வணக்கம்
எல்லாத் தமிழர்களையும் போலவே திரைப்படம் பார்ப்பது எனக்கும் மிகவும் உற்சாகமான ஒரு விடயம். தாங்க முடியா சோகத்தில் இருந்த அல்லது மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க நான் செல்வது திரையரங்கத்திற்குத் தான். ரசித்த திரைப்படங்களைப் பற்றி இந்த இடத்தில் ஒரு வரியாவது எழுதுவது என்று முடிவு செய்ததன் முக்கிய காரணம் பார்க்கும் படங்களை கொஞசம் சிரத்தை எடுத்துப் பார்க்கலாம் எனும் சுயநலம் தான். இந்த வலைப்பதிவுகளில் திரைப்படம் பற்றி எழுதியவர்களில் நான் பார்த்தவரை (ரசிகர் மன்றம் தவிர்த்த)
பார்க்கலாம் எவ்வளவு தூரம் உற்சாகமும் சிரத்தையும் இருக்கும் என்று.
இந்த பதிவை ஆரம்பிக்கக் காரணம் இன்று பார்த்த விட்னெஸ் என்னும் முன்னால் யீகோஸ்லோவிய பிரதேசமான குரோசியா தேசத்துப் படம். 80களில் டென்னிஸ் பித்து பிடித்த காலத்தில் ரசித்த வீரர் குரோஆன் இவனிசெவிக். அதற்குப் பிறகு குரோசிய தேசம் சம்பந்தமான ஒன்றரை மணி நேரம் கட்டிப் போட்ட விடயம் இந்தப் படம் தான். போர் சம்பந்தமான படங்கள் என்றால் எனக்கு அலர்ஜி. இறப்பை மலினப்படுத்துவது உண்மையான போரை விட இந்த போர் பற்றிய படங்கள் தான் என்பது என் எண்ணம். எந்த ஒரு போர்ப்படமும் மனதிலேயே நிற்ப்தும் இல்லை. சேவிங் பிரைவேட் ரேயான் கொலம்பியா ஹௌசின் விற்பனைத் தூண்டிலில் சிக்கி வாங்கிய சில படங்களில் ஒன்று என்றாலும், சொந்தக் கேசெட்டிலிருந்து இன்னமும் பார்க்க மனமில்லை. அப்படி இருந்தும் இந்த போர் சம்பந்தமான படம் என் கையில் சிக்கக் காரணம் , இந்தப் படத்துடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட little terrorist என்னும் குறும்படமே. அதைப் பார்க்கும் ஆவலில் இந்த படத்தின் குறுந்தகட்டை தூக்கி வந்திருந்தேன்.
முதலில் லிட்டில் டெர்ரரிஸ்ட் பற்றி.
கிரிக்கெட் விளையாடும் 7-8 வயது பாகிஸ்தானிய இஸ்லாமிய சிறுவன் பந்து பொருக்க வேலிக்கு இந்தப் பக்கம் வந்து விடுகின்றான். வேலியில் காவல் காக்கும் இந்தியப் படைவீரர்கள் அவனை ஒரு டெர்ரரிஸ்ட் என நினைத்து துரத்துகின்றார்கள்.
கண்ணி வெடி, பிரிவினையில் துண்டான கிராமம், சொந்த ஊரிலேயே தலைக்குடிமியைக் காண்பித்து "யார்" எனக் காட்டவேண்டிய பள்ளி வாத்தியார், பதேர்பாஞ்சாலியில் வரும் துர்க்காவை ஞாபகப்படுத்தும் வாத்தியாரின் மகள் என ஒரு அழகான சிறு ஓவியம் இந்தப் படம்.
