Thursday, April 09, 2009

Searchers - தேடுபவர்கள் - 1956 (Spoiler Alert)

சிறு வயதில் காமிக்ஸ் படிக்கும் காலத்தில் அறிமுகமான வெஸ்ட்ர்ன் கௌவ் பாய் கதைக் களன்கள் மீதான ஈர்ப்பு, இன்றளவும் தொடர்கின்றன. கௌவ் பாய் கதைக் களன்களின் முக்கியமாக அமெரிக்க இந்தியர்கள் வரும் களன்களில் உள்ளுர உறைந்திருக்கும் இனவெறி, ஆரம்ப காலங்களில் உறைக்காதது பல காலங்களுக்கு வருத்தத்தைத் தந்ததுண்டு. இருந்தாலும் இந்தக் கதைக் களன் மீதான ஆவல் குறையவில்லை தான்.

பல ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தை பார்த்திருந்த போது, இதனுள் உறைந்திருந்ததாக எனக்குப் பட்ட இனவெறி இந்தப் படத்தினை அவ்வளவாக அப்பொழுது இரசிக்க விடவில்லை. சில காலம் முன், இந்தப் படத்தைப் பற்றி எனக்குப் பிடித்த அமெரிக்க டைரக்டர்கள் இதைப் புகழ்ந்து பேசியதைப் படித்து , இந்தப் படத்தை திருப்பப் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். அகிரோ குரொசோவாவிற்கும் குரு எனப் பேசப்படுகின்ற இந்த்ப் படத்தின் டைரக்டர் ஜான் ஃபோர்ட் பல வெஸ்ட்ர்ன் படங்களை இயக்கி இருக்கின்றார். நான் பார்த்த இவரது சில படங்களில் அமெரிக்க இந்தியர்களை ஒரு கெட்ட காட்டுமிராண்டியாகவும், ஒரு துணிச்சலான, சொந்தமிருந்தும்/ இல்லாமலும் தனியாளான கௌபாய் ஒருவர் சாகசங்களால் "காட்டுமிராண்டி"களை வெல்லும் வகையான கதைக:ளாகத் தான் இருந்தது. ஒரு மேல் பார்வையில் இந்தப் படமும் அந்த வகைப் படமாகவே, பல வருடங்களுக்குமுன் பார்த்த போது எனக்கு இருந்தத என்பதையும் சொல்லியாக வேண்டும்

சில மாதங்களுக்கு முன், பராக் ஓபமா ஜெயித்த பிறகு பார்த்த The Birth of a nation என்னும் அப்பட்டமான இனவெறிப் படம் பார்த்த அனுபவம் தனியாக இருந்தது. சாதாரண மக்களிடையே உள்ளூர உறைந்திருக்கும் இனவெறி/சாதி வெறி/ஹிப்போகிரேசித் தனங்ளை ஒரு காலரீதியாக அந்தந்த காலகட்டங்களில் புகழடைந்த்ருக்கும் சின்மா படங்கள் (இலக்கியங்களையும் தான்) வாரியாக பார்க்கலாம் என நினைக்கின்றேன். ஒரு பழைய தமிழ்ப்படத்தில், ஒரு போலிஸ்காரர் ஒரு மிட்டாமிராசிடம் பேசும் வசனங்கள், ஒரே சட்டம் எந்த வகைகளில் மேல் மட்டத்திற்கும்/கீழ் மட்டத்திற்கும் பாய்ந்தது எனக் கோடி காட்டும். 90களில் கூட "எஜமான் காலடி மண்ணெடுத்து" எனப் பேசும் அப்பட்டமான ஜாதீய படங்களின் வெற்றி, உள்ளூர உறைந்திருக்கும் ஜாதி வெறியைத் தான் காட்டியது எனலாம். அது போலவே அமெரிக்க வெஸ்ட்ர்ன் படங்களின் ஆதிகால இனவெறிப் படங்களின் வெற்றி அந்தக் காலக்கட்டத்தின் உள்ளுரையாகக் கொள்ளலாம். 60, 70, 80களில் வந்த வெஸ்ட்டர்ன் படங்களில் அதுவும் வெற்றிபெற்ற படங்களின் போக்கு மாறிக்கொண்டிருப்பதை இந்த வகைப் படங்களை தொடர்ந்து பார்ப்போர் உணரலாம். அந்த வகைகளில் இந்தப் படமும் "அமெர்க்க இந்திய காட்டுமிராண்டித்" தனத்தைக் காட்டியதோடு நில்லாமல் வெள்ளையர்களின் காட்டிமிராண்டித்தனத்தை"யும்" காட்ட முனைந்ததாக , இப்பொழுது பார்த்த போது பட்டது. எல்லா வற்றையும் விட இந்தப் படத்தை இதன் காட்சிரூபத்திற்க்கும், உள்ளே இருக்கும் காட்சிமாந்தர்களை எந்தவகயில் உயிர் கொடுத்து அவர்களை உருவாக்கியிருக்கின்றார் அதுவும் 1956ல் என்பது தான் இந்தப் படத்தின் வெற்றி எனக் கொள்ளலாம் (Spoiler Alert)(
டெக்சாஸ் மாநிலம் - உள்நாட்டுப் போர் முடிந்து ஓரிரு வருடங்கள். முதல் காட்சியிலேயே ஒரு அற்புதமான நிழலுருவப் படம்.




