Sunday, April 24, 2005

Nine Queens

மழைக் கடவுளைப் பற்றி விரித்து எழுத வேண்டும் என ஆரம்பித்து எனக்கே பிடிக்காததால் குப்பைக்குப் போட்டாயிற்று. அதிலும் அரசியல் என்னையறியாமல் வந்து விழுந்ததால் அப்படியாயிற்று. பொதுவாக பொருள்ரீதியான வளர்ச்சியில் குறைந்த இனத்தவர்களை இப்படி படமாகவோ அல்லது பாடமாகவோ பார்க்கும் போது ஒருவித உயிரியல் பூங்காவிற்குச் சென்று பார்ப்பது போல உணர்வு வராமல் வைத்திருப்பது சிரமமாகிவிடுகின்றது. அதே போல Gods Must Be Cracy என்னும் 80களில் புகழ்பெற்ற படத்தினை சமீபத்தில் வந்த dvdல் திரும்ப பார்த்த போதும் ஒரு வித உணர்வு. முக்கியமாக அந்தப் படத்தில் நடித்திருந்த N!xau என்னும் கலஹாரி பாலைப் பகுதியில் வசித்த அந்த கதாநாயகனின் இறுதி நாட்களில் எடுத்திருந்த அந்த துணைப்படத்தினால். மிகவும் உயர்த்தி எளிமையாகக் காட்டப்பட்ட அந்த கலஹாரி பகுதி மக்களின் உண்மை நடைமுறை வாழ்வின் கஷ்டங்களை பார்க்கும் போது மனசு பதறியது. எலும்புருக்கி நோயால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நாயகனைப் பார்த்தபின் அந்தப் gods 1 &2 படங்களை திரும்பப் பார்ப்பது கஷ்டம் தான். இதே போல ஒரு உணர்வு நம் கிராமங்களைப் பற்றி உயர்வாகவோ அல்லது தாழ்த்தியோ சொல்லும் போதும் உணரமுடியும். கிராமத்தில் இருந்ததால் என்ன மயிரைடா கதை விடுகின்றான் என்றோ இதைச் சொல்ல இவன் எவன் என்றோ. இதை எதற்கு இவ்வளவு இழுவை இழுக்கின்றேன் என்றால், மயன் இனத்தவரின் நரபலி வழக்கத்தை எந்தவித விமர்சனப் போக்கும் இல்லாமல் பார்ப்பது எப்படி என்னும் குழப்படியால். இதனாலேயே "விரித்து" எழுத வேண்டும் என்று நினைத்ததை "இழுத்து" மூடிவிட வேண்டியதாகப் போய் விட்டது. தங்கமணி படம் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். பார்த்து விட்டு என்ன எழுதுகிறார் என்று பார்க்க வேண்டும். ஒன்று நிச்சயம். தமிழகத்து கிராமத்து சாயலில் வளர்ந்தவர்கள் இந்தப் படத்துடன் எளிதில் ஒட்டி விடுவார்கள்.


இந்த வாரப் பதிவிற்குச் செல்லும் முன் மாண்டியின் பயாஸ்கோப்பைப் பற்றி. மிகவும் கஷ்டப்பட்டு செய்கின்றார். சினிமா மீதான காதலினால் என்பது ஆழமாக தெரிகின்றது. வாழ்த்துக்கள். இது அறிமுகப்படுத்தல் என்ற நிலை தாண்டி, படம் பார்த்தவர்கள் படத்தினை ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொள்ளும் ஒரு ·போரமாக மாறினால் நல்லது. தளத்தினை தமிழ் படம் அல்லாததற்கு மட்டும் என்று வைத்திருப்பது நெருடினாலும் ஓகே. தமிழ் சூழலில் எதுவாக இருந்தாலும் அரசியல் விவாதம் வருவது தவிர்க்கக் முடியாது அதை விட முக்கியமாக தவிர்க்கக் கூடாததானதும் ஒன்று. அந்த விவாதத்திற்கு இது எல்லை இது எல்லைமீறல் என்றெல்லாம் கோடும் போட முடியாது போடவும் கூடாது. அந்த வகையில் இந்த ஆட்டமே வேண்டாம் என்று மொத்தமாக விலக்கிக் கொள்வதும் நல்லதே. இது சினிமா என்றில்லாம் தமிழ் சூழல் பற்றிய எந்தவொரு புலமாக இருந்தாலும் இது தான் கதி. ஆட்டம் போட்டவனும், ஆட்டம் போடுகிறவனும், ஆட்டத்தில் மிதி வாங்குபவனும் , திரும்ப மிதி கொடுப்பவனும் களைத்து வீழும் போது மத்ததைப் பார்த்துக் கொள்ளலாம். அந்தச் சுழலை அவ்வளவு சீக்கரம் நமக்கு அவசரம் என்று மூடி முழுக்கவும் கூடாது முடியவும் முடியாது.

சற்று உலர்ந்த படங்களில் இருந்து மாறுதலாக இந்த முறை படங்கள். மீண்டும் ஸ்பாயிலர் அலர்ட் ( Nine Queens)

Nine Queens என்னும் அர்ஜெண்டின தேசத்து ஸ்பானிஸ் மொழிப் படம்.
என்னைப் பார்க்க வந்த நண்பர் netflixl இருந்து வந்திருந்த மோட்டார் சைக்கிள் டைரியையும், All about mother , seinfield 1 & 2 season வட்டுகளைப் பார்த்து விட்டு இதெல்லாம் சரிப்படாது வாருங்கள் பிளாக்பஸ்டர் போய் புதுப் படம் உறுவலாம் என்றார். போய்ப் பார்த்தால் ocean 12 ஒன்றும் இல்லை. அவரிடம் சொன்னேன் இதே போல் ஒரு களவாணிப் படம் வைத்திருக்கின்றேன். இலுப்பைப் பூப் சர்க்கரை போல பார்க்கலாம் வேறே ஒன்னும் எடுக்க வேண்டாம் என்று வெளியே வந்தோம். பிளாக்பஸ்டர் மீது அந்தளவு வெறுப்பு. அந்தளவுக்கு பைன் கட்டியிருக்கின்றேன். இந்த களவாணிகளைப் பற்றிய படம் என்றாலே ஒரு தனி சுவாரஸ்யம் உண்டு. திறமையான களவாணிகள், அவர்களது வீழாத திட்டங்கள், எதிரியாக இருப்பது ஒரு பெருங்களவானி, எவன் முதுகில் எவன் கை எனத் தெரியாமலேயே கடைசியில் யாரும் எதிர்பாராத திருப்பம். இவை தான் இந்த வகைக் கதைகளின் மூலாதாரங்கள். நான் பார்க்க ஆரம்பித்த இந்த வகை களவாணிப்படங்களின் தொடக்கம் குரு. அதற்கு பின் ஏகப்பட்ட களவாணிப்படங்கள் பல படங்கள் நினைவிலேயே இல்லை. சமீப காலங்களில் பார்த்தது என்றால் Spanish prisioner, family business(இது காமெடி என்றாலும்), entrapment, thomas crown affair(படு சூடான படம்), Heist, Score, Italian Job, Ocean 11 போன்ற படங்கள். எல்லாம் ஒரு பலமான களவானியை எதிர்த்து பல கூட்டுக் களவானிகள் சேர்ந்து ஒரு நல்ல வித திட்டம் போட்டு ஏகப்பட்ட விளையாட்டுச் சாமான்களைக் காட்டி பார்ப்பவர்களை அசத்தி, ஒரு சில கால் உறுவல்களை மீறி, ஒரு "நல்ல" களவானி தனியாகவோ கூட்டணியோடோ ஜெயிப்பான். Nine Queensம் ஒரு களவாணிப் படம் தான். ஆனாலும் அந்தப் படங்களில் இராத ஒரு ·ப்ரஸ்னெஸ். அது தான் என்னை முதலில் கவர்ந்தது. பல கோடி புரளும் தமிழ் திரையுலகில் எளிதாக ஆங்கில பட கேசட்டுகளை வைத்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பிக்க பெத்த பேரு கொண்ட இயக்கினர்களே /கலைஞர்களே கூசாமல் இருக்கும் போது, நம்முடைய பொருளாதார நிலையிலேயே இருக்கும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளிலிருந்து வரும் ஹாலிவுட்டையே திரும்ப வைக்கும் படங்கள் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை. ஆமாம் இந்தப் படத்தையும் ஹாலிவுட் பேரம் பேசிக் கொண்டிருக்கிறதாம். இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சன் டீவியில் ஜேஜே ஒடிக் கொண்டிருக்கின்றது. serendipityயும் நினைவில் நிற்கின்றது. தமிழ் சினிமாவில் ஒரிஜினாலிட்டி இசையிலும் , காமெடி டிராக்கிலும் தான்
இுக்கும் போலிருக்கு.

இரண்டு களவாணிகள் சேர்ந்து ஒரு ஊரை விட்டு விரட்டப்படும் நிலையில் இருக்கும் சல்வந்தனை எப்படி கொள்ளையடிக்கப் போகின்றார்கள் என்பது தான் கதையின் பொது tagline. ஏகப்பட்ட களவானிப் படங்களைப் பார்த்தவர்கள் முடிவை ஓரளவிற்கு கணித்தாலும் ( அல்லது கணித்தாக சொல்லிக் கொண்டாலும்), கதையின்
ஓட்டத்தில் தான் முன்னால் கனித்ததை விட்டு சற்று நேரமாவது விலகியிருப்பார்கள். கதை வேற்று மொழியில் இருந்தாலும் படத்தின் வேகமும் திருப்பங்களும் படம் பார்ப்பவர்களையும் கூட இழுத்தது. வேறு வழியில்லாமல(?) கூட பார்த்த நண்பரும் ஓரிரு இடங்களில் "அட" போட்டார். எனக்கும் உற்சாகமாகி விட்டது.

ஜூவான் என்னும் குழந்தை முக களவானி ஒரு பெட்டிக்கடையில் கைவித்தை காண்பிக்கின்றான். மாட்டியும் கொள்ளுகின்றான். அவனை மார்கோஸ் என்னும் களவாணி காப்பாற்றி அழைத்துச் செல்கின்றான்.
மார்கோஸ் ஒரு திட்டம் வைத்திருக்கின்றான் ஆனால் அவனுக்கு ஒரு கூட்டுக் களவானி தேவை. சில ஜேப்படி வித்தைகளைக் காட்டி ஜூ£வானை அசத்தப் பார்க்கின்றான். ஜூவானுக்கும் அவசர பணமுடை. அவன் தந்தை ஜெயிலில். ஒரு ஜட்ஜுக்கு லஞ்சம் கொடுத்து தந்தையை மீட்க வேண்டும். முக்கால் வாசி கைவசம் இருக்கின்றது மீதி தேவை. அதுவும் உடனடியாக. ஜுவானும் ஓரிரு சில்பாஸ் வேலை செய்து மார்கோஸ¤க்கு தன் கையிலும் வேலை இருக்கின்றது எனக் காட்டுகின்றான். இப்படியே இருவருக்கும் ஒரு அன்னியோன்யம் ஏற்படுகின்றது. மார்கோஸ்ஸ¤க்கு அவனது ஹோட்டலில் வேலை செய்யும் தங்கையிடம் இருந்து அழைப்பு. அவளது தங்கையோ அவனிடம் எரிந்து விழுகின்றாள்.
மார்க்கோஸ் அவளையும் குடும்பத்தையும் ஏமாற்றிவிட்டதாக சொல்கின்றாள். கடைசி தம்பியோ மார்க்கேஸை தலையில் வைத்து கொண்டாடுகின்றான். அவனது தங்கை, அவனது முன்னாள் கூட்டுக்களவானி அவசரமாக அழைத்திருக்கின்றான் ஆனால் நோயுடன் இங்கே வந்து கிடக்கின்றான், சீக்கிரம் அவனைப் பார்த்து விட்டு வெளியேறிடு எனக் கடுப்படிக்கின்றாள். பழைய கூட்டாளி வைத்திருப்பதோ ஒரு ஸ்கீம். போர்ஜெரி செய்யப்பட்ட, 9 ராணிகள் என்னும் கிடைத்தற்கரிய ஸ்டாம்ப். அதை வாங்கக் கூடிய ஆளும் அந்த ஹோட்டல் விருந்தாளி. பழைய கூட்டாளிக்கு தேவை ஒரு விற்பனை ஆள். மார்க்கோஸ¤க்கும் ஜூவானுக்கும் ஒரு வாய்ப்பு. இது தான் சாக்கென்று பழைய கூட்டாளியை 10-90% பேரத்தில் நெருக்கி வாய்ப்பை பெருகின்றான் மார்கோஸ். இது வரை நடந்தது தான் எளிதான விடயம். இதற்குப் பின் மார்க்கோஸ¤க்கும் ஜூவானுக்கும் நடப்பதெல்லாம் இழப்பும் கூடவே அதிக பலனடிக்கும் வாய்ப்பும் அதனுடன ்கூடவே இருக்கும் அதிக ரிஸ்க்கும். ரிஸ்கில் சம்பந்தப்பட கதாபாத்திரங்களும் அதிக.மாகின்றனர் விட்டதைப் பிடி விட்டதைப் பிடி எனப் போய்க் கொண்டே இருக்கும் போது கதா பாத்திரங்களுக்கு இடையேயான மனோரீதியான திருகுகளும் அதிகரிக்கின்றது. இவனும் அவனும் திருடனா இல்லை இவன்களுக்கும் ஆப்பு போடுகிறவன் இவனா, அய்யய்யோ எல்லாத்தையும் இவள் போட்டுவிடுவாள் போலிருக்கே என விறுவிறுப்பு எந்தவித உபகரண விளையாட்டுகளும், வன்முறைகளும் இல்லாமலே.



சிலப் படம் பார்த்தவுடன் அப்பாடி முடிந்ததா என இருக்கும், சில முடிந்தவுடவுன் எதோ ஒன்று நெருடும் அல்லது ஏதோ ஒரு சகிக்கமுடியாத உணர்வை மிச்சம் வைக்கும். சில முடிந்தவுடன் சில நாட்கள் மனதில் நிற்கும் அசலாடும். சில முடிந்தவுடன் ஒரு புன்முறுவல் பூக்க வைக்கவும். இது அப்படி பூக்க வைத்தது. அதையெல்லாம் விட எனக்கு நிம்மதி என் நண்பர் ரசித்ததும் தான்.


மேலும் படிக்க

Wednesday, April 13, 2005

Chac - Rain God

போன வாரமே எழுத நினைத்த படம் சாக்-மழைக் கடவுள்(CHAC-Rain God). இதைத் தங்கமணியின் இந்தப் பதிவிற்கு இசைவான படம் என்றும் குறித்திருந்தேன். ஞாயிற்றுக் கிழமை டைகர் வுட்ஸ் என்னும் அற்புதமான கோல்· ஆட்டக்காரணின் ஆட்டத்தில் ரசித்து பதிவு இரண்டாம் பட்சமாகிவிட்டது. பெரியோரை வியத்தலும் இலமேயில் தனிப்பட்ட அளவில் பாக்கியிருப்பது அற்புதமான விளையாட்டக்காரர்கள் மட்டும் தான். சரி இதை நீட்டிப்பது இந்த வலைப் பதிவிற்கு நியாயமாக இருக்காது. கடந்த இரண்டு நாட்களாக கடுமையான சுரம். குடும்பமே சுரத்தில் வீழ்வது இது தான் எனக்கு முதன் முறை.இரண்டாம் நாளான இன்று இதை எழுத சற்று தெம்பு வந்துள்ளது. சாக்- மழைக் கடவுள் பற்றிய இந்தப் பதிவு இந்தப் படத்தை பார்க்காதவர்களின் கன்னி சுவாரசியத்தை கண்டிப்பாகக் கெடுக்கும் வாய்பு சற்று அதிகமாகவே உள்ளது. ஆகவே உள்ளே செல்லும் முன் யோசித்துச் செல்லுங்கள். நானாக இருந்தால் நுழைய மாட்டேன்.

தென்/மெரிக்க/மத்திய அமெரிக்க தொல்குடி இனமான மயன் இனத்தவரைப் பற்றிய படம். அஸ்டெக் மற்றும் மயன் இனத்தவரைப் பற்றி முதல்முதலில் அறிந்தது முத்து காமிக்ஸில் தான் என நினைக்கின்றேன் (இல்லை குழந்தைகள் கலைக்களஞ்சியம் என்னும் அற்புதமான புத்தகத்திலிருந்தா?). இந்துப் புராணக்கதைகளில் வரும் நகரங்களை நிர்மானிக்கும் மயன் என்பவனுக்கும் இந்த இனத்தவருக்கும் உள்ள பெயர்ப் பொருத்தத்தை அந்த அரை டிரௌசர் காலத்தில் யோசித்து, அதன் விளைவாகவே இந்த இனத்தவர் மனிதில் உறைந்தனர். அதன் பிறகு இந்த இனத்தவரைப் பற்றிய எந்தச் செய்தியிருந்தாலும் படித்து விடுவது வழக்கமானது.
அந்த வகையில் தென்/மத்திய அமெரிக்க தொல்குடிகள், ஸ்பனிஸ் வருகை, அமேசான் நதி, அதைச் சுற்றியுள்ள மர்மப் புனைக்கதைகள் என ஒரு சுவாரசியம் ஒட்டிக் கொண்டது. அந்த ஆர்வத்தில் போன வருடம் பார்த்த படம் aquirre - wrath of God. அதன் அனுபவத் தொடர்பினால் கிடைத்தது தான் இந்தப் படம். சில மாதங்களுக்கு முன் மயன் இனத்தைவரைப் பற்றி நேஷனல் ஜியாகிரபியில் ஒரு கட்டுரை வந்தது இந்த இனத்தவரின் நரபலி வழக்கத்தைப் பற்றிய ஒரு இளம் மம்மியின் படத்துடன் கூடிய கட்டுரை அது. நரபலி இவர்களின் முக்கியமான வழிபாடுமுறை அதுவும் மழை பெய்யும் கடவுளுக்கான என்ற அந்தச் செய்தி தான் இந்தப் படத்தப் பார்த்தவுடன் அள்ளத் தூண்டிய விடயம். வெள்ளை இனத்தவரின் "வாசம்" பட்டு தன் சுயப் பண்பாட்டை தன்னையறிமால் இழக்கும் ஒரு இனத்தவரைப் பற்றிய படம் இது. தீதும் நன்றும் பிறர் தர வார என்னும் படியாக இந்தப் படத்தில் ஒரு வெள்ளைக் காரனும் கிடையாது( ஒரு விதிவிலக்கைத் தவிர, அந்த விதிவிலக்கு என்ன என்பது நல்ல டிரிவியா ( trivia) கேள்வி.

படம் Popul Vuh என்னும் மயன் இனத்தவரின் புனித புத்தகத்தை ஆதாரமாகக் கொள்வதாக சொல்லி ஆரம்பிக்கின்றது. பொபல் வூவும் கிறிஸ்தவ மத வெறியர்களின் மாற்று மத இலக்கியங்களை எரிப்பிலிருந்து தப்பிய ஒன்று. அதை மீட்டவரும் ஒரு ஸ்பானிஸ் கிறிஸ்தவ மத குருமார் தான் என்னும் போது ஏனோ தமிழில் வேத குருமார்களால் எரிக்கப்பட்ட காப்பியங்களும் பின் அதன் மிச்ச மீதியை காப்பாற்றிய அதே வேதப் பாரம்பரியத்தில் வந்த உவேசாவும் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பொபல் வூ கதை இரு இரட்டையருக்கும் பாதாள நகரத்து க்ஷ¢பால்பன்ஸ் என்னும் கடவுளருக்கும் நடக்கும் போட்டியைப் பற்றியது எனச் சொல்லி கதை ஆரம்பமாகின்றது. கடவுளுடன் போட்டி போடலாம், கடவுளை வாயில் வந்ததைச் சொல்லித் திட்டலாம், கடவுளை நண்பனாக கருதி தோளில் கை போடலாம் ஏன் கடவுளை சாத்தானாகக் கூடிக் கருதி அவனது "உக்கிரத்தை" பலி கொடுப்பதன் மூலம் தணிக்கலாம் என்னும் கருத்தாக்கம், தமிழகத்து தொல்குடி பழக்கங்களுடன் அதிசயமாக இணைகின்றது. படம் ஒரு சிறு கிராமத்தில் ஆரம்பிக்கின்றது. எந்தக் காலம் என்பதெல்லாம் தெரிய அவசியமில்லாத வகையில் ஒரு பொருள் ரீதியான வளர்சியில் உறைந்து போன கால கட்டமாக எனக் கூடச் சொல்லலாம். ஒரு குறி சொல்லுபவனைச் சுற்றி அந்த கிராமத்து பெரிசுகள், ஆண்கள் பெண்கள் எனக் கூடி நிற்கின்றனர். எபோழுது மழை வரும், விளைச்சலை ஆரம்பிக்கலாம் என்பது தான் கேள்வி. குறி சொல்லுபவனும் சோழியை உருட்டி விட்டு அந்த மக்களிடம் சாரயம் கேட்கின்றான். அத்ற்கு முன்னமேயே நிறைகுடமாக இருக்கின்றான்.மழை வரும் விளைச்சலை ஆரம்பிக்கலாம் எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லி சாராயத்துக்கு ஆளாக பரக்கின்றான். கிராமத்து தலைவன் தனது அருகில் நிற்கும் ஒருவனைப் பார்க்க அவன் பின் பக்கமாக சென்று தன் மனைவியிடம் வீட்டிற்குப் போய் சாராயம் எடுத்து வா என்கிறான். உடனே அவள் " ஏன் நம்ப வீட்டு சாராயம் தான் இதுக்கு தரணுமா". அப்படியே இந்தக் காட்சியை தமிழ் சூழலில் பொருத்தலாம். அந்தச் சூழலில் வரும் முக பாவங்களை எங்கே நேரில் பார்த்தது போல இருந்தது சில்லிட வைத்தது. அந்தக் கூட்டத்தை மறைவில் இருந்து ஒரு ஊமைச் சிறுவனும் பார்க்க அவனது தந்தையும் கூட்டத்தினரும் சின்ன பையன் எல்லாம் இங்கே வரக்கூடாது ஓடு எனச் சொல்லி விரட்டுகிறார்கள். துடுக்குச் சிறுவனும் ஓடி மறைகின்றான். போதையேறிய குறி சொல்லுபவனும் அப்படியே மயங்கிச் சரிகின்றான் குறியேதும் விளக்காமல். மழையை நம்பிப் பிழைக்கும், காலத்தால் உறையப்பட்ட சமுதாயம் அந்த மழையை வரவழைக்க போடும் யுத்திகள் தான் என்ன என்ன. கன்னிப் பெண்ணை நிர்வாணமாக சுற்றி வர வைத்தால்( கிழக்கே போகும் ரயில் ஞாபகம் இருக்கா?)
, கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் நடத்தினால் எனவெல்லாம் போகும் தமிழ்ச் சமுதாயம் போலவே தடுமாறிய மத்திய அமெரிக்க சமூகத்தை எப்படிப் புரிந்து கொள்வது?. மயன் இனத்தவரின் வீழ்ச்சியை இந்தப் புத்தகம் கோடு காட்டுகின்றது எனப் படித்தேன். படிக்க வேண்டும் என லிஸ்டில் உள்ள புத்தகம் Collapse: How Societies Choose to Fail or Succeed. தண்ணிர் பற்றிய பாதுகாப்பு உணர்ச்சி கொஞ்சமும் இல்லாத, இந்தியா சார்ந்த தமிழ்ச் சமுதாயம் தண்ணிர் வறட்சியால் வீழப்போகின்றது என ஒரு நெடுங்கவலை எனக்குண்டு.


கிராமத்து மக்களுக்கு கவலை அதிகரிக்கின்றது. திரும்பவும் கூடிப் பேசுகின்றனர். அந்தக் கிராமத்து தலைவன் வெள்ளையர் வாசம் பட்டவன். டார்ச் லைட்டும் வின்செஸ்டரும் வைத்திருப்பதோடு இல்லாமல், வானிலையை முன்கூட்டியே அறியமுடியும் என தெரிந்து வைத்துள்ளவன். தன் கிராமத்து பண்பாடுகளின் மீதான ஒரு கலக்கம் கொண்டவனாக இருக்கின்றான். தனது இன சுய பண்பாட்டை முழுவதும் மீற முடியாத, அதே சமயம் முழுவது ஏற்றுக் கொள்ளவும் முடியாத பாத்திரமாகி இந்தப் படத்திற்கு ஒரு வில்லன் போன்ற ஒரு அந்தஸ்தை பெறுகின்றான். கிராமத்து முதியவர்களின் பேச்சைக் கேட்டு , மலையில் குடியிருக்கும், "பழைய வழிகளை" முழுவதும் உள்வாங்கி ஒரு சித்த நிலையில் இருக்கும் சாமியாடியைச் சந்தித்து அவனை சாக் எனப்படும் மழைக்கடவுளை வேண்டுவதற்கு அழைத்து வருவதற்கு புறப்படுகின்றான். காடு மலையெல்லாம் ஏறி சாமியாடியைச் சந்திக்கின்றனர். கிராமத்து தலைவனது நம்பிக்கையின்மை சாமியாடிக்கு தெரிந்து விடுகின்றது. சாமியாடி வேண்டுதலுக்கு இணங்கி, கிராமத்தினருடன் புறப்படுகின்றான். ஆனால் கிராமத்து தலைவனுக்கு எரிச்சலூட்டும் வண்ணம், வேறொர் சுத்துப் பாதையில் கிராமத்துக்ச் செல்கின்றான். ஒரு இடத்தில் தலைவனது நம்பிக்கையின்மையின் காரணமாக சாமியாடியையும் அவனது கிராமத்தினரையும் , தலைவனும் மற்றும் ஓரிருவரும் பிரிந்து விடுகின்றனர். சாமியாடி முதலில் கிராமத்துக்ச் சென்று வேண்டுதலுக்கான நடவடிக்கையில் இறங்குகின்றான். தலைவன் தூரத்தில் இருந்து பார்க்கும் படி ஆகின்றது. வேண்டுதலின் உக்கிரத்தில் மழை வருவது போல் போக்கு காட்டி மழை வராமல் ஏமாற்றி விடுகின்றது. அதிர்ச்சி அடைந்த சாமியாடி இன்னமும் இரண்டு நாட்களில் மழை வரும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகின்றான். இதற்கிடையில் சாமியாடியின் அபிமானத்தைப் பெற்ற ஊமைச் சிறுவன் வெயில் கொடுமையில் மயக்கம் அடைந்து பின் இறந்து விடுகின்றான். அவனது தாயின் ஒப்பாரி, அப்படியே தமிழ்நாட்டு ஒப்பாரியில் வரும் வசனத்தை ஒத்து வருவது இன்னமும் ஆச்சர்யம். இந்தச் சாவை சாமியாடியின் மீது போட்ட கிராமத்து தலைவனும் சிறுவனின் தந்தையும் , பழி வாங்க வேண்டும் என புறப்படுகின்றனர். புறப்பட்டவர் என்ன செய்கின்றார்கள், சாமியாடி என்னவானான், மழை வந்ததா போன்ற கொஞ்ச நஞ்ச சுவார்சியத்தை மிச்சம் வைக்கலாம் என்னும் ஒரு எண்ணம்.

இந்த குறுந்தகட்டில் இயக்குனரின் பார்வையிலும் படம் பார்க்கலாம். மிக எளிமையாக விளக்கம் சொல்கின்றார். முழுவதும் பார்க்காமல் சில இடங்களை மட்டும் தெளிவிற்க்காக பார்த்தேன். ஒரு முக்கியமான இடத்தில் விளக்கமும் சொல்லவில்லை, கதாபாத்திரங்கள் பேசுவது சப் டைட்டிலில்லும் வரவில்லை. இந்தப் படத்தைப் பற்றிய விவரங்கள் பல இருக்கின்றன இணையத்தில். எனக்கு அதிர்சியாக இருந்த செய்தி இதில் நடித்தவர்கள் எவரும் தொழில்முறை நடிகர்கள் அல்ல. அனைவரும் இந்த படம் எடுத்த இடத்தில் இருப்பவர்கள். இந்தப் படம் வந்தது 74ல். 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் ஒரே பிரதி கிடைக்கப் பட்டு டிஜிட்டல் செய்யப்பட்டது. மேலும் இந்த இடத்தில் இருக்கும் இந்தப் படத்தினை கூடவே இந்த படமெடுத்த சூழலையும் கூட்டி இணைத்து செய்யப்பட்ட விவாதம் நல்ல ஒரு புரிதலைத் தரலாம். இந்தப் படத்தைப் பற்றி மேலும் விரித்து எழுத ஆவல் ஆனால் சுரம் போதும் போதும் என்கின்றது. நேரம் கிடைத்தால் விரித்து இந்தப் படத்தின் "பிரதி"யை நான் எப்படி பார்த்தேன் என்று எழுத வேண்டும்.


மேலும் படிக்க

Sunday, April 03, 2005

Donnie darko, Manic & 7G R Colony

போன இரண்டு வாரங்களில் குறித்து வைத்துக் கொள்ள நினைத்த படங்கள் நாலு. ஒரு படத்திற்கு ஒரு பதிவு தான் சரியான அளவு. எப்படி நேரத்தையும் முனைப்பையும் சரி பண்ணுவது என்பது இன்னமும் கைவரப்படாத விடயமாக இருக்கின்றது. இந்தப் பதிவிற்கு முதலாவதாக பார்க்க இருப்பவர்களின் அனுபவத்தை சிதைக்கக் கூடும். (ஸ்பாயிலர் அலர்ட்) donnie darko, Manic & 7G R Colony

முதலாவது டோனி டார்க்கோ என்னும் படம். என் முதல் பதிவில் சொன்னது போல படம் பார்ப்பவர்களின் கவனக்குறைவு, ஞாபகத்திறன் போன்றவற்றை குறிவைத்து அடிக்கும் படம்.
இந்த வகைப்படங்கள் "முதல்" தடவை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் பார்த்து முடித்தபின் முழுவதும் அனுபவிக்க முடியாத எதோ ஒன்று குறைவான அனுபவம் தான் எனக்கு கிடைக்கும். இரண்டாம் தடவை பார்த்தாக வேண்டிய கட்டாயம் கடுப்பையும் உள்ளூர ஒரு தன்னிரக்கத்தையும் கொடுக்கும். இருந்தாலும் ஒட்டு மொத்தமாக இந்த வகைப் படங்களைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான். எனக்கு படமோ புத்தகமோ எவர் விளக்கமும் இல்லாமல் அனுபவிப்பது தான் பிடித்தாக இருக்கின்றது. அந்த வகையில் இந்த பதிவின் மீதே எனக்கு ஒரு வருத்தமும் உண்டு. இது எவர் அனுபவத்தையும் கெடுக்கக் கூடாது என்பதாக. தமிழ்மணத்தில் பதியும் எண்ணமும் அதனாலேயே இல்லை. என் முதல் வாசிப்பில் இந்தப் படம் ஒரு சாதரணமான அதே சமயம் புத்திசாலித்தனமான படமாக பட்டது. மாத்திரைகள் மூலம் தன் மனநிலையை சீராக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சற்று பித்துசாலித்தனமான ( eccentricக்கை இப்படிக் குறிக்கலாமா?) பையனின் ஒரு நாள் இரவில் அவன் படுக்கையறையில் ஏதோ ஒரு விமான என்சின் வந்து விழும் அந்த கணத்திற்கு சற்று முன்பாக படத் திரைக்கதை ஒரு தொடுகோட்டு ( tangential) உலகத்திற்குச் சென்று உலவி விட்டு, திரும்ப வந்து நேர் உலகிற்கு வந்து இணைகின்றது. நேர் உலகில் நடக்கும், நடந்த, நடக்கப் போகும் அல்லது நடக்காத விடயங்கள் தொடுகோட்டு உலகில் வேறொரு கால வரிசையில் நடப்பதாக காட்டப்படுகின்றது. ஒரு சிறிய பணக்காரத்தனமான இடம், தாய் தந்தை அக்கா அண்ணன் தங்கை உறவு, பள்ளிக் கூடம், கட்டுப்பெட்டித்தனமான அல்லது அதற்கு தலைகீழ் எதிரான ஆசிரியர்கள், கட்டுப ்பெட்டித்தனமான தலமை ஆசிரியர், வேலைக்காகாத வண்டி உள்அழுக்குடன் இருந்தாலும் ஊருக்கு உபதேசிகள், தனிமையாக்கப்பட்ட பித்துசாலிகள் என கதை ஒரு ஒழுங்கைக் கொண்டிருந்தாலும் இந்த தொடுகோட்டு உலகம், நேரமில்லா பயணம் என ஒரு மேல்பூச்சை ஒரு கவன ஈர்ப்பாக வைத்திருப்பதாக பட்டது. அது தான் இந்தப் படத்திற்கு ஒருவகைக் குழுவினர் சார்ந்த ( cult ) படமாக மாற்றியது போலும். இந்தப் படத்தை இரண்டாவது முறை, இதை இயக்கினவர் பார்வையில் பார்க்கும் உத்தேசம் உள்ளது. (எப்போழுது என்று தான் தெரியவில்லை). அப்படிப் பார்த்த பின் வேறுவகை அனுபவங்களை கொடுக்கக் கூடிய் சாத்தியக் கூறு இந்தப் படத்திற்கு உண்டு என மட்டும் சொல்லலாம். பொதுவாக "சினிமா" ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.


அடுத்த படம் டான் சீடல் நடித்த மேனிக் என்னும் படம். ஹாலிவுட் பட நடிகர்களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என் கவனத்தை என்னையறியாமலே கவர்வார்கள். சிறு வேடத்தில் இருந்தாலும். அது அரசியல்ரீதியாக என்றெல்லாம் இல்லாமல் என்னுள் இயற்கையாக வரும் ஒன்று. என்னை ஒரு கருப்பனாக பார்த்துக் கொள்வது ஒரு ஆசியனாக அல்லது இந்தியனாக பார்ப்பதை விட இயல்பாக நெருக்கமாக உணர்கின்றேன். சிறு வயதில் மேற்கிந்திய வீரர் ரிச்சர்ட்ஸ் கவர்ந்த அளவு என்னை கவாஸ்கரோ, அமர்நாத்தோ, வெங்சர்க்காரோ கவர்ந்ததில்லை. சமீபங்களில் கூட லாரா என்னைக் கவர்ந்ததை விட குறைவாகத்தான் டெண்டுல்கர் இழுக்கின்றார். அந்த வகையில் இவர் என்னில் mission to mars காலத்தில் என் கன்ணில் பட்டது ஆச்சர்யமில்லை. பார்த்தால் அதற்கும் முன்பாக Devil in a Blue Dress, Things to Do in Denver When You're Dead என்ற படங்களில் நடித்திருப்பதாக கூகுள் சொல்கின்றது. என்ன வேடம் என எனக்கு மறந்து விட்டது. டிராபிக் எல்லோருக்கும் தெரிந்த படம். இவர் இந்த வருட சிறந்த நடிகர் பட்டியலில் வந்தது முதலில் மகிழ்ச்சி அதிர்ச்சியாக இருந்தது. ஹோட்டல் ருவாண்டா என்னால் பார்க்க முடியாத கதை கொண்ட படமாக இருந்தாலும், எப்படியாவது மனதைத் தேற்றி பார்ப்பேன் என நினைக்கின்றேன். சரி இந்தப் படத்திற்கு வருவோம். ஒரு டிஜிடல் வீடியோ காமெராவைக் கொண்டு "கையால்" எடுக்கப்பட்ட படம் என்னும் எண்ணத்தைக் கொடுக்கும் அளவிற்க்கு ஒரு அசைவு உள்ளது இந்தப் படத்தில். ஒரு விவரணப்படத் தோரணைக்காக போலும். படம் ஒரு மனநிலை மையத்தில் அமைந்த கதை. டான், இந்த மையத்தின் டாக்டர். இந்த மையத்தில் பல்வேறு நோயாளிகள். ஆத்திர வசப்படும் ஒரு இளைஞன், குற்றவியல் தண்டனைக்காக இந்த மையத்திற்கு வருவதிலிருந்து கதை ஆரம்பம். ஆத்திரம் என்னும் உணர்வை ேற்கத்தியர்களும் தமிழர்களும் வேறு வேறு வகையில் கொள்கிறார்ளோ எனப்படுகின்றது. தமிழில் இருக்கும் ஆத்திர உணர்வுகள், அதன் வெளிப்பாடுகள், மேற்கத்தியருக்கு ஒரு வியாதியாகப் பார்க்கலாமோ என அடிக்கடி தோன்றும். இந்தப்படம் பார்க்கும் போது என்னுடைய ஆத்திர அளவுகளும் நினைவு வந்து அது நோயாக இருக்குமோ என சந்தேகிக்க வைத்ததென்னவோ உண்மை. தமிழ் சூழலில் "ஆத்திரக் குணம்" ஒரு புகழ்சியான ஒன்றாக கருதப்படுகின்றதா என தெரியவில்லை. கண்டாமேனிக்கு ஆத்திரப்படுவன் தான் பல படங்களின் கதாநாயகன். அப்படிப்பட்ட ஒருவன் தான் இந்தப் படத்தில் நோயாளிக் கதாநாயகன். ஒரு பாலியலுக்கு உள்ளான இளைஞி, ஆத்திரத்தில் தாயிடம் சண்டை போட்டு மண்டையை உடைத்த ஒரு கோத்திக் இளைஞி, ஜெகில் ஹைட் நோயுள்ள அதாவது இரட்டை மன நிலை உள்ள கூடிய விரைவில் ( ?) விடுதலையாகக் கூடிய பணக்கார இளைஞன், பெடொபைளான வளர்ப்புத் தந்தையிடம் வளர்ந்த, படுக்கையைவிட்டு எழுந்திருக்காத இளைஞன், அனைவரையும் வம்புக்கு இழுக்கும் தடியான வெள்ளை இளைஞன் என படம் இவர்களை, இவர்களுக்கு இடையே நடக்கும் நட்பு மற்றும் விரோதங்களை பதிவு வெறுமன செய்கின்றது. வேறுவகையில் இந்தப் படம் ஏனோ என்னைத் தொடவில்லை.

இந்தப் பதிவுக்கு கடைசியான படம் 7G ரெயின்போ காலனி. "தீர்ப்பை மாத்திச் சொல்லுங்கடா" என்னும் பரம்பரைப் படங்களுக்கும், "நீங்க நல்லவரா கெட்டவரா" என்னும் போலி வெட்டி பந்தாப் படங்களுக்கும் இடையில் ரௌடி கதாநாயகன் + தேவதை கதாநாயகி என்ற ஒத்தை கிளிசேவைத் தவிர வேறுவித கிளிசேக்கள் எதுவும் உறுத்தாத நல்ல இசையுடன் கூடிய ஒரு படம். ஆட்டோகிராப் படம் கூட பல இடத்தில் உறுத்திய அளவு இதில் இல்லை. ரௌடி கதாநாயகன், தேவதை கதாநாயகி காம்பினேசனை என் நிஜ வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட பார்த்திருக்கின்றேன். அம்மா கார் ஜன்னலை தொங்கிக்கொண்டு கத்தியும் கேட்காமல் காரில் ஏறிப் பறந்த டாக்டருக்கு படித்த பெண், பின் சிகரெட் சூட்டை கையில் வாங்கி மௌனமாக அழுததை பார்த்திருக்கின்றேன். அப்படி இருக்கும் போது ரௌடி தேவதை காம்பினேசனை கிளிசே என்பது கூட ஒருவகை கிளிசே தான் போலும். ஸ்பானிஸ் மற்றும் ஈராணியப் படங்கள் போல ஒரு சில தமிழ்ப்படங்களாவது வருவதற்கு ரொம்ப நாள் காத்திருக்க தேவையில்லை எனும் நம்பிக்கையை இந்தப் படம் தருகின்றது.

தங்கமணியின் இந்தப் பதிவிற்கு இசைவான ஒரு தென்னமெரிக்கப் படம் நாலைந்து நாள் முன்னால் தான் பார்த்தேன். அதனை அடுத்த வாரம் தான் எழுத வேண்டும்.


மேலும் படிக்க