witnesses ( Vinko Bresan Croatia) 2004
ரோசமான் பாணி படங்கள் வரிசையில் மேலும் ஒரு படம். அமோஸ் பெரோஸ், மெமெண்டோ, முல்ஹாலான்ட் டிரைவ் (கூடவே ஆய்த எழுத்து விருமாண்டி) என பலவிதங்களில் அடிக்கப்பட்ட ஒரு பாணியை இந்தப் படம் சிறப்பான முறையில்(என்னனப் பொறுத்த வரை) கை கொண்டிருக்கின்றது. படம் பார்ப்பவனை கஷ்டப்படுத்தி, அவனது கவனக்குறைவையோ அல்லது அவனது குறுகிய ஞாபகச்சக்திக்கோ சவால் விடும் விதமாக மற்ற படங்கள் இருக்க (குறிப்பாக மெமெண்டோ, முல்ஹாலண்ட்) இந்தப்படம் அந்த வகைகளுக்கு நேர் எதிராக இருந்தது, இந்தப் படத்தில் மேலும் ஒட்டவைத்து விட்டது. கதையின் ஓட்டத்தில் நாலைந்து ஆதாரப் புள்ளிகள். ஓவ்வொரு புள்ளியையும் திரைக்கதை இரண்டு தடவை சுற்றிவரும். புள்ளிக்கு உள்ளே இருப்பவர் / வெளியே இருப்பவர் பார்வையில் என்ற வகையில். முதல் தடவை அரைகுறையாக தெரியும் படலம் , இரண்டாம் சுற்றில் தெளிவாகும். படம் முடியும் தருவாயில் முழுக்கதையும் நம் மனதில் எந்தவித சிரமும் இல்லாமல் அழகாக விரியும். கணவனை போரில் இழந்ததும் இல்லாமல், இரு மகன்களை போருக்கும் மருமகளுக்கும் தார வார்க்கும் தாய், எந்த நாட்டுடன் (செர்பியா) போர் நடக்கின்றதோ அந்த நாட்டுக்காரன் ஊரில் கொலையாண்டதை விசாரிக்க தன் நாட்டு போர்வீரர்களையே சந்தேகிக்க வேண்டிய போலிஸ்காரன், கொலையாண்டவன் பொண்ணுக்காக கவலைப்படும் கொலைசெய்தவனின் அண்ணனின் காதலியான பத்திரிக்கை நிருபர், செய்த கொலையினாலும் அதை மறைக்க செய்ய வேண்டிய கொலையினாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வெடிகுண்டை வாயினால் கடித்துக் கொள்ளும் போர் வீரன் ( இந்தக் கொலைக்கு மட்டும் தானா?), போலிஸ் விசாரணையை பேரம் பேசும் மருத்துவரும் கூடவே மேயராகவும் இருப்பவர், செர்பியனுடன் குடித்தனம் இருந்து அவனைக் காப்பாற்றும் பொருட்டு ஓடி உயிரிழக்கும் குரோசிய குடித்தனக்காரி என உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்கள்.
குருகிய, போரின் காயம் பட்ட சந்துகள், சிறு சிறு வீடுகள், மங்கிய வெளிச்சம், வெருளும் விழிகள், குழந்தைகள் விளையாடாத ஊர் என போர் நடக்கும் தேசம் கண்ணுக்குள் வருகின்றது. நேரடி துப்பாக்கிச் சண்டை இரு இடத்தில் மட்டுமே திரைக்குள் வருகின்றது. அதுவும் துப்பாக்கி குண்டடிபட்டு விழும் மனிதர்கள் படத்தில் வரும் நேரம் இரண்டு நிமிடம் இருந்தால் அதிகம்.
எனக்கு பிடித்த காட்சி ( எல்லா "தமிழ்ப்பட" ரசிகர்களுக்கும் எனவும் சொல்வேன்). காதலனை வரவேற்க்க காதலி தயாராகின்றாள் வெளியே கார் வந்து நிற்கின்றது ஓடிச் செல்லுகிறாள். காரிலிருந்து காதலன் இறங்குகின்றான். ஒத்தக்காலுடன். வெறுத்துப் போகின்றாள். கால் இல்லா காதலனை காச் மூச் என கத்துகின்றாள். ஏன் தன்னிடம் சொல்லவில்லை என கூடவே காதலனின் காலணிகளை தூக்கி இவையெல்லாம் தெண்டம் தானே என எறியவும் செய்கின்றாள். எது சோகம் கால் போனதா கால் போனதை சொல்லாததா? அல்லது இரண்டுமேவா? திரைக்கதை சுழலுகின்றது. காதலியைப் பார்த்தவன் தாயைப் பார்க்கச் செல்லுகின்றான். நொண்டி நொண்டி வீட்டிற்கு செல்கின்றான். கதவைத் திறக்கின்றாள் தாய். ஒரு நொடி தயக்கம். தாயின் கண் மகனின் இடுப்புக்குக் கீழ் செல்ல எத்தனித்து மகனின் முகத்திலேயே நிற்கின்றது. என்னடா இப்படி இளைத்துவிட்டாய் உள்ளே வா என்கின்றாள். தாய் செண்டிமெண்ட் தமிழ்ப்பட உலகில் மட்டும் தான் உலவுகின்றது என எவராவது சொன்னால் இனி நிமிர்ந்து எதிர்கொள்ளலாம். அந்த குரோசிய தாயாக நடித்தவர் அற்புதமாக நடித்திருந்தார். போரில் இழந்த கணவனை புதைத்த அடுத்த நாள், காலை இழந்த மூத்த மகன் காதலியுடன் ஊரை விட்டு வெளியேற்றம் கூடவே கடைசி மகனும் போர் முனைக்கு வண்டியில் ஏறும்போது கண் கலங்கி வீட்டு வாசற்படியில் நிற்கின்றாள் புறநானுற்றுத் தாயாக.
நெடு நாளைக்குப்பிறகு ரசித்துப் பார்த்த படம். எனது லைப்ரரியில் கிடைத்தது. காசு கொடுத்து வாங்கிச் சேர்க்கும் நபர்கள் இந்த இடத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிகின்றது. www.filmmovement.com
மேலும் படிக்க