Donnie darko, Manic & 7G R Colony
போன இரண்டு வாரங்களில் குறித்து வைத்துக் கொள்ள நினைத்த படங்கள் நாலு. ஒரு படத்திற்கு ஒரு பதிவு தான் சரியான அளவு. எப்படி நேரத்தையும் முனைப்பையும் சரி பண்ணுவது என்பது இன்னமும் கைவரப்படாத விடயமாக இருக்கின்றது. இந்தப் பதிவிற்கு முதலாவதாக பார்க்க இருப்பவர்களின் அனுபவத்தை சிதைக்கக் கூடும். (ஸ்பாயிலர் அலர்ட்) donnie darko, Manic & 7G R Colony
முதலாவது டோனி டார்க்கோ என்னும் படம். என் முதல் பதிவில் சொன்னது போல படம் பார்ப்பவர்களின் கவனக்குறைவு, ஞாபகத்திறன் போன்றவற்றை குறிவைத்து அடிக்கும் படம்.
இந்த வகைப்படங்கள் "முதல்" தடவை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் பார்த்து முடித்தபின் முழுவதும் அனுபவிக்க முடியாத எதோ ஒன்று குறைவான அனுபவம் தான் எனக்கு கிடைக்கும். இரண்டாம் தடவை பார்த்தாக வேண்டிய கட்டாயம் கடுப்பையும் உள்ளூர ஒரு தன்னிரக்கத்தையும் கொடுக்கும். இருந்தாலும் ஒட்டு மொத்தமாக இந்த வகைப் படங்களைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான். எனக்கு படமோ புத்தகமோ எவர் விளக்கமும் இல்லாமல் அனுபவிப்பது தான் பிடித்தாக இருக்கின்றது. அந்த வகையில் இந்த பதிவின் மீதே எனக்கு ஒரு வருத்தமும் உண்டு. இது எவர் அனுபவத்தையும் கெடுக்கக் கூடாது என்பதாக. தமிழ்மணத்தில் பதியும் எண்ணமும் அதனாலேயே இல்லை. என் முதல் வாசிப்பில் இந்தப் படம் ஒரு சாதரணமான அதே சமயம் புத்திசாலித்தனமான படமாக பட்டது. மாத்திரைகள் மூலம் தன் மனநிலையை சீராக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சற்று பித்துசாலித்தனமான ( eccentricக்கை இப்படிக் குறிக்கலாமா?) பையனின் ஒரு நாள் இரவில் அவன் படுக்கையறையில் ஏதோ ஒரு விமான என்சின் வந்து விழும் அந்த கணத்திற்கு சற்று முன்பாக படத் திரைக்கதை ஒரு தொடுகோட்டு ( tangential) உலகத்திற்குச் சென்று உலவி விட்டு, திரும்ப வந்து நேர் உலகிற்கு வந்து இணைகின்றது. நேர் உலகில் நடக்கும், நடந்த, நடக்கப் போகும் அல்லது நடக்காத விடயங்கள் தொடுகோட்டு உலகில் வேறொரு கால வரிசையில் நடப்பதாக காட்டப்படுகின்றது. ஒரு சிறிய பணக்காரத்தனமான இடம், தாய் தந்தை அக்கா அண்ணன் தங்கை உறவு, பள்ளிக் கூடம், கட்டுப்பெட்டித்தனமான அல்லது அதற்கு தலைகீழ் எதிரான ஆசிரியர்கள், கட்டுப ்பெட்டித்தனமான தலமை ஆசிரியர், வேலைக்காகாத வண்டி உள்அழுக்குடன் இருந்தாலும் ஊருக்கு உபதேசிகள், தனிமையாக்கப்பட்ட பித்துசாலிகள் என கதை ஒரு ஒழுங்கைக் கொண்டிருந்தாலும் இந்த தொடுகோட்டு உலகம், நேரமில்லா பயணம் என ஒரு மேல்பூச்சை ஒரு கவன ஈர்ப்பாக வைத்திருப்பதாக பட்டது. அது தான் இந்தப் படத்திற்கு ஒருவகைக் குழுவினர் சார்ந்த ( cult ) படமாக மாற்றியது போலும். இந்தப் படத்தை இரண்டாவது முறை, இதை இயக்கினவர் பார்வையில் பார்க்கும் உத்தேசம் உள்ளது. (எப்போழுது என்று தான் தெரியவில்லை). அப்படிப் பார்த்த பின் வேறுவகை அனுபவங்களை கொடுக்கக் கூடிய் சாத்தியக் கூறு இந்தப் படத்திற்கு உண்டு என மட்டும் சொல்லலாம். பொதுவாக "சினிமா" ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
அடுத்த படம் டான் சீடல் நடித்த மேனிக் என்னும் படம். ஹாலிவுட் பட நடிகர்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என் கவனத்தை என்னையறியாமலே கவர்வார்கள். சிறு வேடத்தில் இருந்தாலும். அது அரசியல்ரீதியாக என்றெல்லாம் இல்லாமல் என்னுள் இயற்கையாக வரும் ஒன்று. என்னை ஒரு கருப்பனாக பார்த்துக் கொள்வது ஒரு ஆசியனாக அல்லது இந்தியனாக பார்ப்பதை விட இயல்பாக நெருக்கமாக உணர்கின்றேன். சிறு வயதில் மேற்கிந்திய வீரர் ரிச்சர்ட்ஸ் கவர்ந்த அளவு என்னை கவாஸ்கரோ, அமர்நாத்தோ, வெங்சர்க்காரோ கவர்ந்ததில்லை. சமீபங்களில் கூட லாரா என்னைக் கவர்ந்ததை விட குறைவாகத்தான் டெண்டுல்கர் இழுக்கின்றார். அந்த வகையில் இவர் என்னில் mission to mars காலத்தில் என் கன்ணில் பட்டது ஆச்சர்யமில்லை. பார்த்தால் அதற்கும் முன்பாக Devil in a Blue Dress, Things to Do in Denver When You're Dead என்ற படங்களில் நடித்திருப்பதாக கூகுள் சொல்கின்றது. என்ன வேடம் என எனக்கு மறந்து விட்டது. டிராபிக் எல்லோருக்கும் தெரிந்த படம். இவர் இந்த வருட சிறந்த நடிகர் பட்டியலில் வந்தது முதலில் மகிழ்ச்சி அதிர்ச்சியாக இருந்தது. ஹோட்டல் ருவாண்டா என்னால் பார்க்க முடியாத கதை கொண்ட படமாக இருந்தாலும், எப்படியாவது மனதைத் தேற்றி பார்ப்பேன் என நினைக்கின்றேன். சரி இந்தப் படத்திற்கு வருவோம். ஒரு டிஜிடல் வீடியோ காமெராவைக் கொண்டு "கையால்" எடுக்கப்பட்ட படம் என்னும் எண்ணத்தைக் கொடுக்கும் அளவிற்க்கு ஒரு அசைவு உள்ளது இந்தப் படத்தில். ஒரு விவரணப்படத் தோரணைக்காக போலும். படம் ஒரு மனநிலை மையத்தில் அமைந்த கதை. டான், இந்த மையத்தின் டாக்டர். இந்த மையத்தில் பல்வேறு நோயாளிகள். ஆத்திர வசப்படும் ஒரு இளைஞன், குற்றவியல் தண்டனைக்காக இந்த மையத்திற்கு வருவதிலிருந்து கதை ஆரம்பம். ஆத்திரம் என்னும் உணர்வை ேற்கத்தியர்களும் தமிழர்களும் வேறு வேறு வகையில் கொள்கிறார்ளோ எனப்படுகின்றது. தமிழில் இருக்கும் ஆத்திர உணர்வுகள், அதன் வெளிப்பாடுகள், மேற்கத்தியருக்கு ஒரு வியாதியாகப் பார்க்கலாமோ என அடிக்கடி தோன்றும். இந்தப்படம் பார்க்கும் போது என்னுடைய ஆத்திர அளவுகளும் நினைவு வந்து அது நோயாக இருக்குமோ என சந்தேகிக்க வைத்ததென்னவோ உண்மை. தமிழ் சூழலில் "ஆத்திரக் குணம்" ஒரு புகழ்சியான ஒன்றாக கருதப்படுகின்றதா என தெரியவில்லை. கண்டாமேனிக்கு ஆத்திரப்படுவன் தான் பல படங்களின் கதாநாயகன். அப்படிப்பட்ட ஒருவன் தான் இந்தப் படத்தில் நோயாளிக் கதாநாயகன். ஒரு பாலியலுக்கு உள்ளான இளைஞி, ஆத்திரத்தில் தாயிடம் சண்டை போட்டு மண்டையை உடைத்த ஒரு கோத்திக் இளைஞி, ஜெகில் ஹைட் நோயுள்ள அதாவது இரட்டை மன நிலை உள்ள கூடிய விரைவில் ( ?) விடுதலையாகக் கூடிய பணக்கார இளைஞன், பெடொபைளான வளர்ப்புத் தந்தையிடம் வளர்ந்த, படுக்கையைவிட்டு எழுந்திருக்காத இளைஞன், அனைவரையும் வம்புக்கு இழுக்கும் தடியான வெள்ளை இளைஞன் என படம் இவர்களை, இவர்களுக்கு இடையே நடக்கும் நட்பு மற்றும் விரோதங்களை பதிவு வெறுமன செய்கின்றது. வேறுவகையில் இந்தப் படம் ஏனோ என்னைத் தொடவில்லை.
இந்தப் பதிவுக்கு கடைசியான படம் 7G ரெயின்போ காலனி. "தீர்ப்பை மாத்திச் சொல்லுங்கடா" என்னும் பரம்பரைப் படங்களுக்கும், "நீங்க நல்லவரா கெட்டவரா" என்னும் போலி வெட்டி பந்தாப் படங்களுக்கும் இடையில் ரௌடி கதாநாயகன் + தேவதை கதாநாயகி என்ற ஒத்தை கிளிசேவைத் தவிர வேறுவித கிளிசேக்கள் எதுவும் உறுத்தாத நல்ல இசையுடன் கூடிய ஒரு படம். ஆட்டோகிராப் படம் கூட பல இடத்தில் உறுத்திய அளவு இதில் இல்லை. ரௌடி கதாநாயகன், தேவதை கதாநாயகி காம்பினேசனை என் நிஜ வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட பார்த்திருக்கின்றேன். அம்மா கார் ஜன்னலை தொங்கிக்கொண்டு கத்தியும் கேட்காமல் காரில் ஏறிப் பறந்த டாக்டருக்கு படித்த பெண், பின் சிகரெட் சூட்டை கையில் வாங்கி மௌனமாக அழுததை பார்த்திருக்கின்றேன். அப்படி இருக்கும் போது ரௌடி தேவதை காம்பினேசனை கிளிசே என்பது கூட ஒருவகை கிளிசே தான் போலும். ஸ்பானிஸ் மற்றும் ஈராணியப் படங்கள் போல ஒரு சில தமிழ்ப்படங்களாவது வருவதற்கு ரொம்ப நாள் காத்திருக்க தேவையில்லை எனும் நம்பிக்கையை இந்தப் படம் தருகின்றது.
தங்கமணியின்
2 comments:
//தங்கமணியின் இந்தப் பதிவிற்கு இசைவான ஒரு தென்னமெரிக்கப் படம் நாலைந்து நாள் முன்னால் தான் பார்த்தேன். அதனை அடுத்த வாரம் தான் எழுத வேண்டும்.//
படம் பேரையாவது சொல்லியிருந்தால் சஸ்பென்ஸ் இல்லாமலிருந்திருக்கும்!! டானி டார்க்கோ ஒரு சுவாரஸ்யமான circular narrative. ஆனாலும், சில டிம் பர்ட்டன் படங்களைப்போல, கொடூர நகைச்சுவையா (black comedy) அல்லது திகில் படமா என்று புரியாத இரண்டுங்கெட்டான் ரீதியிலேயே இருக்கும். அடுத்து டிம் பர்ட்டனின் Corpse Bride என்று ஒரு படம் வருகிறது. ட்ரெய்லரே சுவாரஸ்யமாக இருந்தது. வன்முறை எனும்போது - சந்தர்ப்பம் வாய்ப்பின், விருப்பம் இருப்பின் The Clockwork Orange ஐயும் பார்க்க முயலவும்:
//எனக்கு படமோ புத்தகமோ எவர் விளக்கமும் இல்லாமல் அனுபவிப்பது தான் பிடித்தாக இருக்கின்றது.//
இதையும் குறித்துக்கொண்டாலும், படம் என்றால் தானியங்கித்தனமாக உளறத்தொடங்கிவிடும் என் வாயைச் சுலபத்தில் மூடமுடிவதில்லை: மன்னிக்க!!
மாண்ட்ரீஸர்,
மன்னிக்க எல்லாம் எதற்கு? உண்மையில் படத்தையோ புத்தகத்தையோ யாராவது "விளக்கினால்" தான் எரிச்சல் வரும். மற்றபடி யாராவது நல்ல படத்தைப் பற்றி சொன்னால் உடனே பார்த்து விடத் தான் முயல்வேன். ஆகவே ஏதும் நினையாமல் படங்களளக் கை காட்டினால் மிகவும் நன்றியுடன் பெற்றுக் கொள்வேன். தங்கமணியின் பதிவிற்கு இசைவான படம் என்று சொல்லவந்தது CHAC - Rain God என்ற படத்தைப் பற்றி. கிடைத்தால் பாருங்கள். Cloakwork Orange மூன்று முறை லைப்ரரில் இருந்து எடுத்து வந்து பார்க்க முடியாமல் திருப்பிக் கொடுத்துள்ளேன். நாலாவது முறை என்னவாகிறது எனப் பார்ப்போம், (:-).
நன்றி,
அனாதை
Post a Comment