பிற்காலங்களில் இந்த நிழலுருவப் படங்கள் ஒரு கிளிசேவாக மாறி அஜீர்ணப்பட்டிருந்தாலும், இந்தப் படத்தில் அதன் பழமைக்காக ரசிக்கலாம்.

எல்லைப்புரத்தில் குடியுருக்கும் ஒரு வீட்டில் கணவன் மனைவி, இரு பெண்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் இரு நாய்கள்.




அவர்கள் வீட்டிற்கு வருபவராக, உள்நாட்டுப் போரில் தோல்வியுற்ற கான்பெடரசிக் கார, எல்லைவீட்டு கணவனின் அண்ணனாக, (தம்பியாகக்கூட) கதாநாயகன் ஈதன் அறிமுகம்.




படத்தின் ஓரிரு காட்சியிலேயே இந்தக் கதாநாயகனின் கதாப்பாத்திரம் கோடுகாட்டப் படுகின்றது.




அடுத்த நாள் ஒரு பாதுகாவலர் கூட்டம் வந்து இந்தக் குடும்பத்து ஆண்களை துணைக்கு கூப்பிட வரும்போது, ஈதனுக்கும் அவனது அண்ணன் பொண்டாட்டிக்கும் இருக்கும்/ இருந்திருக்கும் உறவு கோடி காட்டப் படுகின்றது. ஈதனின் உடையை அண்ணன் பொண்டாட்டி கருனையுடன் வருடும் போதும்,





வெளியேறும் போது விடை கொடுக்கும் இடத்திலும் ,





இவர்களது உறவை, அந்தப் பாதுகாவலர் தலைவர் முகத்தில் காணலாம். இந்தப் படத்தில் இருக்கும் வெளிப்புறக் காட்சிகளின் தாக்கம், எவ்வளவோ படங்களில் வந்துவிட்டது.





பாதுகாவலர் கூட்டம் திரும்ப வீட்டிற்கு வரும்போது வீடு சின்னாபின்னப் படுத்தப்பட்டு, வீட்டின் இரு பெண்களும் அமெரிக்க இந்தியரால் தூக்கிச் செல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இந்தக் காட்சியின் தாக்கம் அப்படியே ஸ்டார்வார்ஸ்ஸில் உருவப் பட்டிருப்பது ஆச்சர்யம் இல்லை.




ஜார்ஜ் லூகாஸ்ஸிற்கும் ஜான் ஃபோர்ட் ஒரு ஆதர்சம் தான்.


அந்த இரு பெண்களையும் தேடிச் செல்வது தான் இந்தப் படத்தின் கதை. முதல் தேடலில் ஒரு கோட்டில் அமெரிக்க இந்தியர்களும் மறு கோட்டில் வெள்ளையர்களும் வரும் இந்தக் காட்சியும் பின்னால் பலவாறாக சுவீகாரம் செய்யப்பட்டது.



ஆரம்பத்திலேயே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு விட்டது தெரிந்து ஈதன் பழிவாங்கும் வெறியில் இருக்க, கூடவே 1/8 செரொக்கி என்னும் அமெரிக்க இந்திய ரத்தம் கொண்ட மார்டி என்னும் வளர்பு மகன் , உண்மையான தேடல் முயர்சியில், ஈதனுடன் இணைந்து கொள்கின்றான். மார்டிக்கு மற்றொரு பெண்ணான டெப்பியையாவது காப்பாற்றும் எண்ணம். நேர்வாக்கான பார்வையில் இந்த மார்டி கதாபாத்திரம் தான் கதாநயகன் போலவும் தோன்ற வைத்திருப்பதால் தான் , இந்தப் படத்தின் உள்ளுரை இனவெறி மட்டாக்கப்பட்டதாக நான் புரிந்து கொள்கின்றேன்.



இரண்டு வருட காலம் பனிக்காலத்தையும் சேர்த்து சுத்தி, ஊருக்கு வருகின்றனர் மார்டியும் ஈதனும். அங்கே இருக்கும் ஒரு வீட்டில் தான் மார்டியுன் காதலி.



துடிப்பான பெண்ணின் காதலையும்



சற்று தள்ளி வைத்துவிட்டி திரும்ப ஒரு துப்பு கிடைத்து கிளம்பும் ஈதனுடன் சேர்ந்து கொள்கின்றான் மார்ட்டி. அமெர்க்க இந்தியர்களுடன் வாழ்ந்த டெப்பியையும் கொல்லக்கூடிய வனாக வெறியேறிவிட்ட ஈதனுடன், டெப்பியை காப்பாற்றவே ஈதனுடன் கிளம்புவதாக காதலியிடம் சொல்லிச் செல்கின்றான் மார்ட்டி.

பின் ஒருவாறாக அம்ரிக்க இந்தியக் கூட்டத்தை கண்டடைகின்றனர்.



கடத்திச் சென்ற ஸ்கார் (வெட்டுக்காயம்) என்னும்அமெரிக்க இந்தியனுடன் வியாபாரம் பேசுவதாக அமர்ந்து வேவு பார்கின்றனர்.



அமெரிக்க இந்தியர்கள் வெள்ளையர்களைப் பிடித்தால் அவர்கள் தலையின் தோலை
முடியுடன் வெட்டி வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்ததை காட்டி இவர்களை மிரட்ட ஸ்கார், அந்த வெட்டிய முடிகளை இவர்களிடம் காட்ட தன் ஒரு மனைவியை ஏவுகின்றான்.




அப்பொழுது தான் ஈதனும் மார்டியும் டெப்பியை காண்கின்றனர்.




பின் அமெரிக்க படையுடன், இந்த அமெர்க்க இந்தியக் குடியிருப்பை தும்சம் பண்ணத் திட்டம் போட, மார்டி டெப்பியை காப்பாற்ற அவகாசம் கேட்டுச் செல்கின்றான்.




மார்டி டெப்பியைக் காப்பாற்ற, அமெரிக்கப் படை குடியிருப்பை தும்சம் செய்கின்றது. பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஈதனும் , ஸ்காரின் தலைமுடியை



வெட்டுவதாக காட்சியமைத்து இருந்தது "பழி வாங்கும்" உணர்ச்சியை தூக்கிக் காட்டவா அல்லது அமெரிக்க வெள்ளையினத்தின் "காட்டுமிராண்டித்தனத்தையும் "கோடு" காட்டவா என்பது விவாதத்திற்கு உரியது தான்.பின் டெப்பியையும் ஈதன் துரத்துகின்றார், மார்ட்டி தடுத்தும் கேட்காமல்.




அவளைத் துரத்திச் சென்று தூக்கி, மனம் மாறியவராக "வீட்டிற்கு போகலாம்" எனக் கூறும் போது தியேட்டர்களில் கைத்தட்டல் பிளந்திருக்கலாம்.




பின் ஊருக்கு வந்து டெப்பியைச் சேர்த்தவுடன், எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க செல்கின்றனர், ஈதனை விட்டு விட்டு. தனியாளாக




திரும்ப எங்கோ செல்வதுடன் படமும் முடிந்துவிடுகின்றது. படம் பார்த்து முடிந்தவுடன் இதன் அற்புதமான வெளிப்புறக் காட்சிகள் மனதில் இருந்ததைவிட உள்நாட்டுப் போர் அப்பொழுது தான் முடிந்ததாக காட்டப்படும் இந்தப் படத்தில் மருந்துக்கும் கருப்பினத்தவரை காண்பிக்காதது ஒருவகை உறுத்தலாக இருந்தது எனலாம். சினிமா மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புவபர்களுக்கு , இந்தப் படத்தில் பல பாடங்கள் சொல்லப் பட்டிருக்கின்றது. தவறவிடக் கூடாத படம்

0 comments: