Cronicas / காலக்குறிப்புகள்
Cronicas காலக்குறிப்புகள்
Direction:: Sebastian Cordero / செபாஸ்டியன் கார்டெரொ
Language Spanish / ஸ்பானிஷ்
மனித உணர்ச்சிகளை அல்லது உணர்வுகளை தூண்டியபடி, அதனைத் தான் சொல்ல முனையும் கருத்துக்கு அல்லது எடுத்துக் கொண்ட களத்துக்கு ஆதரவாகக் கட்டி எழுப்புவது ஒரு வகை திரைப்பட பாணி. இதே பாணியில், திரைப்படக் கோணம், வேகம் மற்றும் காட்சியமைப்புகளை ஆவணப்படத்திற்கு ஒத்ததாக அமைப்பது, இந்த வகைப்படங்களை மேலும் தனித்துக் காட்ட உதவலாம்.அதற்கு ஒரு சிறப்பான உதாரணம் இந்தப்படம்.
ஈக்குவேடார் நாட்டின் ஒரு மூலையில் நடப்பதாக இந்தக் கதை. சிறு குழந்தைகளை யாரோ வண்புணர்வு செய்து , பின் கொன்று புதைத்துவிட அந்தக் குழந்தைச் சவங்கள் , 150க்கும் மேலான உடல்கள், கிடைத்த சமயமங்களில் இந்தத் திரைக்கதை அமைந்துள்ளது.
எனக்கு வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் ஆர்வம் எப்பொழுது வந்ததென்று தெரியவில்லை. 10ஆவது படிக்கும் பொழுது என நினைக்கின்றேன், ஒரு இலக்கிய தாகம் நிரம்பிய கும்பல்களுடன் சுற்றிக் கொண்டிருந்த சமயம். அந்த இலக்கிய கும்பல்களுக்கு இந்த "முற்போக்கு இலக்கிய" கும்பல்களுடன் தொடர்பு உண்டு. எங்கள் குடியிருப்புக்கு அருகில் ஒரு அரசு குடியிருப்பு ஒன்று இருந்தது. அந்தக் குடியிருப்பில் மாதம் ஒருமுறை திரைப்படம் போடுவார்கள். எங்கள் குடியிருப்பு மக்களும் அங்கே சென்று படம் பார்ப்பது உண்டு. இதெல்லாம் இந்த டிவீக்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பான காலகட்டங்கள். அப்படி சென்று பார்க்கும் மக்களுக்கு "நல்ல சினிமா" அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் நம் நண்பர் குழாம், அன்மையில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு ஜப்பானிய படம் வாங்கி வந்தது. படத்திற்கு இரண்டு நாள் முன்பாகவே இந்த ஜப்பான்
படம் போடும் விஷயத்தை எங்களால் முடிந்த வரைப் பரப்பினோம். படம் போடும் நாளும் வந்து , குடியிருப்பின் ஒரு பகுதியில் படம் போட்டோம். மக்களும் ஆவலுடன் உட்கார்ந்து பார்க்க படம் ஆரம்பமானது ஒரு கிழவருடன். பேசிய மொழியும் புரியாது, கீழே ஒடிய சப்-டைடிலும் புரியாது, மக்கள் கசாமுசாவென்று திட்டி , படம் போடறாய்ங்களாம் படம், ஒரு சண்டை உண்டா என படம் போட்ட 10ஆவது நிமிடமே, காணாமல் போக, இலக்கிய கும்பல்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தத என்னைப் போன்ற அரைகுறைகளும் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனோம். வெகுகாலத்திற்குப் பின், என் பழைய நண்பனுடன் நான் அப்பொழுது பார்த்திருந்த அகிரோகுரசோவாவின் இக்ரு என்னும் படத்தைப் பற்றி பேச, அவன் "டேய் இந்தப் படத்தைத் தாண்டா நாம் ஜப்பான் படம்ன்னு சொல்லி போட்டம்ல, அதை மறந்திட்டியா" என்றான். திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆமா ஆமா மறந்திட்டேன் என்று புளுகினேன். இப்படியாக அறிமுகமான வெளிநாட்டுப்படங்கள், இந்த வெளி ஊர்சுற்றும் ஆவலுல்ல எனக்கு வெளி ஊர் பார்க்கும் பாவனையைக் கொடுத்ததால் , வெளிநாட்டுப் படங்கள் என்றால் ஒரு கிரேசாகிவிட்டது. பல படங்களில் இந்த ஊரை வேடிக்கைப் பார்க்கும் படலத்தில் கதையைக் கோட்டையும் விட்டிருக்கின்றேன், இந்தப் படமும் ஈக்வேடார் நாட்டு ஒரு ஊரை நன்றாக காட்டியிருந்தது. சில வெளிநாட்டு படங்கள் ( அதுவும் மூன்றாம் உலக) பார்க்கும் பொழுது இது "தாஜ்மகால்" போன்ற படமா அல்லது "பருத்திவீரன்" போன்ற படமா என்ற சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். இந்தப் படம் பார்க்கும் போதும் வந்தது. ஏதேனும் ஈக்வேடார் நாட்டு பிரஜை வந்து விளக்கினால் தான் உண்டு. மூன்றாம் உலக நாடுகள் எப்படி அடிப்படையில் அவ்வளவு ஒற்றுமை எனத் தெரியவில்லை. அதிலும் இந்த தென்அமெரிக்க நாடுகளும், நம் தமிழக அல்லது தென்னிந்திய ஊர்களூம் எப்படி ஒரே பாவனையைத் தரமுடியும் என்பது ஆச்சர்யம் தான். இந்த இரண்டு பிரதேசங்கலும் இந்த மேற்க்கத்திய ஆதிக்கத்திற்கு பின் தென்குடித் தோற்றத்தில் இருந்து இவ்வாறு உருமாறி காட்சியளிக்கின்றதா எனத் தெரியவில்லை.
ஒரு கேரள கிராம/ஊரை செட் போட்டது போல் உள்ளது இந்தப் படச் சூழல். இந்த இடங்கள், மக்கள் , மக்களின் உடலசைவு, எப்படி இப்படி ஒத்துப் போகும் என்பது ஆச்சர்யம் தான். படம் பார்க்கும் பொழுது இந்த ஆச்சர்யம் வந்து கொண்டே இருந்தது. மேற்கத்திய மக்களுக்கும் கிழக்கத்திய மக்களுக்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா அப்படியிருப்பின் அந்த வேறுபாட்டின் அடிப்படை என்ன என ஆராயும் ஒரு புத்தகத்தை
மேலோட்டமாக படித்த ஞாபகம் வருகின்றது. அவர்கள் எடுத்துக் கொண்ட உதாரணம் கிரேக்கத்தையும் , சைனாவையும் அடிப்படை வாழ்க்கையில் சைனாவில் விவசாயமும், கிரேக்கத்தில் வினியோகமும் என்பதாகக் கொண்டு எப்படி விவசாயம் ஒரு கூட்டு வாழ்க்கையை முன்னிருத்தி அதன் சட்டதிட்டங்களை, மக்கள் சிந்தனைகளை பாதிக்கும் என்றும், வினியோகம் அல்லது வியாபாரம் எப்படி தனி மனித வாழ்க்கையை முன்னிருத்தி
அதன் சட்டதிட்டங்களை , மக்கள் சிந்தனைகளை பாதிக்கும் என்று விரித்திருந்தது. இங்கே இந்த தென் அமெரிக்க அல்லது தென் இந்திய வாழ்க்கைமுறைகள் அடிப்படையில் விவசாயம் அதுவும் கூட்டுவிவசாயம், பொது வாழ்வாதரங்களைக் கொண்டு.... ம்ஹூம் இது ஆவரதில்லை. படம் பார்த்து சில நாள் கழித்து விமர்சனம் செய்ய உட்கார்ந்தால் இது தான் நடக்கும். படத்திற்கு திரும்புவோம்.....
ஈக்வேடார் நாட்டில் நடக்கும் திகீர் சம்பவம், அதைச் செய்தியாக்க அமெரிக்க நகரான மியாமியில் இருக்கும் ஸ்பானிஷ் டிவியின் செய்திக்குழு அந்த இடத்தில் டேரா போடுதல், அதன் பின் அந்த செய்திக்குழு , அதன் நடத்தைகள், ஈக்வேடார் மக்கள் , அவர்கள் சம்பவங்களுக்கு ஆக்கும் எதிர்வினை அதன் முறைகள், சட்டக் காவலாளர்கள், ஜெயில் மற்றும் குழந்தைகள், பேதைகள் என கதை சுற்றி வருகின்றது. இதில் அந்த டிவின் செய்திக் குழுவில் தலைவனாக வருபர் பல அமெரிக்க படங்களில் பார்த்த முகம் ( படம் ஒன்றும் ஞாபகமில்லை) சைடு ஆட்களில் ஒருவராக வருபவர், இந்தப் படத்தில் ஹீரோ வேடத்திற்கு ஒத்த வேடம்.. இவருடன் ஒர் ஸ்பனிஷ் அழகியும் , கேமரா மேனும். ஸ்பனிஷ் அழகி மரிசா, நிகழ்சி தயாரிப்பாளர். இவர் மியாமி டிவி செய்தி தொகுப்பாளர் மனைவியும் கூட
ஒரு ஆள் வினிசியோ அவனுடைய கிராமத்துக்குள் நுழையும் முன், நம்மூர் கிராமத்தில் குளிப்பது போல் குளித்துவிட்டு ,
அவனுடைய வேனை ஓட்டிக் கொண்டு வருகின்றான். அப்பொழுது அந்த ஊரில் ஒரு கொடூரன் செய்த கொலையில் சிக்கிய சிறுவர்களின் சவம் கண்டெடுக்கப்பட்டு அவர்களின் சவ ஊர்வலம் வருகின்றது. சவ ஊர்வலத்தை மியாமியில் இருந்து வந்திருந்த டிவி குழுவினர் எந்த வகைகளின் இந்த நிகழ்ச்சியை எடுத்து ரேட்டிங் பார்க்கலாம் என்னும் எண்ணவோட்டதின் பின்னே இயங்குகின்றனர். இறந்த ஒரு சிறுவனின் இரட்டைச்சகோதரனை பேட்டி எடுக்க விழைகின்றனர்.
மறுபுறம் வேன் ஓட்டிவந்த ஆள் பள்ளியிலிருந்து சீக்கிரம் வெளிவந்த அவனது மகனை வேனில் ஏற்றிக் கொண்டு வருகின்றான். பேட்டி எடுக்கப் போகும் சிறுவனோ தடாலென்று தன்னுடை விளையாட்டு பந்தை பிடிங்கிச் சென்றவனை துரத்த. சரியாக அந்த வேனில் வந்து மோதி அதன் டயருக்குள் சென்று விடுகின்றான்.
மக்கள் கொதித்து வேனில் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவனை பந்தாடுகின்றனர். அதனை டிவிக் காரர்கள் படம் பொறுமையாக, படம் பிடிக்கின்றனர்.
இந்த இடத்தில் படத்தில் இருந்த வேகம், காமிரா அசைவுகள் நன்றாக வந்திருந்தது. இசையேதும் இல்லாமல், இயற்கை சத்தத்துடன் ஒரு ஆவனம் போல படமாக்கியிருந்தது உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.. வேனில் மோதி இறந்த சிறுவனின் தந்தை , நீண்ட நாள் போராட்டத்திற்குப் பின் பிறந்த இரண்டு மகன்களையும், இழந்த சோகத்தில், வேண் ஓட்டியவனை நெருப்பில் கொளுத்த, நிறுத்தி நிதானமாக படமெடுத்தவுடன், டிவிக்குழு தலைவன் மனொலொ அவனைக் காப்பாற்றுகின்றான். போலிஸ் வந்து இருவரையும் கைது செய்து ஜெயில் போடுகின்றது. இந்தக் காட்சியைத் தென்னிந்தியாவில் எடுத்தது என்றால் யாருக்கும் சந்தேகம் வராது.
தெனமெரிக்க ஜெயில் , நம்மூர் திருவள்ளிக் கேணி மான்ஷன் போல் உள்ளது. இந்த அமெரிக்க ஜெயில்களை பார்த்து (படத்தில் தான்)பின் இந்த ஜெயில்களை (அடுத்த பட "திரைப்பார்வையில்" இன்னமும் விலக்கமாக) பார்க்க சற்று மனிதத்தன்மை ஆன ஜெயில்களாக தெரிகின்றன. ஜெயிலில் ஹம்மாக் உண்டென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
டிவிக்குழு இந்த ஜெயிலுக்கும் வந்து பேட்டி எடுக்க, வேண் ஓட்டிய வெண்டடொர், இவர்களிடம் கெஞ்சுகின்றார், எப்படியாவது காப்பாற்றும்படி. மனொலோ மறுக்க, வினிசியோ தனக்கு ஒரு ரகசியம் தெரியும் அதாவது தனக்கு அந்த கொடூரன் யாரென்று தெரியும். என்னைக் காப்பாற்றினால் சொல்வேன் என்கிறான். குழப்பத்துடன் திரும்புகிறார் மனொலொ..
அடுத்த நாள் சென்று , வினிசியொவிடம் நம்பகத் தன்மைக்காக ஒரு சான்று கேட்க, வினிசியோ , அந்த கொடூரன் ஒரு சிறுமியை புதைத்த இடத்தைச் சொல்கின்றார். மனோலாவும், கேமிராமேனும் அந்த இடத்திற்குச் சென்று தேடி சிறுமியின் சவத்தைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் போலிசிக்குச் சொன்னால் டிவி விவரம் சேகரிக்க முடியாது என்று சவததை திரும்ப புதைத்துவிட்டி வந்து விடுகின்றனர். மனோலா வருத்தமடைகின்றார். இந்த வருத்தத்தின் ஆறுதலுக்காக மனோலாவும் மரிசியோவும் கள்ள உறவு கொண்டு விடுகின்றனர்.
இது அமெரிக்கர்களின் வேக வாழ்க்கையை ஈக்வேடாரில் கோடிட்டு காட்டுவதற்காக இந்த அவசர உறவுக்காட்சி எனத் தெரிவில்லை. பின் மனோலா வினிசியுடன் ஒரு நேர்கானல் அமைக்கின்றார். வினிசியோ பேசுவது சொல்வது எல்லாம் ஏதோ ஒன்றைக் கோடிட்டு காட்டுவதாக காட்சியும் வினிசியோவின் முகபாவங்களும், அவரது வசனங்களும் சொல்லுகின்றன. இந்த நேர்கானல் எனக்கு பிரைமல் ஃபியர் என்னும் படத்தில் ரிச்சர் கியரும் எட்வர்ட் நார்ட்டனும் நடித்த காட்சி கண் முன்னால் வந்தது.
மனோலா ஒரு மிகப் பெரிய சான்ஸ் கிடைத்தாக நம்புகின்றார். இதைத் தொடர்ந்து ஆளைப் பிடித்து விட்டால் தனக்கு பெரும் பெயர் கிடத்துவிடும் என நம்பி, அடுத்து இருக்கும் ஒரு வேலையைத் தல்ளிப் போடுகின்றார். ட் வினிசியோ தனக்கு ஆதரவாக டிவி நிகச்சி செய்தால் தான் மேலும் பேட்டி கொடுப்பேன் என்கின்றார். வினிசியோவின் நிறைமாதமாக இருக்கும் மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களை பேட்டி எடுக்கின்றனர்.
மனோலா வினிசியோவிற்காக தயாரித்த பேட்டி அவரது அனுமதிட்யில்லாமல் வெளியாகின்றது. மரிசியோவும் வினிசியோவின் மேல் குற்றம் வரும்படியான ஆதாரத்தை அதே நேரத்தில் கைப்பற்றுகின்றார். டிவி பேட்டி வெளியானவுடன் வினிசியோ விடுதலை ஆகி விடுகின்றார். மனோலா வினிசியோவை திரும்ப சந்திக்கும் முன் வினிசியோ கானாமல் போகின்றார். அதே நேரம் ஒரு நிரபராதியை விடுதலை செய்ய உதவிய மனோலாவிற்கு பெரும்பெயர் கிடைக்கின்றது
மனோலாவும் டிவி குழுவும் என்ன செய்கின்றனர்? வினிசியோ என்ன ஆனார்? அதிரடியான முடிவுடன் படம் முடிகின்றது.
திரைக்கதை, நடிகர்கள் குறிப்பாக வினிசியோவாக நடித்தவர், காமிரா எல்லாம் நன்றாக இருந்தது. படம் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதும் நிஜம். வேட்டையாடு விளையாடு பார்த்த பாவத்தை இதைப் பார்த்து போக்கிக் கொள்ளலாம்..
மேலும் படிக்க