Sunday, April 22, 2007

Andrei Rublev / ஆண்ட்ரெய் ரூப்லெவ்

இயக்கம் :: ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கி

60களில் ரஷ்யாவின் மட்டுறுத்தலுக்கு உட்பட்ட படம் என்று டிவிடியின் பின் அட்டையில் பார்த்தவுடன் இதைப் பார்க்கலாமோ எனத் தோனியது. டைரக்டர் பெயரும் , படப்பெயரும் மிக நெருங்கியது கூட ஆவலைத் தூட்டியிருக்கலாம். டார்க்கோவ்ஸ்கி பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருந்தது ஆனால் முழுதாக தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் படம் பார்க்கும் முன் கூகிளிடவும் கஷ்டம். (இல்லாவிட்டாலும் சில சமயம் கஷ்டம் தான்). நாடோடி மண்ணன் பாணியில் கருப்பு வெள்ளை மற்றும் கலர் என்று பின் அட்டை பட நிலவரம் சொல்லியது. படக்கதையைப் பற்றி ஒன்றும் காணவில்லை.

ரஷ்யன் மற்றும் ஜெர்மானிய படங்கள் மீது அவ்வளவு உற்சாகம் ஏற்படுவதில்லை இப்போதெல்லாம். காரணம் இந்த உற்சாகம் என்னும் வார்த்தைதான். இது வரை பார்த்த படங்கள் இந்த உற்சாகம், கிண்டலான நகை போன்று மனதை குதூகலிக்கவிடாமல் , ஒருவித சோகம் சார்ந்த, மனவிரக்கம் கொள்ள, மனதைச் சோதிக்க வைக்கும் படங்களாக இருப்பது தான். இந்த இசையோ இன்னமும் கேட்க வேண்டாம். ஏன் இவர்களுக்கு இப்படி? இல்லை நான் பார்த்த படங்கள் தான் இப்படியா?

பட ஆரம்பித்தவிடன் ஒரு பரபரப்பான சூழல். ஓரிடத்தில் சிலர் அங்குமிம் இங்கும் ஏதோ எடுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த காமிராவிம் கூடவே சுத்துகின்றது. பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் காமிரா ஒரிடத்தில் இருக்க கலைஞர்கள் முன் நடித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது காமிரா கோணம் நகரும் , முன் செல்லும் அல்லது பின் வாங்கி நிற்கும். இதிலோ ஆரம்பத்தில் இருந்து ஓட்ட அசைவு தான். காமிராவும் மக்களும் ஏதோ ஒரு நடன ஒழுங்குடன் அசைந்து கொண்டிருக்கின்றார்கள் கட்டிட மாடிக்கு ஒருவர் ஓடுகின்ரார். காமிராவும் ஓடுகின்றது. மூணு அல்லது நாலு மாடி தொலைவில் இருந்து காமிரா கோணம் ஜன்னல் வழியே பாய்கிறது, கீழே மக்கள், சற்றுத் தொலைவில் ஒரு நீண்ட ஆறு அதில் ஓடங்கள் அல்லது கப்பல்கள் ஏதோ ஒரு ஓழுங்கில் அல்லது ஒழுங்கிலாமல். கீழூ கயிரை அறு என்று ஒருவர் கத்த கயிறு அறுபட ஏதோ ஒன்று மேலே பறக்கின்றது. ஒருவர் பலூன் போன்ற ஒன்றில் தொங்கிக் னொண்டிருக்கின்றார்.



நான் பறக்கின்றேன் பறக்கின்றேன் என்று கத்த பலூன் வேகமாக நகருகிறது. காமிராவும் தான். பலூன் வேகமாக நகர, கீழே நிலமும் வேகமாக நகருகின்றது. மேலே இருந்து கீழே உள்ள இடைவெளி குறைய குறைய தரை வேகமாக தெரிந்து தடாலென்று ஒரு சத்தம். பார்த்தால் பறந்தவர் கீழே கிடக்கின்றார். பாரதிராஜா கட் சாட் போல (டார்கோவ்ஸ்கி மன்னிக்க) ஒரு குதிரை கீழே விழுந்து திரும்ப மேலெழுகின்றது. இது என்ன படிமம் என்று தெரியவில்லை. நெட்டில் தேடவும் அலுப்பு. இந்தப் படம் முழுவது குதிரை படிமம் வந்து கொண்டே இருக்கின்றது. படிமங்கள் மேலே ஏனோ ஒரு சுவாரசியம் குறைந்து வருகின்றது. யாரோ போடும் விடுகதையை எதற்காக யாரோ அவரவர் வழியில் விளக்கிக் கொள்ளவேண்டும்? இது என்ன விளையாட்டு இது? இந்த எலிட்டிசத்திற்கும்(மேட்டிமைத்தனம்?) படிம விளையாட்டிற்கும் ஏதோ ஒரு போலித் தொடர்பு போல ஒரு உணர்வு. இந்த தமிழ் இணையங்களில் இந்த படிம விளையாட்டை ஓரிருவர் ( எனக்கு பிடித்தவர்கள் கூட :-) ) அளவுக்கு மீறி விளையாடி வாந்தியெடுக்கும் நிலைக்கு வந்ததால் விளந்த பின் விளைவா இது எனத் தெரியவில்லை.

அந்த பட முன்னுரைக்கு (?) பின் கதை கதைமாந்தருடன் ஆரம்பமாகின்றது. ஒரு ரஷ்ய ஒதுக்குப்புற கிறித்தவ கூடாரத்திலிருந்து மூவர் (ரூப்லாவும் அவர் நண்பர்களும்) ஊரைவிட்டு விலகி மாஸ்கோ செல்ல முனைகின்றார்கள். மாஸ்கோவில் சிற்ப மட்டும் ஓவிய தொழிலிற்காக செல்ல திட்டமிட்டு செல்கின்றனர். சதுப்பு நிலங்கள் - மழை -




ஏனோ இதைத் தொடரும் காட்சி எப்போதோ பார்த்த பெர்க்மானின் செவன்த் சீல் என்னும் மற்றுமொரு கருப்பு வெள்ளை படத்தை நினைவீட்டியது. மரணம் செல்லும் இடங்களாக இருந்த அந்தப் படத்தை மற்றுமெருமுறை பார்க்கவேண்டும். தூரத்தில் ஒரு கும்பல் மழைக்கு ஒதுங்கி இருக்கின்றது. உள்ளே மக்கள் குதூகலமாக குடித்துக் கொண்டு இருக்க, ஒரு விதூகன் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார் பாதிரிகளை கிண்டலித்தவாறு.




மிகவும் குதூகலமாக ( இந்தப்படத்தில் முதலும் கடையுமாக) இருந்த இந்த இடத்தில் அந்த பாதிரிகளும் மழைக்கு ஒதுங்க, ஏனோ அந்த இடமே சோகத்தில் ஆழ்கின்றது. பாதிரிகளில் ஒருவர் விதூகனை, சாத்தானோடு ஒப்பிடுகின்ரார். இப்பொழுது குதூகலம் போன இடம் தெரியாது. பாதிரிகளில் ஒருவர் சற்று லேட்டாக நுழைய , பின்னாடி அரசாங்க காவல் நாய்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த விதூகனை நாலு சாத்து சாத்தி கைது செய்து இழுத்துப் போகின்றார். 1400களில் ரஷ்யாவில் கிறித்தவம் அதனது அந்தக்கால இருகல்களுடன் உள்ளே நுழைந்த சமயம் போலும்.

படம் முழுவதும் ரூப்லெவ் என்பவரின் இருபதுகால ஆண்டுகளின் பல சம்பவ கோர்ப்பாக, அவர் பாதிரியாக இருந்த மனநிலையை காட்டியவாரு , அந்தக்கால ரஷ்ய வரலாற்றையும் கோடிட்டு காட்டி இருக்கின்றது.


அடுத்த சம்பவமாக, ரூப்லெவ், அந்தப் பகுதியில் இருந்த நாட்டுப்புற சமய கொண்டாட்டங்களை, ஒரு பாதிரியாக பார்வையிட நேருகின்றது. அந்த ஊர் வசந்த விழா போல ஆண்களும் பெண்களும் உற்சாகமாக ஓடிக்கொண்டும் அங்கங்கே கலவியில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கின்றனர். பாதிரி திகைப்புடன அவர்களை பார்க்கின்றார். விலகி ஒதுங்காமல், ஏனோ ஒளிந்திருந்து அவர்களை கண்ணொட்டம் இடுகின்றார். சில ஆண்கள் அவரைப் பிடித்து கட்டி வைக்கின்றனர். உங்கள் குருமார்களிடம் சொல்லி எங்களைத் தொல்லப் படுத்துவாய் என்று அவரை ஏசுகின்றார்கள். (வார்த்தை விளையாட்டு அல்ல). அப்போழுது அவரை மார்ஃவா என்ற ஒரு பெண் சந்திக்கின்றாள். இருவரும் அவரவர் கண்னோட்டத்தை வெளிப்படுத்தும் உரையாடல் நன்றாக வந்திருந்தது.




அவரது கையும் காலும் கட்டியிருக்க அந்தப் பெண் அவரிடம் காதலைப் பற்றி பெருமை சொல்லி அவரை கட்டி அணைக்கின்றாள். மிகவும் பதட்டமானவராகி தன்னை அவிழ்த்துவிடச் சொல்ல, அந்தப் பென்ணும் அவரை விடுவிக்கின்றாள். பதட்டத்துடன் அந்த இடத்திலிருந்து அவர் ஓட, அவர் ஓடுவதை ஒரு நக்கலுடன் பார்த்துக் கொண்டே இருக்கின்றாள் அவள்



அடுத்த நாள் அவர் தன் குழுவினருடன் ஒரு படகுத் துறையில் சேரவும், அங்கே அரசாங்த்தினர், நாட்டுபுற சமய கொண்டாட்ங்கள் நடத்திவர்களை துரத்திப் பிடிக்கின்றது. ஒரு கடவுள் கொள்கையில்லாததால் அவர்களுக்கு அது நிகழ்கிறது என்று இவரது குழுவில் இருந்த ஒருவர் சொல்கின்றார். இவரது படகுக்கு மிக சமீபமாக, அந்த மார்ஃவா என்ற பெண் போலீசிடமிருந்து தப்பி ஆழமான ஆற்றில் கரை தெரியாத திசை நோக்கி நீந்தி செல்கின்றாள். இவர்கள் ஏதும் செய்யவில்லை.




மாதாகோயில் கட்டடவேலை மெதுவாக நடக்கின்றது. இளவரசரின் கட்டிட வேலை அது. ஒருவழியாக அந்தக் கட்டிடம் எழ, இளவரசரின் தம்பி டார்டார் என்னும் ரஷ்யர் இல்லா இனத்தாரின் உதவியுடன் அந்த இடத்தை நிர்மூலம் செய்கின்றான், இந்த டார்டார் என்று அழைக்கப்படும் இனம் சீன இனத்தவர் போல் உள்ளனர், அந்த சமயம் வலுவுடன் இருந்த மங்கோலியராக இருக்கக்கூடும் என நினைக்கின்றேன், கருப்பு வெள்ளைப்படத்தில் நான் பார்த்த உச்சகட்ட வன்முறை இதில் தான். ஒருவனது தொண்டை அறுந்து இரத்தம் பீரிடுகின்றது, மாடு எரிகின்றது. ஆமாம். உண்மையிலேயே எரித்துள்ளனர்.



