் கடந்த ஆயிரம் வருடங்களில் 800 வருடங்கள் சாமுராய்களின் ஆட்சி தான். அது முடிவுக்கு வந்தது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில். பல சாமுராய் படங்களின் கால கட்டமும் அது தான். இந்தப் படத்தின் காலக் கட்டமும் அதே தான் 1860. இந்தப் பட்த்தின் டிவிடி பாக்ஸிர்க்குள் ஒரு இரண்டு பக்க கதை முன்னுரை. ஜெஃப் ஒபிரையானின் (Geoffrey O'Brien) கட்டுரை நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

சாமுராயாக நடித்தவரை ஏதோ படத்தில் பார்த்த ஞாபகம். சட்டென்று என்ன படம் என்று மனது சொல்லி விட்டது. அகிராவின் யோஜிம்போ (Yojimbo) என்னும் படத்தின் வில்லன் தான் அவர். டாட்சுயா நகடாய் என்னும் வில்லாளன் தான் இந்தப் படத்தின் நாயகனும். யோஜிம்போ என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு படம். இந்தப் படத்தை திரும்ப ஒரு முறை பார்த்து குறித்துக் கொள்ள வேண்டும். fistfull of dollars என்று கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை உச்சத்தில் ஏத்திவிட்ட, மற்றும் Last man standing என்று புரூஸ் வில்லிஸ்ஸை படுகீழே இறக்கிவிட்ட படங்களின் மூலம் தான் இந்த யோஜிம்போ. இதன் ஒருவகையில் மட்டமான காப்பியாக விஜய்யின் கடைசி வெற்றிப்படமான போக்கிரியைக் கூடச் சொல்லலாம். இந்தப் படத்தினை ஒரு வகையில் உருவின உலகின் அத்துனைப் படங்களின்/கேம்ஸ்களின் லாபத்தில் ஒரு 2 சதவிகிதம் கணக்கிட்டாலும் ராய்ல்டி கணக்கு எங்கோ கொண்டு போய் விடும். சரி அந்தக் கொடுமையை விடுவோம்.

பொதுவாக திரைப்படங்கள் கதாநாயகன்/வில்லன் என்னும் இருமுனையில் ஒன்று நன்மையாகயும், தியாகமாகவும், அழகானதும், பாசமானதும், விவேகமாகவும், வெளிச்சமாகவும் மற்றொன்று தீமையாகவும், சுயநலமாகவும், கோரமாகவும், வெறுப்பானதும், இருளானதும் என இருந்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கும் பின் இறுதியில் நன்மை வெல்லும். அப்படி இல்லாவிட்டால் நாயக முனை மட்டும் இருந்து சூழலே எதிர் வேடம் எடுக்கும் இங்கேயும் அந்த நல்ல நாயக முனை தான் வெற்றி பெறும். இன்னமும் வெற்றிப் பெறக்கூடிய சூத்திரமாக இது இருந்தாலும், 60 களில் இரு முனையையும் கொஞ்சம் கொஞ்சமாக "களங்கப்" படுத்தி விளையாடும் விளையாட்டு தொடங்கியிருக்கும் என நினக்கின்றேன்.

தன்னுடைய கலையின் அதாவது கத்தி சுழற்றும் கலையின் உச்சத்தில் இருக்கும் ஒருவனின் தீமையின் பக்கமான சரிவு என கதையின் கரு தெரிந்து ஒரு வித ஆவலுடன் பார்க்கத் தொடங்கினேன். சமீப காலப்படங்கலில் இதுப் போல தீம்கள் நிறைய இருந்தாலும், 1965ல்
எடுத்ததால் ஒரு ஆர்வம்.

கருப்பு வெள்ளைப் படங்களின் முக்கிய பலமாக நிழலை உபயோகிக்கத் தெரிந்த வலுவான கேமிரா மேன் இருக்க வேண்டும். இந்தப் படத்திற்கும் இருக்கின்றார். படம் எடுக்கும் கலையை கருப்பு வெள்ளை கொண்டு எடுத்துக் கற்றுக் கொண்டு பின் கலருக்குச் செல்ல
வேண்டும் என நினைக்கின்றேன் (Spoiler Alert)


ஒரு முதியவருடன் ஒர் சிறு வயது பெண் சாமி கும்பிடுவதற்காக மலை ஏறிக் கொண்டிருக்கின்றாள்.




முதியவரை விட்டு அவள் தண்ணிர் எடுக்க விலக முதியவரோ அருகில் இருக்கும் ஒரு சிறு புத்த கோவிலில் குனிந்து தள்ளாமையுடன் வருத்தத்துடன் "என்னை மறு உலகிற்கு எடுத்துச் சென்றுவிடு இறைவா" என வேண்டிக் கொண்டிருக்கும் போது ஏய் இங்கே வா என ஒரு குரல் கேட்கிறது. முதியவர் திரும்பிப் பார்க்க ஒரு சாமுராய் தலையில் தொப்பி மறைத்திருக்க நிற்கிறான்.




முதியவர் அருகில் சொல்ல இப்படி திரும்பு என அதட்டல் குரல் கேட்டு ஒரு நொடியில் முதியவர் கீழே சரிகிறார் இரத்தக் காயத்துடன். சாமுராய் நானே கடவுள் என்பது போல் திரும்ப கத்தியை மின்னல் வேகத்தில் திரும்ப தன் பின்புறம் சொறுகிவிட்டு, தான் செய்தது கொண்டிருந்த ஓடல் பயிற்சியைத் தொடர்கிறான். இது தான் திரைக்கதையின் ஆரம்பம்.

பயிற்சியை முடித்து விட்டு நோயுற்றிருக்கும் தந்தையைச் சென்று பார்க்கின்றார் சாமுராய். தந்தையோ ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார். நடக்க இருக்கும் ஒரு கத்திச்சண்டைப் போட்டியில் யாரோ ஒருவனிடம் அவன் வேண்டுமென்றே தோற்க்க வேண்டுமாம். அப்படித் தோற்றால் அந்த யாரோ ஒருவனின் குடும்பம் பிழைக்கும். இவனுக்கோ திறமை இருப்பதால் கவலைப் படவேண்டியதில்லை என தந்தை நினைக்கின்றார். பதில் சொல்லாமல் இருக்கின்றான் சாமுராய். யாரோ ஒரு பெண் சாமுராயைப் பார்க்க வருகின்றாள். தன் கணவன் ஜெயிக்க வேண்டும் அதனால் சாமுராய் தோற்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றாள். சாமுராயோ போட்டியில் தோற்ப்பது என்பது ஒரு பெண் கற்பிழக்கும் நிலைக்குச் சமம் என்கின்றான். அவளே கற்பிழக்க சம்மதிப்பாளா எனவும் வினவுகின்றான். அந்தப் பெண்ணின் கணவனும் சாமுராயின் தந்தை சொன்ன ஆளும் ஒருவர் தான்.

அவள் சம்மதிக்க, கணவன் அவளை சந்தேகப்பட கூடவே தனக்குள்ளாக அவமானமும் பட, சண்டையில் தவறான அடி அடிக்க முற்பட்டு சாமுராயிடம் உயிரையும் இழக்கின்றான்.





1965ல் இந்த இடத்தில் சாமுராய் மேல் கடுமையான கோபம் ஏற்பட வாய்ப்புண்டா என என்னால் ஊகிக்க முடியவில்லை. உண்மையில் எனக்கு சாமுராய் மேல் வருத்தம் தான் வந்தது. சந்தேகம் வந்து நான் தேடிப் படித்த விமர்சனங்கள் எல்லாம் சாமுராயின் சாத்தான் இந்த இடத்தில் தான் ஆரம்பிற்கின்றார் போல் எழுதியிருந்தனர். இந்தப் படம் பார்த்த, அல்லது பார்க்காதவர்கள் "தயவு செய்து" பார்த்து, இங்கேயே வேறெங்கேயோ விளக்கி எழுதினால் நன்றாக இருக்கும்.

சாமுராய் விலகிச் செல்ல வேண்டிய நிலையில் இருக்க, கூடவே விதவையான அந்தப் பெண்ணையும் சேர்த்துக் கொண்டு, சாமுராய்கள் செல்வாக்கு இழக்கும் கால கட்டத்தில் அவன் சோத்துக்கும் மத்ததற்க்கும் அலைய வேண்டியதாகியது. செத்தவனின் தம்பி , இவனைப்
பழிவாங்க அலைகின்றான். இந்தச் சூழலில் முதலில் உயிரிழந்த முதியவரின் பேத்தியும் சேர சூழலைச் சுவாரசியப் படுத்த தேவையான முனைகள் சேர்ந்தன. படமும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது. செத்தவனின் தம்பிக்கு கத்திச் சண்டை சொல்லிக் கொடுப்பவர், அகிராவின்
ஆஸ்தான நாயகனான டோஷிரொ மிஃபூனே தான். அவரும் வியக்கும் படியான ஒரு புதிய வகையான கத்திச் சண்டை போடுபவர் தான் நம் சாமுராய்.



படத்தில் மூன்று முக்கியமான கத்திச் சண்டைகள்.இரண்டு நாம் சாமுராய் போடுவது மற்றொன்று டோஷிரா. இந்த மூன்று சண்டைகளின் ஆழமான தாக்கம் கில் பில் ( Kill Bill 1 & 2) ல் இருந்தது இப்பொழுது தான் எனக்குத் தெரிய வருகின்றது.













இது மிஃபூனேவுடைய சண்டைக் காட்சி you tubல் கிடைத்தது 4 நிமிடம் செலவழிக்க முடிந்தால் , கிளிக்கலாம். வேஸ்ட்டாக வாய்ப்பு குறைவு.


உண்மையில் இந்த கேளிக்கைத் துறைகளில் முக்கியமாக சினிமா/இசை போன்று ஒருவருக்கு மேல் இணைந்து பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி வரும் ஆக்கங்களின் மீதான காப்புரிமைச் சட்டம் என்பதெல்லாம் பேத்தல் என நினைக்கின்றேன். தெளிவாக எது எவனுடைய/எந்தக் குழுவினதுடைய "தனிப்பட்ட" முதல்முறையாக செய்த ஒன்று என "எதையும்" பிரிக்க முடியாது என தீவிர எண்ணம் வருகின்றது.

கடைசியில் ( நான் எதிர்பார்க்க வில்லை அது தான் கடைசி என) ஒரு சண்டை. சாமுராய் நிழல் மனிதர்களுடனும் , நிஜ மனிதர்களுடனும் ஆக்கிரோசமான் சண்டை போடுகின்றார். கூட்டம் கூட்டமாக வந்து "தலை"யிடம் வெட்டுப் பட்டுச் சாகின்றனர். "த"லைக்கும் வெட்டு உண்டு. தலையில் இருந்து இரத்தம் கண்களுக்கு வடிய துடைத்து சரிந்து துடைத்து சரிந்து கொளை கொளையாக வெட்டிச் சாக்கின்றார். வெளியில் இது தெரியாமல் , பழிவாங்க வேண்டி ஒரு தம்பி வேறு காத்துக் கொண்டிருக்கின்றார். வெட்டி வெட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு ஷாட்டில் படம் உறைந்து அப்படியே நிற்கின்றது.




பட்ச் காசடி அண்ட் சண்டான்ஸ் கிட் (Butch cassedy and sundance kid)ல் தான் கடைசி ஷாட்டில் படம் உறைந்து புதுமை செய்திருந்தார்கள் என நினைத்திருந்த எனக்கு அதிலும் மண்ணடி விழுந்தது. படம் இப்படி அரத பாதியில் நிற்கிறதே, இல்லை உண்மையில் படம் முடிந்து என் மரமண்டைக்குத் தான் உறைக்கவில்லையா என தேடிப் பார்த்தால், இது முதலில் முதல் பாகமாகத்தான் நினைத்து எடுக்கப் பட்டதாம். இரண்டாம் பாகத்தில் தன் கண்களை இழந்தும் சாமுராய் தீயப் பாதையில் மேலும் முழுக இருந்து, அந்த இரண்டாம் பாகம் எடுக்கப் படாமலே போய் விட்டதாம். எப்படியிருந்தாலும் சினிமாவினை ரசிப்பவர்கள் தவறவிடக் கூடாத படம் என்று தான் நான் சொல்வேன்.

0 comments: