Saturday, February 21, 2009

நான்(ஏ) கடவுள் அல்லது என்னுள் கடவுள் இல்லை

படங்கள் பார்ப்பது குறைந்து விட்டது. நேரமில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் பல படங்களை பாதிக்கு மேல் பார்க்க முடிவதில்லை. இதற்கு என் ரசனை கன்னாபின்னாவென்று ஏறி, தரப்படங்கள் மட்டுமே பார்க்கும் கலை நாசி என்றேல்லாம் ஆகிவிட வில்லை. நீலப்படங்கள் அபரிமிதமாக கிடைத்து கேள்வி கேட்ப்பார் இல்லாது பார்க்கும் போது, ஒரு சில பல தேவைகளுக்குப் பிறகு அந்தப் படங்களில் சுவாரசியம் சுருங்கி(pun intended) எந்த இடத்தில் நிறுத்தினோம் என்னும் கவலை இல்லாமல் நிறுத்தி விட்டு தூங்கிய கால கட்டம் போல், இப்பொழுது முக்கால்வாசிப் படங்களும் அந்த நிலையை அடைந்து விட்டன. தியேட்டருக்குப் போவது சிறுவர் படங்களுக்கும், மிகப் பெரிய திரைத் தேவை இருக்கும் "பிரம்மாணடப்" படங்களுக்கு என ஆகிவிட்டது வேறு, வீட்டு டீவி மூலமாகப் பார்க்கும் படங்களுக்கு இந்த நிலையை அதிகரிக்கச் செய்து விட்டது. ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமில்லாமல் எல்லா மொழிப்படங்களுக்கும் இது தான் நிலையாகிவிட்டது. இந்த அதிவேக நாட்களில் என்னை முழுமையாக பார்க்க வைக்கின்ற படங்களை எளிமைப் படுத்திவிடலாம். Feel good படமா? விழுந்து விடுகின்றேன் - எளிதில். முழு வேக எங்கேயும் பிசிரோ, பிரோக்கோ இல்லாமல் ரவண்டு கட்டி அடிக்கும் அதிவேகப் படமா ? பாங்க் அடிக்கும், தலைக்குள் சுனாவுடனோ அல்லது புணாவுடனோ அலையும் டீன் எஜ் கொண்டாட்டமா, எந்தளவிற்க்கு வெக்கமில்லாத படமோ அந்தளவிற்கு அந்த படங்களை வெட்கமில்லாமல் பார்த்து விடுகின்றேன்மற்றபடி இந்தக் கலைப் அல்லது sophiscated படங்கள் என்னும் போர்வையில் வரும் படங்களிடம் தான் நான் பாடுபடுகின்றேன். பல சமயங்களில் இந்த வகைப் படங்களின் டைரக்டர்களின் புத்திசாலித்தன அதே சமயம் போலித்தனமான கலையார்வங்கள், அந்தப் படங்கள் மீதான அஜீர்னத்தை ஏற்படுத்தி விடுகின்றன. 80களில் இருந்து தமிழகத்திலும் இந்தியாவிலும் பெத்த பேரடைந்த டைரக்டர்களின் படங்கள் எந்தளவிற்க்கு ஹாலிவிட் படங்களினின் ஆதிக்கத்தில் இருந்து வந்தன என்பதை அதன் மூலப் படங்களை எதிர்பாராமல் பார்க்க நேர்ந்த போது அடைந்த துக்கம் சொல்லி மாளாது. once upon a time in america என்னும் படத்தில் வரும் கடத்தல் காட்சியில் அடைந்த சோகம், இன்னமும் என்னால் மணிரத்தினத்தின் படங்களை ரசிக்க விடுவதில்லை. அதற்கப்புறம் அவர் புத்திசாலித்தனமாக அடித்த திருட்டுக்களை காணும் போது வரும் கோபம் சொல்லி மாளாது. மணிரத்தினத்தின் பலத்த ரசிகையான என் மனைவியை, அவர் காப்பியடித்த சீன்களின் ஒரிஜினல்களை காட்டிக் காட்டி, மணிரத்தினத்தின் மீது அவருக்கும் வெறுப்பு ஏற்பட நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும் சில்வர் புல்லட் என்னும் படத்தில் கேவியழுகும் ஒரு நடிகனின் அதே நடிப்பை நாயகனில் நகல் எடுத்திருந்த கமலின் மீதான ஆர்வம் அப்பொழுதே அடிவாங்கியது. அதற்கு மேல் அவர் அவ்வை, தெனாலி, மகளிர் மட்டும் போன்ற அப்பட்ட காப்பி தவிர்த்து, அவர் காட்சி ரீதியாக சாப்பிடும் படங்களைப் பார்த்து வந்த வெறுப்பு ம்ஹூம். ஜெர்ரி லூயிஸ்ஸைப் பார்த்த போது நாகேசின் மீது வந்த கோபம் இன்னமும் குறையவில்லை. அதே போல் சைக்கோ, சம்மர் ஆஃப் 67 மற்றும் மிஸரி படங்களை பார்த்த போது பாலு மகேந்திரா மேல் வந்த கோபம் கொஞ்ச நஞ்சமில்லை. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏமாற்றப் படும்போது வரும் சோகத்தை விட ஒரு சோகம் வேறு எதுவும் இல்லை. சிட்டி ஆப் காட் படத்தின் சில காட்சிகளை அப்பட்டமாகக் கொண்ட ஸ்லம்டாக் மில்லியினர் என்னும் படம் ஆஸ்கார் பட்டியலில் முதலில் இருப்பதைப் போல ஒரு கொடுமை கிடையாது. ஒரு சில காட்சி தானே, அப்பட்டமான முழு காப்பி இல்லையே என்னும் சமாதானத்தையெல்லாம் , அந்தப் படங்களுக்கு அல்லது நடிகர்களுக்கு அல்லது டைரக்டர்களுக்கு கிடைக்கும் நேர்மையற்ற அதிஅங்கீகாரம் போக்கி விடுகின்றது. தொழில் நுட்பத்தை சுவீகரிக்கலாம் ஆனால் creativityஐ நகல் செய்வது கேவலமாக இருக்கின்றது.

அந்தச் சூழலில் வெளிச்சாயம் இல்லாமல் எடுக்கும் சில டைரக்டர்களின் தமிழ் படங்கள் தான் ஆச்சர்யம் தரவைக்கக் கூடுயவை. அப்படிப்பட்ட படம் தான் சமீபத்தில் பார்த்த நான் கடவுள். பாலாவின் எந்தப் படங்களிலும், வேறெங்கோ கொண்ட சாயல் இது வரையில்லை எனக்குத் தெரிந்து. சில விமர்சனக் கட்டுரைகளை படித்திருந்தாலும், வலதுசாரி சிந்தனைக்கார ஜெமோவின் வசனத்தில் வந்த படம் என்பதாலும் ஒரு மனச்சார்புடன் பார்க்க ஆரம்பித்தாலும், படம் இயங்கிய விதம் மனதை வசீகரித்து வார நடுவில் இருந்தாலும் என் தூக்க நேரத்தை தாண்டி படம் பார்க்க வைத்து விட்டது. இது கடந்த 5 அல்லது 6 வருடங்களில் நடக்காத ஒன்று. பாலாவிற்கும் மனநிலை தவறிய கதாபாத்திரத்திற்கும் இருக்கும் ஈர்ப்பு என்ன என்பது கவலைப்பட வேண்டிய ஒன்றா எனத் தெரியவில்லை. இருந்தாலும் அந்த மனநிலை தவறிய கதாபாத்திரங்களை கதையின் நடுவில் வைத்து சுழன்று கட்டியடிக்கும் அவறின் திறமை சுவாரசியமானது. அவரது முதல் படத்தில் இருந்து இந்தப் படம் வரையில் அந்த வகை கதாபாத்திரங்களை மையமாக வைத்து அதே சமயம் அந்த மையத்தைச் சுழன்று இயங்கும் கதாபாத்திரங்களின் தன்மை ஒவ்வொரு படத்திற்கும் சவாலாக மேலெழுவது பாலா தனக்குத் தானே விதித்துக் கொண்ட சவாலா தெரியவில்லை. மேலும் மனப்பிறழ்வு கொண்ட நபர்களின் மனப்பிறழ்வுக்கான காரணங்களும் படிப்படியாக அதிகரிக்கிறது. முதல் படத்தில் மனப்பிறழ்வு தலையில் ஏற்படும் காயத்தால் வருவது கூடவே அந்தப்படத்தில் சுழன்று இயங்கும் கதாபாத்திரங்களாக அன்பான ஆனால் சாதாரணமான குடும்ப நபர்கள்.
அடுத்தப் படத்தில், கொடூரமான தந்தைக்கும், அன்பான தாய்க்கும் பிறந்ததாலும் தந்தையின் கொடுமை தாளாமல் மனபிறழ்வு கொள்ளும் கதாபாத்திர மையம் அந்த மையத்தைச் சுற்றி சோகத்தில் விக்கித்துப் போன அம்மா மற்றும் நிராதரவற்ர தங்கை ஒருபுறமும், வசீகரமான தாதா மறுபுறம்.
அதற்கு அடுத்த படத்திலோ பிணங்களை தினப்படி எறிக்கும் சூழலில் வாழ்வதால் வரும் மனப்பிறழ்வு கொண்ட மையம், அந்த மையத்தைச் சுற்றி வசீகர திருடனான உடன்பிறவா சகோதரனின் அன்பு ஒரு புறமும், லாப நோக்கில்லாமல் கூட வாழ்வதால் மட்டுமே உண்டான கஞ்சா அழகியின் உயிர்ப்பான காதல் ஒரு புறம்.
இந்தப் படத்திலோ மனப்பிறழ்வு கொண்ட அதே சமயம் மதத்தால் அந்த மனப்பிறழ்வையே தெய்வாம்சமாக காட்டக்கூடிய கதை மைய்யம். அந்த மைய்யத்திற்கு சவாலான, ஒருவித விளிம்பு நிலையையும் தாண்டிய நிலையில் இருக்கும் நிராதரவற்ற கூட்டம் அந்த மைய்யத்தைச் சுற்றி. நிராதரவற்றவர்களை காட்டும் காட்சிகளின் நிஜத்தன்மை, இதே சூழலைச் சித்தரித்த ஸ்லம்டாக் படத்தின் காட்சிகளின் நிஜத்தன்மையைவிட பலமடங்கு அதிகம் எனலாம். கடைசியில் சில் காட்சிகளின் எடிட்டிங்கில் குறை யிருந்தாலும் இந்தச் சூழல் உள்ள கதைக்களனை கொண்டு சென்ற விதம் அருமை. மனநிலை தவறியவனை அகோரியாக காட்டும் தைரியம் வேண்டும். அவன் கஞ்சா நிந்தனை கெட்டதால் செய்யும் கொலைகளும், அந்தக் கொலையை விசாரனை செய்யும் நீதிமன்றத்தின் கூத்தும் (முக்கியமாக அந்த அகோரி அமர்ந்திருக்கும் ஸ்டைல்) ஒரு புறம் இருந்தாலும்(இது என் பார்வை), இந்தப் படத்தையே மறுபுறத்திலிருந்து அதாவது, இந்த அகோரிகள் உண்மையிலேயே அதிபுருடர்கள்(pun intended) அவர்கள் நல்லதும் கெட்டதும் செய்யும் அதிகாரம் கொண்டவர்கள் மற்றும் இந்தப் பிச்சைக்காரர்கள் தன் கர்மக்கடன் கழிக்க பிறந்தவர்கள் ஆகவே அவர்கள் எவ்வளவு சீக்கிரம் கடன் கழிக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு சீக்கிரம் மோட்சம் கூடவே இருக்கும் நேரத்தை களித்து இருந்தால் இன்னமும் நல்லது என நம்புவோர் பார்வையிலும் சிறிது இழுத்துப்பிடித்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.

பி.கு - இந்த இழுத்துப்பிடித்தல் தான் ஜெமோவைத் திருடனுக்கு தேள்கொட்டியது போல் ஆக்கியதா? அண்னன் மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் எழுதும் படத்தினைப் பற்றிய கட்டுரைகள் இந்தப் படத்தினை ரசிக்க மேலும் ஒரு பரிமாணமாக எனக்கு இருந்தது


மேலும் படிக்க