வனவிலங்கு தடுப்புச்சட்டம் எல்லாம் இல்லை போலும்.

இந்த சமயம் , ரூப்லவ்விற்கு ஒரு மனநிலை குன்றிய ஊமைப் பெண் நட்பாகின்றாள்.




அவள் மனநிலைக் குறைவை, மாதாக் கோவிலில் வந்து சிறுநீர்கழிவதாக காட்சியமைத்திருக்கின்றார் டைரக்டர். இந்த செர்மானிய/ரஷ்யப் படங்களில் இது ஒன்று - சிறுநீர் கழிவு ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் அது நடக்கும், பாஸ்பைண்டர் படமொன்றில் நிறுத்தி நிதானமாக இது ஒரு கழிவரையில் நடக்கும்.

இந்தப் பெண்னை டார்டார் இனத்தவன் எட்டாவது மனைவியாக, ரூப்லாவ் ஒன்றும் செய்ய இயலாநிலையில் நடக்கும்.




ரூப்லாவிற்கு இது மேலும் மனவிரக்கத்தைக் கொடுக்கும்.

கதை ஒரு கோயில் மணிசெய்பவனிடம் சென்று அடைகின்றது. கோயில் மணிகள் செய்யும் இடத்தில், கொள்ளை நோய் வந்து, அந்த நிபுனர்களை கொள்ள, ஒரு இளைஞன் தனக்கு தன் தந்தை, அந்த நிபுனத்துவத்தை சொல்லிக் கொடுத்திருக்கின்றார் என்று சொல்லி அந்த கோயில் மணி செய்யும் வேலையை வாங்குகின்றான். மிக விஸ்தாரம்மாக அந்த பிரமண்டா கோயில் மணி செய்வது படமாக்கப் பட்டிருக்கின்றது. கொஞ்சம் சஸ்பென்சுடனும் கூட.




அந்த வேலை என்னவானது என்ற சஸ்பென்சையாவது விடலாம் என்று நினைக்கின்றேன்.

படமுடிவில், ரூப்லாவின் நிஜ கலைவேலை கலரில் வருகின்றது



கடைசியாக பட இயக்குனருக்கு பிடித்த, எனக்கு புரியாத, குதிரை படிமத்தின் கடைசி காட்சியும் கலரில்



இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது இதன் காட்சியமைப்பு, காமிரா கோனத்துடன்.

சில இடங்களின் காமிரா காட்சிகளில், புகைப்பட ஒழுங்குடன் மிக அற்புதமாக வந்திருந்தது.



பின் தொடரும் இசையும் கூட. இந்த டைரக்டர், அந்தக்கால கிறிஸ்தவ மத கட்டுப்பாடல் அந்த சமுதாயத்திற்கு தேவை என்று நினைத்தாரா, தேவையில்லை என்று நினைத்தாரா என என்னால் உணரமுடியவில்லை. இந்தப் படத்தில் வரும் விரிவான, யேசுவை சிலுவையில் அறையும் சீன், எதற்காக என என்னால் ஊகிக்கமுடியவில்லை. ரூப்லாவின் மதப்பற்றின் ஆழத்தில் இருக்கும் விஷயமா எனவும் யோசிக்கலாம். பாகன் வழிபாட்டுமுறையை எந்த நோக்கில் பார்த்தார் என்வும் எனக்குத் தெளிவாகவில்லை. . இந்த்ப் படம் 60களின் ஏன் "ரஷ்யாவில்" தடைசெய்யப்பட்டது என உணரமுடிகின்றது. நிறுவண கிறிஸ்தவ மத கோட்பாடுகளை ஸ்டாலினிச கம்யூனிசத்துடன் ஒப்புமைபடுத்தி இந்தப் படத்தில் பார்க்கலாம் எனவும் தோனுகின்றது.

பட அனுபவம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என நிச்சயம் சொல்லலாம்.

0 comments: